2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

மத்திய வங்கியின் 2021 ஆம் ஆண்டுக்கான கொள்கை

Gavitha   / 2021 ஜனவரி 11 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

இலங்கை மத்திய வங்கி தனது 2021 ஆம் ஆண்டுக்கான கொள்கைத் திட்டத்தில், வட்டி வீதங்களை ஒற்றை இலக்கப் பெறுமதிகளில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பேணுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 3.9 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்ததைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டில் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கு அவசியமான ஊக்கத்தை வழங்கும் வகையில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள பாதகமான தாக்கத்தை, வட்டி வீதங்களை குறைந்த மட்டத்தில் பேணுவதனூடாக சீரமைக்கக்கூடியதாக இருக்குமெனக் கருதுவதுடன், இலங்கையை நிலைபேறான வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்வதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இதர சில வழிமுறைகளுக்கும் இந்தக் குறைந்த வட்டி வீதம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்கனவே இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகள் காணப்படும் நிலையில், மத்திய வங்கியின் இந்தக் கொள்கை என்பது அனுகூலம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. சாதாரணமாக, இலங்கையில் வட்டி வீதங்கள் குறைக்கப்படும் போது, முதலீடுகளுக்கு மாறாக, அதிகளவு நுகர்வை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். ஆனாலும் வாகன இறக்குமதி மற்றும் இதர அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் காணப்படும் நிலையில், ஆக்கபூர்வமான துறைகளுக்கு மூலதனம் பாய்ச்சப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. குறிப்பிட்ட சில துறைகளுக்கு கடன் வழங்கும் இலக்குகளை நிர்ணயிப்பதாக இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ள நிலையில், தனியார் துறைக்கான கடன் விரிவாக்கம் 14 சதவீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், பணவீக்கத்தின் அதிகரிப்பினால், குறைந்த வட்டி வீதங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, நாணயக் கொள்கைகளை சீராக பேண வேண்டியது முக்கியத்துவம் பெறுகின்றது, அதனூடாக கேள்வியையும் விநியோகத்தையும் ஒரே மட்டத்தில் பேணி, பணவீக்கத்தில் பாரிய தளம்பல்கள் ஏற்படுவதை கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். உதாரணமாக உணவுக்கான பணவீக்கம் என்பதை முறையாக கண்காணிக்காவிடின், பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

அத்துடன், அரசாங்கம் இவ்வாண்டில் மீளச் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன் தொகைகள் தொடர்பில் இன்னமும் முறையான பதில்களை எய்தவில்லை. குறிப்பாக ரூபாயின் பெறுமதியில் தொடர்ச்சியாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வாண்டில் இலங்கை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. சர்வதேச தரப்படுத்தல்கள் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச நிதிச் சந்தைகளிலிருந்து நிதியைத் திரட்ட முடியாத ஒரு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுள்ளது. அத்துடன், இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் பல முதலீட்டாளர்கள் அதிகளவு கவனம் செலுத்திய வண்ணமுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் 2021 ஆம் ஆண்டுக்கான கொள்கைத் திட்டத்தில் 1977 ஆம் ஆண்டு திறப்புப் பொருளாதாரக் கொள்கையின் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட கொள்கைகள் தீவிரமாக மீளாய்வுக்குட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கொவிட்-19 எதிர்ப்பு வக்சீன்கள் பெருமளவான நாடுளில் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச விநியோகத் தொடர்கள் தொற்றுத் தாக்கத்திலிருந்து மீட்சியடைந்த பின்னர் மேற்கொள்ளும் மீளமைப்புகளில் இலங்கையை உள்வாங்கத்த தவிர்ப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகக் காணப்படுகின்றது. எனவே, இந்த பாரம்பரிய கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதனூடாக, தொற்றுப் பரவலுக்கு பின்னரான காலப்பகுதியில் உலகின் விநியோகத் தொடரில் ஒதுக்கப்பட்ட நிலையை இலங்கை எய்தாமல் பேண வேண்டியது முக்கியமானதாகும்.

இலங்கையின் பொருளாதார மீட்சியில் இலங்கை மத்திய வங்கியின் 2021ஆம் ஆண்டுக்கான கொள்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பதுடன், எதிர்பார்க்கப்படும் மாற்றங்களை எவ்வாறு எய்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அரசாங்கத்தினால் மேலும் தெளிவுபடுத்துவது அவசியமானதாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .