2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

சர்வதேச சந்தையில் போட்டியிடும் நாடுகளுக்கு இடையேயான அனுகுமுறை மிகவும் முக்கியம்: றிசாட்

Menaka Mookandi   / 2011 ஜூன் 23 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்சாத் றஹ்மத்துல்லா)

சர்வதேச சந்தையில் போட்டியிடுகின்ற நாடுகளுக்கிடையே பொதுவான அனுகுமுறை மற்றும் கைத்தொழில்களிடையேயான உறவு முறையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததென கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதேபோன்று சிறிதளவாக ஆரம்பிக்கப்பட்ட பங்களாதேஸின் ஆடை தொழில்துறை மூலம் இரு நாடுகளும் நன்மையடைவதால், புரிந்துணர்வுடன் கூடிய இணக்கப்பாடு மிகவும் அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள பங்களாதேஸின் ஏற்றுமதி ஊக்குவிப்பு வலய அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாஹிதுல் இஸ்லாம் மற்றும் பொது முகாமையாளர் அசிசுர் றஹ்மான் ஆகியோர் அமைச்சர் றிசாத் பதியுதீனை ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் வைத்து சந்தித்து கலந்துரையாடிய போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

1978ஆம் ஆண்டு ஆடை ஏற்றுமதியில் பங்களாதேஸ் தம்மை அறிமுகப்படுத்தியது. தற்போதுவரை அத்துறையில் 25 லட்சம் பேர்கள் பணியாற்றுகின்றனர். 2010ஆம் ஆண்டிலும் மற்றும் 2011 ஆம் ஆண்டின் இது வரைக்கும், 14.17 பில்லியன் அமெரிக்க டொலர்களை தைத்த ஆடைகளின் ஏற்றுமதியின் மூலம் பங்களாதேஸ் பெற்றுள்ளது. இது 43 சதவீத வளர்ச்சியாகும்.

பங்களாதேசின் தைத்த ஆடைகள் இந்தியா, ஜப்பான், சீனா, அவுஸ்திரேலியா, கனடா, தென் ஆபிக்கா, பிரேசில் மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் குறைந்த அபிவிருத்தி கொண்ட நாடு என்ற ரீதியில் பங்களாதேஸின் ஏற்றுமதிகளுக்கு விசேட முன்னுரிமையளிக்கப்படுவதாகவும் மேஜர் ஜெனரல் சாஹிதுல் இஸ்லாம் அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் எடுத்துரைத்தார்.

2015ஆம் ஆண்டில் இலங்கை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலக்காகக் கொண்டு செயற்படுவதாகவும் அதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் ஆடை ஏற்றுமதி துறையில் இலங்கை அதிக கூடிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறைந்த செலவில் தரமான ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யலாம் என தாம் நம்புவதாக  கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பங்களாதேஸ் தூதுக்குழுவிடம் தெரிவித்தார்.

ஆடை தயாரிப்புக்குத் தேவையான சில பொருட்களை பங்களாதேஸ் இலங்கையில் இருந்தே பெற்றுவருவதாகவும், புங்களாதேஸ் எற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் ஆண்டொன்றுக்கு ஒரு சதுர அடிக்கு 2.2 டொலர்களையே அறவிடுவதாகவும் பிற நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வரி அறவிடப்படுவதில்லை என்றும் பங்களாதேஸ் எற்றுமதி ஊக்குவிப்பு வலய அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாஹிதுல் இஸ்லாம் மேலும் கூறினார்.

2011ஆம் ஆண்டில் இக்காலப்பகுதி வரையில் இலங்கை ஆடை ஏற்றுமதி உற்சாகமளிப்பதாகவும், இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகை கிடைக்காத போதும் ஆடை உற்பத்தியில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. தெற்காசிய பிராந்தியத்தில்  இலங்கை ஆடை உற்பத்தியில் ஒரு ஸ்திரமான நிலையை அடைவதற்கு விரும்புவதாக எடுத்துரைத்த அமைச்சர், போட்டித் தன்மைக்கு மத்தியில் ஒருமித்த செயற்பாட்டு வடிவம் ஆடைத் துறையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமென்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .