2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ஐ-ஸ்ரீ லங்கா செயற்றிட்டம் வெற்றிகரமாக நிறைவு

Gavitha   / 2016 மார்ச் 29 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா டெலிகொம் தனது ஐ-ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த நிறைவு விழா, நேற்று திங்கட்கிழமை 'வோட்டேர்ஸ் எட்ஜ்' இல் நடைபெற்றது. ஐ-ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் பங்காளர்களான  ZTE மற்றும் Huawei Technologies நிறுவனங்களின் பிரதான நிறைவேற்று அதிகாரிகளான, ஜோன் லீ, வான்ங்சுன்லி ஆகியோருடன், அக்கம்பனியின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ஸ்ரீ லங்கா டெலிகொம் சார்பில், அதன் தலைவர், குழும பிரதான நிறைவேற்று அதிகாரி, சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.     

2005இல் ஸ்ரீ லங்கா டெலிகொம் தனது வலையமைப்பை அடுத்த தலைமுறை வலையமைப்பாக தரமுயர்த்துவதற்கான ஒரு பாரிய செயற்றிட்டத்தை முன்னெடுத்தது. 'எல்லைகளை விரிவாக்குதல்' என்ற பிரதான நோக்கத்தின் கீழ் இது 2011இல் துரிதப்படுத்தப்பட்டு, கம்பனியால் ஐ-ஸ்ரீ லங்கா செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இச்செயற்றிட்டம் மூலமாக, இக்கம்பனியானது, நாட்டில் இணைய வசதியுள்ளோருக்கும் இல்லாதோருக்குமான இடைவெளி குறைக்கப்பட்டு, அனைவருக்கும் சர்வதேச தரமான தடையற்ற, நிலையான, அதிவேக இணையம் கிடைப்பதற்கு வழிசெய்திருக்கின்றது.

இக்கம்பனி, 90 வீதமான தனது வாடிக்கையாளர்களுக்கு 20Mbps  வரையான வேகத்துடன் புரோட்பான்ட் இணைப்பை வழங்கி, அவர்களுக்கு முன்னெப்போதுமில்லாத இணைய அனுபவத்தை வழங்கியிருக்கிறது.

2015 டிசெம்பர் அளவில், நாடெங்கிலும் 4,500க்கு மேற்பட்ட புதிய பெறுவழி கணையங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஐ-ஸ்ரீ லங்கா செயற்றிட்டத்தின் அனைத்து வேலைகளும் செய்து முடிக்கப்பட்டன. இதற்கான முதலீடு ரூ.13 பில்லியனையும் தாண்டியது.

இந்த ஐ-ஸ்ரீ லங்கா செயற்றிட்டம் மூலமாக தற்போது நாடெங்கிலுமுள்ள பெரும்பாலான நகரங்களில் தற்போது புரோட்பான்ட் இணைப்பு கிடைக்கிறது. மேலும், இந்த முக்கியமான மைல் கல்லைத் தாண்டி, ஸ்ரீ லங்கா டெலிகொம் 20Mbps வரையான தரவு வேகத்துடன் 1,300,000 புரோட்பான்ட் இணைப்புக்களையும், 100 தரவு வேகத்துடனான தனது முதலாவது FTTH (Fiber To The Home) வலையமைப்புக்கும் ஆதரவளிக்கவுள்ளது. இதன் மூலம், 2016க்குள் ஸ்ரீ லங்கா டெலிகொம் 70,000 இல்லங்களுக்கு இணைப்புகளை வழங்கும்.     

இந்தச் செயற்றிட்டம் நிறைவடைந்ததன் மூலம், இலங்கை இணைய இணைப்பில்  தெற்காசியாவிலேயே தன்னை முன்னிலையில் இருத்தியுள்ளது. இந்த வலையமைப்பானது, சகல இலங்கையர்களும் உலகத்தரமான தகவல், தொடர்பாடல் மற்றும் பொழுதுபோக்கு சேவைகளுடன் இடையறாது இணைந்திருக்கச் செய்ய வேண்டுமென்ற கம்பனியின் தூர நோக்கு மூலம் ஊக்கமளிக்கப்பட்டு, குரல்வழி, தரவு மற்றும் காணொளி சேவைகளில் பல புதிய, சிறந்த உற்பத்திப்பொருட்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படுவதற்கும் காரணமாகவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X