2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

நாச்சியாதீவு குளத்தின் இரு வான்கதவுகள் திறப்பு

A.P.Mathan   / 2011 நவம்பர் 25 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

தொடராகப் பெய்துவரும் அடைமழையின் காரணமாக அநுராதபுர மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன. மல்வத்து ஓயா மற்றும் யான் ஓயா போன்ற ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் வீதிப்போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

நாச்சியாதீவு குளத்தின் நீர் மட்டம் துரிதமாக அதிகரித்து வருவதால் அதன் இரு வான்கதவுகள் இன்று திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் மேலும் உயரலாம் என அஞ்சப்படுகின்றது. திஸாவாவி, நுவரவாவி, மஹகனந்தரவாவி, மஹவிலச்சிவாவி, ஹூருலுவாவி, பதவியாவாவி உள்ளிட்ட பாரிய குளங்களின் நீர்மட்டமும் தொடராக அதிகரித்து வருவதுடன் மழை தொடர்ந்து பெய்தால் அவற்றின் வான் கதவுகளும் திறந்து விடப்படும் என அவற்றுக்குப்பொறுப்பான நீர்ப்பாசன அலுவலர்கள் தெரிவித்தனர். மல்வத்துஓயா பெருக்கெடுத்துள்ளதால் அநுராதபுரம் ஜயந்திமாவத்தையின் பல பகுதிகள் நீரில்மூழ்கியுள்ளதுடன் ஆற்றை அண்மித்த பகுதிக் குடியிருப்புக்களும் நீரில் மூழ்கியுள்ளன.

யான் ஓயா பெருக்கெடுத்துள்ளதால் ஹொரவப்பொத்தானை - அலுத்ஓயா வீதிப்போக்குவரத்து இன்று நண்பகலின் பின் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதனால் கரடிக்குளம், தியதித்தவௌ, பரங்கியாவாடிய, நபடவௌ, நாம்பாகட, புலியங்கடவள, கல்கந்தவௌ, பட்டியாவல, இந்துவௌ உட்பட்ட பல கிராமங்களில் வசிக்கும் ஏழை விவசாயிகளும் பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹொரவப்பொத்தானை குளம் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குளக்கீழான குடியிருப்பாளர்களும் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்டுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X