2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

இலங்கை அரசின் 1 பில்லியன் அ.மெ.டொ. பிணை இவ்வாரம் வெளியாகும்

A.P.Mathan   / 2011 ஜூலை 17 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கடந்தவார பங்குச்சந்தை, தங்கம் - வெள்ளி விலை நிலைவரங்கள்

(ச.சேகர்)

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை (15.07.2011) பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6777.03 ஆகவும், மிலங்கா விலைச் சுட்டெண் 6311.13 ஆகவும் அமைந்திருந்தது. கடந்தவாரத்தை விட இவ்வாரம் பங்கு நடவடிக்கைகள் மேலும் சற்று வீழ்ச்சியடைந்திருந்தமை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.

சந்தை நிலைவரங்கள் குறித்து ஆஷா பிலிப் செக்கியூரிட்டீஸ் பங்கு முகவர் நிறுவனத்தின் உதவி முகாமையாளர் சந்துரு - தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில், 'கடந்தவார கொடுக்கல் வாங்கல்களை பொறுத்தமட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கு கொள்வனவில் அதிகம் ஆர்வம் காட்டியிருந்தனர். பெருந்தோட்ட கம்பனிகளின் பங்குகளும், ஹோட்டல்களின் பங்குகளும் அதிகம் கைமாறியிருந்தன.

சொப்ட்லொஜிக் பைனான்ஸ் பங்குகள் பட்டியலிடப்பட்டதன் பின்னர் வீழ்ச்சியை காண்பித்திருந்த போதிலும், கடந்தவாரம் பங்குகளின் விலைகள் சற்று அதிகரிப்பை காண்பித்திருந்தன.

அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான பிணை ஒன்றை வெளியிடுவது குறித்து சில முக்கிய வங்கிகளின் நிறைவேற்று அதிகாரிகளின் நிதி ஆலோசனைகளை நாடியிருந்தது. இந்த பிணை அடுத்தவாரம் வெளிவரவுள்ளது. இந்த பிணை வெளியாகும் பட்சத்தில் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள்; மேலும் உயர்வடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன' என்றார்.

ஜூலை 04ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்தவாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ.8,386,118,054 அமைந்திருந்தது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 2 வீத அதிகரிப்பென்பது குறிப்பிடத்தக்கது. கடந்தவாரம் மொத்தமாக 79,941 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 77,850 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 2,091 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்தவார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சுவர்ணமஹால் ஃபைனான்ஸ், அபான்ஸ் ஃபைனான்சியல், லங்கா ஒரிகஸ் ஃபைனான்ஸ், ஒரியன்ட் காமென்ட்ஸ் மற்றும் பான் ஏசியன் பவர் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

டீ ஸ்மோல் ஹோலடர்ஸ், சிலோன் பீவரேஜ், சிலோன் லெதர், மிரமர் மற்றும் சிங்கலங்கா போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

சென்ரல் இன்வெஸ்ட்மன்ட் பினான்ஸ் (CIFL) நிறுவனம் தனது 40 மில்லியன் சாதாரண வாக்குரிமையுடைய பங்குகளை பங்கொன்றுக்கு தலா 10 ரூபா வீதம் பொது பங்கு வழங்கலின் மூலம் விநியோகிக்க முன்வந்துள்ளது.

இந்த பங்குவழங்கல் எதிர்வரும் 21ஆம் திகதி பூர்த்தியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலைவரம்

கடந்தவாரம் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறித்து வெள்ளவத்தை, சுவர்ணா கோல்ட் ஹவுஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பங்காளர் எஸ்.தினேஷ் குமாரிடம் தமிழ்மிரருக்காக கருத்து கேட்ட போது, 'சனிக்கிழமை (16) தங்கத்தின் விலை பவுணொன்றுக்கு 45,600 ரூபாவாக காணப்பட்டது. இந்த விலை அதிகரிப்புக்கு பிரதான காரணமாக சந்தையில் ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரித்து காணப்பட்டமை அமைந்திருந்தது. அடுத்தவாரமும் டொலரின் பெறுமதி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நிலவுகின்றன. எனவே தங்கப் பவுண் ஒன்றின் விலை 46,000 ரூபாவை எதிர்வரும் வாரம் எய்தும் என எதிர்பார்க்கிறோம். சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் அமெரிக்க டொலர்கள் 1600 இனை அண்மித்து வருகிறது' என்றார்.

வெள்ளி 10 கிராமின் சராசரி விலை 1379.48 ரூபாவாக காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--