2021 மே 15, சனிக்கிழமை

'CDB திரி கட்டம் 04' ரூ.5 மில்லியன் பெறுமதியான புலமைப்பரிசில்களுடன் அங்குரார்ப்பணம்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆகியவற்றில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கான 'CDB திரி கட்டம் 04' புலமைப் பரிசில் திட்டத்தை சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பீ.எல்.சி (CDB) நிறுவனம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது.

இலங்கையில் முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் ஒரேயொரு புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டமாக 'CDB சிதிரி'' திகழ்கின்றது. இப்புலமைப் பரிசில் திட்டமானது இலங்கையிலுள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு மாத்திரம் CDBயினால் அறிமுகப்படுத்தப்பட்ட விஷேட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புலமைப் பரிசில்களின் பெறுமதி 5 மில்லியன் ரூபாவாகும். இப் புலமைப் பரிசில்களைப் பெற்றுக் கொள்வதற்காக, பல்வேறு சமூக வருமான பிரிவுகளைச் சேர்ந்த 14 ஆண் மற்றும் 26 பெண் பிள்ளைகள் தமது பெற்றோர் சகிதம் கொழும்பு டவர் மண்டப கலையரங்கில் ஒன்றுகூடியிருந்தனர்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலாநிதி தயாரோஹன அத்துகோரள வருகை தந்திருந்தார். அத்துடன் CDB நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி - முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேஷ் நாணயக்கார, சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்பிரகாரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் வரை 10,000 ரூபா கொடுப்பனவைப் பெறுவர். அவ்வாறே, க.பொ.த. சாதாரண தரத்தில் சிறப்பாக சித்தியடைந்தவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் காலம் வரையிலும் வருடாந்தம் 15,000 ரூபா உதவிக் கொடுப்பனவை பெற்றுக் கொள்வர். இக்கொடுப்பனவு, புலமைப் பரிசில்கள் பெற்ற மாணவர்களுக்கு நீண்டகால அடிப்படையில் பயனளிப்பதாக அமைந்துள்ளது.

CDB நிறுவனத்தின் முதலாவது 'சிசுதிரி' நிகழ்ச்சித்திட்டம் 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கல்வி விடயத்தில் தேவைகளுள்ள சிறுவர்களுக்கு உதவும் வகையிலமைந்த இத்திட்டம் இன்று ஒரு தேசிய நிகழ்வாக வளர்ச்சியடைந்துள்ளது. அன்று முதல் CDB நிறுவனமானது நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த 130இற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு இப் புலமைப் பரிசில்களை வழங்கியுள்ளது. 

CDB நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான மஹேஷ் நாணயக்கார கூறுகையில், 'நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டமானது, பெருந்தொகையான சிறுவர்களுக்கு மிகச் சிறந்த அனுகூலத்தை அளித்துள்ளதுடன், மேலும் பலரின் கல்விசார் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதற்காக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மாணவர்கள் மேலும் அறிவினைப் பெற்றுக் கொள்வதற்கு இது உதவியுள்ளதுடன் அதன்மூலம், தாம் தெரிவு செய்துகொண்ட கற்றல் துறையில் போட்டிமிக்கவர்களாக திகழ்வதற்கான பக்கபலத்தையும் அவர்களுக்கு வழங்குகின்றது' என்றார்.

தொடர்ந்து தெரிவிக்கையில், 'பாடசாலை மாணவர்களுக்கு பயனளிக்கும் விதத்திலமைந்த இந்த வருடாந்த நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதையிட்டு CDB நிறுவனம் மகிழ்ச்சியடைகின்றது. முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் இந்த சமூகத்திற்கு சிறந்த சேவையை பாரியளவில் வழங்குகின்றனர். எமது பிள்ளைகள் தொடர்பில் நாம் அனைவரும் ஒரே மாதிரியான கனவுகளையே கொண்டிருக்கின்றோம். தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி புகட்ட வேண்டும் எனவும் அவர்கள் தமது வாழ்வில் நல்லதொரு நிலையில் இருப்பதை காண வேண்டுமெனவும், எம்மைப்போலவே முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கும் எதிர்பார்ப்புகள் உள்ளன. அந்தக் கனவினை நனவாக்கிக் கொள்ளும் வகையில் இந்த பெற்றோர்களுடன் இணைந்து செயற்படுவதையிட்டு நாம் உள்ளார்ந்தமாக மகிழ்ச்சியடைகின்றோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதம அதிதி கலாநிதி தயாரோஹன அத்துகோரள கூறுகையில், சரியான கல்வி என்பது ஒருவரது எதிர்கால வளர்ச்சிக்காக ஒருவர் இன்று விதைக்கும் விதைபோன்றதாகும் என்றார். அவர் மேலும் கூறுகையில், 'உண்மையில் உங்களுக்கு எவ்வளவு விடயங்கள் தெரியாதவையாக உள்ளன என்பதை நீங்கள் மேலும் அறிந்து கொள்ளவும், தெளிவு பெற்றுக் கொள்ளவும் அறிவு இன்றியமையாததாகும். அறிவினை திரட்டிக் கொள்வது என்பது எப்போதும் தொடர்கின்ற முடிவற்றதொரு செயற்பாடாகும்; அறிவே உங்கள் வாழ்வின் பொக்கிஷமாகவும் அமைகின்றது' என்று குறிப்பிட்டார்.

வெற்றியாளர்களுள் ஒருவரான புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலய மாணவன் செல்வன் ஜீவனின் தந்தையான யோகதாஸ் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், 'எமது பிள்ளைகளுக்கு கல்வி புகட்டும் விடயத்தில் நாம் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றோம். இந்நிலையில், இந்த நிகழ்ச்சித் திட்டமானது பெறுமதி மதிப்பிட முடியாத ஒரு வரப்பிரசாதம் ஆகும். எனவே இந்தப் பெறுமதிமிக்க முயற்சியை முன்னெடுத்தமைக்காக பெற்றோர்களாகிய நாம் CDB நிறுவனத்துக்கு நன்றிக் கடன்பட்டவர்களாக இருக்கின்றோம்' என்று தெரிவித்தார். 

'நாட்டிலுள்ள முக்கிய நகரங்களை உள்ளடக்கியதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள 34 கிளைகளுடன் கிராமப்புற மற்றும் நகர்ப்புற சமூகங்களுக்கு சேவையாற்றிவரும் புகழ்பெற்ற நிதி நிறுவனம் என்ற வகையில், எதிர்காலத்தில் ஒரு தொடரான கூட்டாண்மை சமூகப் பொறுப்பு செயற்பாடுகளை மென்மேலும் முன்னெடுப்பதன் ஊடாக மக்களின் வாழ்க்கைக்கு வளமூட்டுவதற்கு CDB நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது' என்றும் நாணயக்கார கூறி முடித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .