2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கடன் தரப்படுத்தல் அறிக்கை என்றால் என்ன?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட செய்தியொன்று, பலருக்கு ஆச்சரியமானதாக இருந்திருக்கலாம். இப்படி எல்லாம் எங்கள் நாட்டில் இருக்கிறதா எனும் கேள்வியை எழுப்பி இருக்கலாம். இன்னும் சிலருக்கு, இலங்கையின் சேவைப்படுத்தல் மிக இலகுபடுத்தப்பட்டிருக்கிறதே என்று  மகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கலாம்.  எனவே, கடந்த வாரங்களில் பேசப்பட்ட கடன்தரப்படுத்தல் அறிக்கைகளை, நேரடியாக பொதுமக்களே பெற்றுக்கொள்ள முடியும். கடனுக்கு உத்தரவாதம் வழங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டவர்கள் நிலையை மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு பின்னால் இருக்ககூடிய செயன்முறையை பார்க்கலாம். 

இலங்கையின் தனிநபர் கடன் சுமையானது, நகரம், கிராமம் முழுவதுமே வெவ்வேறு வடிவங்களில் பரந்து கிடக்கின்றன. கிராமங்களிலுள்ளவர்கள் நுண்கடன் சுமையால் தள்ளாடிக் கொண்டிருக்க, நகரங்களில் வாழ்பவர்கள் கடனட்டை சுமையால் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள், கடனை அடைத்துக்கொள்ள இன்னுமொரு கடனைப் பெற்றுக்கொள்வ​ைதயும் ஒரு கடனட்டை உச்சவரம்பை எட்டிக்கொள்கின்றபோதும், மற்றுமொரு கடனட்டையைப் பெற்று பயன்படுத்துவதையும் ஒரு தீர்வாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மற்றுமொரு வங்கியோ அல்லது கடனட்டை வழங்கும் நிறுவனமோ எப்போது கடனை அல்லது கடனட்டை வழங்குவ​ைத  நிறுத்திக் கொள்ளுகின்றதோ அப்போதுதான் உண்மையான கடன்சுமையை உணரத் தொடங்குவதுடன், அதை மீளச் செலுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். 

கடனையும் கடனட்டையும் ஒரு வங்கியில் பெற்றுக்கொள்ளுபவர்கள், மற்றுமொரு வங்கியில் கடனைப் பெற்றுக்கொள்ளச்செல்லும்போதும் முன்னைய வங்கியில், பெற்றுக்கொண்ட வங்கிக்கடன் தொடர்பில் அவர்களுக்கு தெரிந்திருக்கப் போவதில்லை என்ற எண்ணத்துடனையே, கடனைப் பெற்றுக்கொள்ளச் செல்கிறார்கள். ஆனால், இலங்கையில் கடனொன்றை அல்லது கடனட்டை ஒன்றை பெற்றுக்கொள்ளும் எந்தவொரு நபரினதும் தகவல்,  இலங்கையின் கொடுகடன் தகவல் பணியகத்தில் (CRIB ) பதிவாகின்றது என்பதையும், அதை எந்தவொரு நிதி நிறுவனமும் குறித்த தனிநபரும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் அறிந்துகொள்ளத் தவறி விடுகிறார்கள். இதனால், மற்றுமொரு வங்கியோ, கடனட்டை நிறுவனமோ, கடன் அல்லது கடனட்டை விண்ணப்பத்தை நிராகரிக்கும்போது, செய்வதறியாது நிற்கும் நிலை ஏற்படுகின்றது. 

இந்தக் கடன்கொடுகடன் பணியகம்,  தமது கடனுக்கான அறிக்கை, சரியான விழிப்புணர்வு போன்றவை தொடர்பாக, நம்மவர்களின் நிதியியல்சார் கல்வியறிவு இல்லாததன் காரணத்தாலேயே, கடன் மீள்செலுத்தும் திறன் பற்றியும் இதனால் ஏற்படும் சிக்கல்தன்மை குறித்தும் பலர் அறிந்திருப்பதில்லை.  

கடன்தரப்படுத்தல் என்றால் என்ன? 

கடன்தரப்படுத்தல் எனப்படும் இலங்கையின் கடன்கொடுகடன் பணியகமானது, நாட்டின் கடன் தரப்படுத்தலை மேம்படுத்தும் நோக்கிலும், கடன் வழங்கல், பெறுதலில் ஒரு சீராக்கத்தைக் கொண்டுவரும் நோக்கிலும் தெற்காசியாவிலேயே முதன்முதலில் உருவாக்கப்பட்ட நிறுவகமாகும். 1980ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவகத்தில், இலங்கை மத்திய வங்கி பங்குதாரராக இருப்பதுடன், இதற்கு மேலதிகமாக மேலும் 93 பங்குதாரர்களை அங்கமாகக்கொண்டு, இந்த நிறுவனம் இயங்கி வருகின்றது. மொத்தம் 94 பங்குதாரர்கள் பட்டியலில் 25 வணிக வங்கிகளும் 7 விஷேட வங்கிகளும், 45 பதிவு செய்யப்பட்ட நிதிநிறுவனங்களும்   6 குத்தகை நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். 

கடன்தரப்படுத்தல் நிறுவனத்தின் மிகப்பெரும் நோக்கமே, வாடிக்கையாளர்களுக்கு மிக இலகுவாகவும் விரைவாகவும் கடன்தகவல்களை வழங்கு வதுடன், நாட்டின் கடன்நிலையை ஸ்திரமானநிலையில் கொண்டுநடாத்த உதவுவதாகும்.  

கடன்தரப்படுத்தல் பயன்பாடுகள் என்ன? 

கடன்தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக, இலங்கையிலுள்ள வங்கிகள்,  நிதிநிறுவனங்கள் அனைத்துமே தமது கடன்தொடர்பான விபரங்களையும் தம்மிடம் கடன் பெற வருபவர்கள் தொடர்பானத் தகவல்களை ஏனைய நிறுவனங்களிடமிருந்தும் ஆவணக் கோரிக்கைகளின் வாயிலாகவே பெற்றுக்கொண்டிருந்தார்கள். இதன்காரணமாக, வங்கிகள் , நிதி நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள, மாதக்கணக்கில் காத்திருக்கும்நிலை ஏற்பட்டது. ஆனால், இலங்கை கொடுக்கடன் பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு, அனைத்து தகவல்களும் ஒன்றுதிரட்டப்பட்டு ஓரிடத்தில் ஆவணப்படுத்தப்பட்டு, முறையானவகையில் உடனுக்குடன் தேவைப்படும் தரப்பினருக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை கொடுக்கடன் பணியகத்தின் தகவல் களஞ்சியமானது, ஒவ்வொரு மாத இறுதியிலும், தன்னியக்க முறையில் அங்கத்துவம் கொண்ட நிறுவனங்களின் வாயிலாகப் புதுப்பிக்கப்படுகிறது. இதன் மூலமாக, எந்தவொரு நிறுவனமும் பொது மகனும் தனது கடன்நிலை தொடர்பில் மிக இலகுவாக அறிந்துகொள்ள முடியும். இந்தத் தகவல் களஞ்சியத்திலுள்ள தகவல்கள் தனி நபர்களின் தேசிய அடையாள அட்டை எண் அடிப்படையிலும் நிறுவனங்களின் தகவல்கள், வியாபார பதிவெண்ணின் பிரகாரகமும் மிக இலகுவாகக்
கண்டறியப்படுகிறது. 

கடன்தரப்படுத்தலில் உங்கள் பெயர் உள்ளதா? 

நம்மில் பலருக்குமே கடன்தரப்படுத்தல் தொடர்பான மிக தவறான அனுமானங்களே மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானவொன்று, இலங்கை கடன்கொடு பணியகத்தின் அறிக்கையில் இடம்பெறுகின்ற பெயர்கள், நிறுவனங்கள் அனைத்துமே, தமது கடனை மீளச்செலுத்தாதவர்களாகவே இருப்பர்கள் என்பதாகும். இது முற்றிலும் தவறான ஒன்றாகும்.   

உதாரணத்துக்கு, தனிநபராகிய நீங்கள், வங்கியில் கடன் ஒன்றையோ அல்லது கடனட்டை ஒன்றையோ பெற்றுக்கொள்ளும்போது அல்லது மற்றுமொருவரின் கடனுக்காக உத்தரவாத கையொப்பத்தை வைக்கும் போது, உங்களது அனைத்து விவரமும் கடன்கொடு தகவல் பணியகத்தில் சேமிக்கப்பட்டுவிடும். இதற்கு அர்த்தம், கடன்கொடுகடன் பணியகத்தில் உங்கள் தகவல் வருவதால், நீங்கள் கடனை மீளச்செலுத்தாதவர் என்றாகிவிடாது. கடன்பெற்ற நீங்கள் மீளவும் மற்றுமொரு வங்கியில் கடனைப் பெற செல்லும்போது, இதுதொடர்பில் அறிவிக்கவும், இந்த நபருக்கான இயலுமைத்தன்மை தொடர்பில் குறித்த வங்கியோ, நிதிநிறுவனமோ அறிந்துகொள்ளவும், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உண்மையில், கடன்தரப்படுத்தல் அறிக்கையின் வகைப்படுத்தலின் பிரகாரமே, ஒருவரது கடன் மீள்செலுத்தும் நிலையும், மற்றுமொரு கடன் பெறக்கூடிய நிலையும் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, கடன் அறிக்கையில் பெயர் இடம்பெற்ற ஒரே காரணத்தால், கடன் வழங்க மறுக்கப்படுவதுமில்லை, கடன்பெற்றவர் தவறாக வகைப்படுத்தப்படுவதுமில்லை. 

மேற்கூறிய உதாரணம்போலவே, குறித்த நிறுவனமொன்றின் உரிமையாளராக நீங்கள் உள்ள சந்தர்ப்பத்தில், குறித்த நிறுவனம் ஏதேனும் வங்கி கடனையோ அல்லது ஏதேனும் நிதி வசதிகளை பெற்றிருந்தாலோ நிறுவனத்தின் பெயரும் உங்களது பெயரும் கடன் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும். 

எப்படியானது; எப்படிப் பெறுவது?

இலங்கை கடன்கொடு பணியகத்தால் வழங்கப்படும் கடன் அறிக்கையில், கடன் அல்லது கடனட்டை வழங்கிய நிறுவனத்தின் பெயர், பெற்றுக்கொண்டவரின் தனிநபர் விபரம், பெற்றுக்கொண்ட கடனின் அளவு, கடன் வழங்கப்பட்ட திகதி, மீள்செலுத்துகை முறை, கடனுக்காக வழங்கப்பட்ட உத்தரவாத முறை, மாதாந்தம் மீளச்செலுத்தும் தொகை, திகதி விவரம், மாதாந்த மீளசெலுத்தலில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டிருப்பின் அது தொடர்பிலான குறிப்பு, அண்மையில் மீளச்செலுத்தி முடிக்கப்பட்ட கடனின் விவரம், பெற்றுக்கொண்ட கடனில் மீளசெலுத்தாமல் நிலுவையாக உள்ளவற்றின் விபரம், காசோலை வழங்குதலில் தொடர்பிருப்பின் அதுதொடர்பான விவரம், ஏதேனும் காசோலைகள் பணமாக்கப்படாது மறுக்கப்பட்டிருப்பின் அதுதொடர்பிலான விவரம், கடன் தொடர்பில் முக்கியமான ஏனைய விவரங்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதாக இவ்வறிக்கை, இலங்கை கடன்கொடு பணியகத்தால், தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். 

மேற்கூறிய கடன்தரப்படுத்தல் அறிக்கையை நிதி நிறுவனங்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் தங்களது கடன் மதிப்பீடு தொடர்பில் அறிந்துகொள்ளக் கூடியவகையில் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு தற்போது வழிவகை செய்யப்பட்டு இருக்கின்றது. பொதுமக்காளாகிய நீங்கள், உங்களது கடன் மதிப்பீட்டை அறிந்துகொள்ளவோ அல்லது உங்களது பெயரில் யாரேனும் கடன் பெற்று ஏதேனும் மோசடி இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ளவோ இந்தக் கடன் அறிக்கையைப் பெறுவது அவசியமாகவுள்ளது. இதற்கு, உங்களுக்கு அருகாமையிலுள்ள அல்லது நீங்கள் வங்கி கணக்கை கொண்டுள்ள ஏதேனுமொரு வங்கிக்கிளையில் குறித்த CRIB அறிக்கையை பெறுவதற்கான விண்ணப்பப்படிவத்ைத  இலவசமாகப் பெற்று பூரணப்படுத்தி கையளித்தாலே போதுமானது ஆகும். விண்ணப்பபடிவம் மட்டுமே இலவசமாக வழங்கப்படுவதுடன், குறித்த CRIB அறிக்கை நம்கைகளுக்கு கிடைக்க தனிநபர் ஒருவர் 150/- ரூபாயாயும், நிறுவனம் 500/- ரூபாயும் இலங்கை கொடுகடன் பணியகத்துக்கு கட்டணமாக செலுத்த வேண்டியது அவசியமாகும். நீங்கள் விண்ணப்பத்தைக் கையளித்த தினத்திலிருந்து அதிகூடியதாக இரண்டு வாரத்தில், CRIB அறிக்கையானது தபாலில் உங்களை வந்துசேரும். இ​ைத விடவும் மிகவேகமாக உங்களுக்கு CRIB அறிக்கை தேவைப்படின், இணையத்தில் (http://www.crib.lk/) தரவிறக்கிய விண்ணப்பப் படிவத்தை அல்லது வங்கியில் பெற்ற படிவத்தை பூரணப்படுத்தி, ஏதேனும் வங்கியின் அத்தாட்சிப்படுத்தலுடன், கொழும்பிலுள்ள இலங்கை கொடுகடன் பணியகத்தில் கையளிக்கும் அதேநாளில் குறித்த CRIB அறிக்கையை பெற்றுக்கொள்ள கூடியதாகவிருக்கும். குறித்த ஒருநாள் சேவைக்கு மேலதிகமாக 100 ரூபாய்  மட்டும் இலங்கை கடன் கொடுகடன் பணியகத்தால் அறவிடப்படுகின்றது. 

எனவே, தனிநபர் ஒவ்வொருவரும் தமது கடன்நிலை தொடர்பிலும் கடன் தரப்படுத்தல் தொடர்பிலும் அறிந்துகொள்ள, குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்ளுவது அவசியமாகிறது. குறித்த  அறிக்கையின் மூலமாக, நிதி நிறுவனங்களுக்குச் செல்ல முன்பே, உங்களது நிதி இயலுமைத் தன்மை, நிதி நிறுவனத்தில் மேலதிக நிதியை பெற்றுக்கொள்ளக்கூடிய தன்மை ஆகியவற்​ைற நீங்களாவே சுயமதிப்பீடு செய்து கொள்ள முடிவதுடன், அதற்கேற்ப உங்கள் வாழ்க்கை முறையையும் வாழ்க்கை செலவீனங்களையும் கூட நெறிப்படுத்திக் கொள்ளக் கூடியதாகவிருக்கும். 

இந்த வாரம், இலங்கை கடன் கொடுக்கடன் பணியகத்தின் சேவை, CRIB அறிக்கை​ைய  எப்படி பெற்றுக்கொள்ளுவது, அைத பெறுவதன் நன்மை ஆகியவற்றை அறிந்துகொண்டதுபோல, எதிர்வரும் வாரங்களில் CRIB அறிக்கையை எவ்வாறு புரிந்துகொள்ளுவது, கடன் தரப்படுத்தலில் மோசமாக தரப்படுத்தப்பட்டிருப்பின் அதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது போன்ற விடயங்களைப் பார்க்கலாம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .