2020 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

அரசாங்க உதவியை நாடும் பொருளாதாரம்

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாத தாக்குதல் இவற்றை தொடர்ந்து தற்போது வைரஸ் பரவல் இவற்றினால் தலைதூக்க முயலும் பொருளாதாரத் துறைகள் மீண்டும் ஒரு பின்னடைவை எதிர்நோக்கியுள்ள தருணம் இது.

இலங்கையின் பொருளாதாரம் நீண்ட காலமாகவே எழுச்சி கொண்டதாக காணப்பட்டது, குறிப்பாக யுத்த காலத்திலிருந்து இந்த நிலை தொடர்ந்திருந்தது. தற்போது இலங்கை மேல் மத்திய வருமானமீட்டும் நாடாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து நிதி உதவிகள் மற்றும் சலுகைகளை எதிர்பார்க்க முடியாத ஒரு சூழலில் காணப்படுகின்றது. தற்போது எழுந்துள்ள இந்த இடர் நிலைக்கான தீர்வுகள், உள்நாட்டிலிருந்து பெறப்பட வேண்டியதாகவுள்ளது. இதன் காரணமாக, ஒவ்வொரு தொழிற்துறையும், அரசாங்கத்தை எதிர்பார்க்க வேண்டிய ஒரு சூழ்நிலை எழுந்துள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்படக்கூடிய நிவாரணம்

ஜனாதிபதியினால் கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில், உலர் வலயம் அடங்கலாக தேயிலை சிறுபயிர்ச்செய்கையாளர்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200,000 குடும்பங்கள் உதவிகளை நாடிய நிலையில் காணப்படுகின்றன.

இந்த சூழலில், COVID-19 பரவல் தற்போது மேலும் இடர்களை தோற்றுவித்துள்ளதுடன், அரசாங்கத்தின் இடையீட்டை கட்டாயமாக்கியுள்ளது. குறிப்பாக பொது சுகாதார சேவைகள், விநியோகம் மற்றும் சரக்கு கையாள்கை, சுற்றுலாத்துறை, ஏற்றுமதிகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவற்றைசார்ந்த சிறு வியாபாரங்கள் இவற்றில் அடங்குகின்றன. கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் ரூ. 500 மில்லியன் வெளியிடப்பட்டுள்ளது.

தொற்று பரவலால் பெருமளவில் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ஆறு மாத கால கடன் மீளச் செலுத்தல் ஒத்தி வைப்பு தொடர்பான அறிவித்தலையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதில் ஆடை ஏற்றுமதி, சுற்றுலாத் துறை, தகவல் தொழில்நுட்பம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சிறு வியாபாரங்கள் அடங்குகின்றன. இந்த வியாபாரங்களுக்கு 4 சதவீத தொழிற்படு மூலதன கடன்களை வழங்குமாறு வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிவாரண செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் தெளிவற்ற தன்மை காணப்படுகின்றது. குறிப்பாக, இந்த கடன் மீளச் செலுத்துவதற்கான கால நீடிப்பு பிரத்தியேக கடன்கள் மற்றும் குத்தகைகளுக்கும் செல்லுபடியாகுமா என்பது தெளிவற்றதாக காணப்படுகின்றது. அதுபோன்று வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் தொழிற்படா கடன் பங்கை எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும்? சமூகத்தின் இலகுவில் பாதிப்புறக்கூடிய பிரிவுகளுக்கு எந்த வகையில் நிதி உதவிகள் வழங்கப்படும்? போன்றன தெளிவற்றதாக அமைந்துள்ளன.

பெரும் கடன் இடரை எதிர்கொண்டுள்ள தேசிய விமான சேவையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு எவ்விதமான ஒதுக்கங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஏற்கனவே நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவை, தற்போது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இயக்குவதற்கான செலவு குறைவடைந்த போதிலும், அதன் குத்தகைகளுக்கான கொடுப்பனவுகளை மீளச் செலுத்த வேண்டும். இவற்றை மீளச் செலுத்த கால ஒத்தி வைப்புகள் வழங்கப்படவில்லை. இந்த சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு அரசாங்கம் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தனியார் துறை பாதிப்பு

ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடையும். மூலதன இருப்பைக் கொண்டுள்ள பாரியநிறுவனங்கள், அதிகளவு கடன் நெருக்கடியை எதிர்கொள்ளாத நிறுவனங்கள் இந்த சூழலில் தாக்குப்பிடித்து இயங்கும். வங்கிகள் கடன் மீளச் செலுத்தலுக்கு கால அவகாசத்தை வழங்க வேண்டியிருக்கும். இது இலங்கையில் மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் இடம்பெறக்கூடும்.

உள்நாட்டு நிறுவனங்கள் இந்த சூழலில் தாக்குப்பிடிக்குமா என்பது கேள்விக்குறி. குறிப்பாக, பாரிய நிறுவனங்கள் மூன்று மாத சம்பளத்தை வழங்கி பாரிய பின்னடைவை எதிர்நோக்காமல் இயங்கும். அவற்றின் ஒதுக்கங்கள் மாத்திரமே பாதிப்படையும்.

எதிர்வரும் வாரங்களில் விநியோகிக்கப்பட வேண்டிய கேள்வியை நிவர்த்தி செய்வதற்காக கடந்த வாரங்களில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் இயங்கிய தொழிற்சாலைகள், தற்போது வைரஸ் பரவலுடன் தொடர்ந்து இயங்குவது உறுதியற்ற நிலையை எதிர்கொண்டுள்ளன.

”தற்போது ஊரடங்கு சட்டம் அமலிலுள்ள நிலையில், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. முன்னர் அரசாங்கம் வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு விடுத்த வேண்டுகோளுக்கமைய, பல தனியார் நிறுவனங்கள் சட்டபூர்வமாக தாம் கடப்பாட்டை கொண்டிராத போதிலும், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டிய நிலையை எதிர்கொண்டன.” என சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்டன் மார்கஸ் தெரிவித்தார்.

”குறிப்பாக மார்ச் 16 ஆம் திகதியை அரசாங்கம் பொது மற்றும் தனியார் துறை விடுமுறையாக அறிவித்தமைக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். ஆனாலும், உலகளாவிய ரீதியில் எழுந்துள்ள நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு, விசேட பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக சமூக பொறுப்புணர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாக இது அமைந்துள்ளது.” என மேலும் குறிப்பிட்டார்.

உற்பத்தி பகுதிகளில் சமூக தூரப்படுத்தல் என்பது சாத்தியமற்றது. இந்நிலையில் ஊழியர்களுக்கு கொடுப்பனவு மேற்கொள்வது பற்றிய தீர்மானத்தை தொழில் அமைச்சருடனான சந்திப்பை தொடர்ந்து மேற்கொண்டிருந்ததுடன், இந்த நடவடிக்கைக்கு அரசாங்கம் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இது தொழிலாளர் சம்பந்தப்பட்ட விடயமல்ல. சுகாதார பிரச்சினை. தனியார் துறையினர் தற்காலிகமாக தமது செயற்பாடுகளை மூடுவார்களாயின், சம்பளங்களை வழங்குமாறு தொழிலாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன பங்கேற்ற சந்திப்பொன்றில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.” என தொழில் விவகார ஆளுநர் ஆனந்த விமலவீர தெரிவித்தார்.

”நாட்டின் முன்னணி மூன்று ஆடைத் தொழிற்சாலைகளில் 200,000க்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர். இவற்றில் சில தமது செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளன. ஆனாலும் ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவு மேற்கொள்ளப்படும் என இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விடயம் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச தலைமையில் கலந்துரையாடப்படும்.” என விமலவீர மேலும் குறிப்பிட்டார்.

இதுவரையில் பெருமளவான தொற்று நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில், விவசாய செய்கை மேற்கொள்ளப்படும் பகுதிகளில் தற்போது அறுவடை நடவடிக்கைகள் தடங்கலின்றி முன்னெடுக்கப்படுகின்றன.

ஏற்றுமதி சந்தைகள்

ஆடைத் தொழிற்துறை பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக சீனாவிலிருந்து மூலப்பொருட்கள் வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தைகளில் பாரிய தாக்கம் ஏற்படாத போதிலும், ஏற்றுமதி சந்தைகள் பாதிப்பை எதிர்கொள்ளும். இதனால் வெளிநாட்டு நாணயமாற்று வீதமும் பாதிப்படையும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .