2021 மே 08, சனிக்கிழமை

‘உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஜூன் 14 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கற்பிட்டியில்  உள்ள கரையோர அரச காணிகளை, வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் நேரடியாக தலையிட்டு வரும் பிரதமர் அலுவலகம்,  அந்த நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும்” என, வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், நேற்று (13) தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கற்பிட்டி பிரதேசம் சுற்றுலா பிரதேசமாகும். குறித்த பிரதேசத்தில் உள்ள பெருங்கடல் மற்றும் சிறுகடல் என்றனவற்றுக்கு அருகிலுள்ள நிலங்கள் மற்றும் நில வளங்கள் என்பன,  இங்கு நிரந்தரமாக வசிக்கும் மக்களின் குடியிருப்புக்கும், இறால், மீன் மற்றும் நண்டு வளர்ப்புகளுக்கும் குத்தகைக்கு வழங்குமாறு, முன்னைய அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, அரச காணிகளை 99 வருடங்கள் குத்தகைக்கு வழங்கும் திட்டம் இருந்து வந்தது. ஆனால், இப்போது அத்திட்டம் 35 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சியில், நடைமுறைக்கு மாறாக கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரச காணிகளை, புத்தளம் தேர்தல் தொகுதியில் அல்லது கற்பிட்டி பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு வழங்காமல் கொழும்பு போன்ற வெளிமாட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு  பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிடுவதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

சொந்தப் பிரதேசத்தில் மிகவும் கஷ்டத்துடன் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு அரச காணிகளை வழங்காமல், வெளிமாட்டங்களில் வசித்து வரும் பணம் படைத்தவர்களுக்கு வழங்கப்படுவது  இந்தப் பிரதேச மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் நடவடிக்கையாகும்.

அத்துடன், கற்பிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பெற்றுக்கொண்ட அரச காணிகளை உரியவர்களுக்கு சட்டபூர்வமாக பெற்றுக்கொடுக்காமல்,  வழக்கு தாக்கல் செய்து,  காணிகளை அவர்களிடம் இருந்து மீளவும் பெற்று, வெளிமாட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுவதையும் எங்களால் அவதானிக்க முடிகிறது. இதனையும் நாம் ஒருபோதும் அங்கிகரிக்க முடியாது.

வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு காணி வழங்குவதை பிரதமர் அலுவலகம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X