2021 மே 08, சனிக்கிழமை

மொத்த பங்கு புரள்வில் வீழ்ச்சி; தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்

(ச.சேகர்)

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6870.92 ஆகவும், மிலங்கா விலைச் சுட்டெண் 6209.24 ஆகவும் அமைந்திருந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாரம் பங்குச்சந்தை பிரதான சுட்டிகள் சுமார் 100 புள்ளிகள் வரை வீழ்ச்சியை காண்பித்திருந்ததுடன், மொத்த பங்கு புரள்வு பெறுமதியை கருதுகையில் கடந்தவாரத்தை விட 95 வீத வீழ்ச்சியை காண்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்தவாரத்தை பொறுத்தமட்டில் கடன் அடிப்படையில் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு சில பங்கு முகவர் அமைப்புகள் முதலீட்டாளர்களை அனுமதித்திருந்தமை தொடர்பாக பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பெருமளவான பங்கு முகவர் நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு கடன் அடிப்படையில் பங்குகளை விற்பனை செய்ய அனுமதித்திருந்தது. இதனால் பெருமளவு முதலீட்டாளர்கள் அதிகளவான பங்குகளை கொள்வனவு செய்திருந்தனர். பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் இந்த கடன்களின் 75 வீதமான பகுதியை இந்த வருடம் செப்டெம்பர் மாதம் 31ஆம் திகதியினுள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெருமளவான முதலீட்டாளர்கள் தம்மை இந்த கடன் பங்குகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் வகையில் தம்மிடமுள்ள பங்குகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மாத இறுதிவரை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவான போக்கை காண்பிக்கும் என பலர் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 

செப்டெம்பர் 12ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்தவாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ.10,206,331,588 அமைந்திருந்தது. கடந்தவாரம் மொத்தமாக 104,765 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 102,706 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 2,059 ஆகவும் பதிவாகியிருந்தன. முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இடம்பெற்ற மொத்த கொடுக்கல் வாங்கல்களிலும் வீழ்ச்சி காணப்பட்டது.

கடந்தவார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் டெஸ் அக்ரோ, சதோச மோட்டர்ஸ், ரெக்னிஸ், முல்லர்ஸ் மற்றும் எஸ்.எம்.பி.லீசிங் (உரிமைப்பங்குகள்) போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

கொமர்ஷல் வங்கி (வாக்குரிமை பங்குகள்), கொமர்ஷல் வங்கி, புளு டயமன்ட்ஸ் (வாக்குரிமை பங்குகள்) மற்றும் எச்விஏ ஃபூட்ஸ், புளு டயமன்ட்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரமும் தங்கத்தின் விலை அதிகரித்து 24 கெரட் பவுணொன்றின் விலை ரூ.56,500ஐ அண்மித்து காணப்பட்டதாக தங்க நகை வியாபார வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. கடந்தவாரத்துடன் ஒப்பிடுகையில் இந்தவாரம் தங்கத்தின் விலை சற்று அதிகரித்து இருந்ததாக அவ்வட்டாரங்களின் மூலம் எமக்கு அறியக் கிடைத்திருந்தது.

வெள்ளி 10 கிராமின் சராசரி விலை 1401.67 ரூபாவாக காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X