2020 ஜூலை 15, புதன்கிழமை

மத்திய வங்கியிடமிருந்து சலுகை

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களுக்கு உதவும் வகையில், கடன் உதவிகளை வழங்க முன்வந்துள்ள வங்கிகளுக்கு, கடன் உத்தரவாதம், வட்டி நிவாரணத் திட்டமொன்றை, ஜூலை முதலாம் திகதி முதல் அமல்படுத்தத் தீர்மானித்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தெரிவித்துள்ளது.   

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 150 பில்லியன் ரூபாய்க்கான உதவித் தொகைக்கமைய, நாணய சட்ட மூலத்தின் 83ஆம் பிரிவுக்கமைய நாணய சபையால் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டம், ஏற்கெனவே முன்னெடுக்கப்படும் சௌபாக்கியா கொவிட்-19 மறுமலர்ச்சித் திட்டத்துக்கு சமாந்தரமாக முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.   

இந்தத் திட்டத்தின் கீழ், கடன் உதவிகளை வழங்கும் வங்கிகளுக்கு, கடன் உத்தரவாதமொன்றை இலங்கை மத்திய வங்கி வழங்கும். இந்தப் பெறுமதி, சிறு கடன்களுக்கு 80% வரையிலும், பாரியளவிலான கடன்களுக்கு 50% வரையிலும் அமைந்திருக்கும். இதனூடாக, பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களுக்கு அவசியமான தொழிற்படு மூலதனத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு, வங்கிகளுக்கு கடன் உதவிகளை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.   

இவ்வாறு வழங்கப்படும் கடன் தொகையின் பாரியளவு இடரை, மத்திய வங்கி பொறுப்பேற்கவுள்ள நிலையில், ஊறுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள வியாபாரங்களுக்கான கடன் வசதிகளை, எவ்விதமான உத்தரவாதங்களுமின்றிப் பெற்றுக் கொடுப்பதற்கு வழியேற்படுத்தப்பட்டுள்ளது.   

இதற்காக வங்கிகள், தமது சொந்த நிதியைப் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, 180 பில்லியன் ரூபாய் வரையில், இலங்கை மத்திய வங்கியால் மேலதிக திரள்வு, வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், நான்கு சதவீத வட்டியில் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு, கடன்களை வழங்க ஊக்குவிக்கப்பட்டுள்ளன. இதன் போது, வங்கிகளுக்கு ஐந்து சதவீதம் வட்டி நிவாரணத்தை வழங்கவும் இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   
இது தொடர்பான செயற்படுத்தல் அறிவுறுத்தல்கள், வங்கிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X