.jpg)
-எம்.எஸ்.முஸப்பிர்
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹக்கும்புக்கடவள, ஹோங்கஸ்வெவ எனும் பிரசேத்தின் தோட்டம் ஒன்றில் இரகசியமான முறையில் நடாத்திச் செல்லப்பட்ட பாரிய சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை நேற்று வெள்ளிக்கிழமை மாலை முந்தல் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இந்த கசிப்பு உற்பத்தியினை இரகசியமான முறையில் மேற்கொள்வதற்கு வசதியாக அத்தோட்டத்தில் மிருக வளர்ப்பு பண்ணை ஒன்றும் சந்தேக நபரினால் நடாத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடாத்திச் சென்றதாகச் சொல்லப்படும் பிரதான சந்தேக நபரான பெண் ஒருவரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலும் இருவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து முந்தல் பொலிஸாரும் மஹக்கும்புக்கடவள பொலிஸ் காவலரண் அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது சுமார் 60 பெரல்கள் உட்பட கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.