முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூன் 05 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவெவ தொடுவாப் பிரதேசத்தில் வைத்து, 50 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஐவர், நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் வெல்ல கடற்றொழில் கிராமத்தைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் இவர்களிடமிருந்து முச்சக்கரவண்டிகள் 3 கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சந்தேகநபர்களிடமிருந்து, தரகர் ஒருவர் ஊடாக கஞ்சாவை வாங்குவதற்கு விலை பேசப்பட்டு, வடக்கு தொடுவா பிரதேசத்துக்கு கஞ்சாவைக் கொண்டு வருமாறு, குறித்த சந்தேகநபர்களிடம் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன் பிரகாரம், சந்தேக நபர்கள் அவர்களிடமிருந்த கஞ்சாவை எடுத்துக்கொண்டு மூன்று முச்சக்கர வண்டிகளில் நேற்று முன்தினம் அதிகாலை வேளையில் குறித்த இடத்துக்கு வந்த போது, அங்கு மறைந்திருந்த பொலிஸார் அவர்களைக் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து, மூன்று பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த 50 கிலோவும் 700 கிராமும் எடையுள்ள கேரள கஞ்சா, பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சந்தேக நபர்கள் சிலாபம் கடல் வலயத்தை மையப்படுத்தி, கேரள கஞ்சாவை இந்நாட்டுக்குள் கொண்டு வரும் குழுவின் உறுப்பினர்கள் என்ற விடயத்தை பொலிஸார் அறிந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாரவில பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிரிவர்தன, சிலாபம் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் சுரஞ்ஜித் குமாரபுலி ஆகியோரின் உத்தரவின் பேரில் மாரவில தலைமைய பொலிஸ் பரிசோதகர் எஸ். டி. ஆர். பிரிந்த தலைமையிலான குழுவினரே, இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .