2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

வேள்ட் விஷனின் 2.3 மில். டொலர் அவசரகால உதவி

Editorial   / 2020 ஜூன் 04 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேள்ட் விஷன் லங்கா அமைப்பு தனது கொவிட்-19 அவசரகால உதவிக்காக 2.3 மில்லியன் டொலர் பெறுமதியுடன் கூடிய, இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த இரண்டாம் கட்டமானது 16 மாவட்டங்களைச் சேர்ந்த மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், உடல் நலமும் சுகாதாரமும், சிறுவர் பாதுகாப்பு, கல்வி என்பனவற்றில் கவனம் செலுத்துவதாக அமையும்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த வேள்ட் விஷன் லங்காவின் தேசிய பணிப்பாளர் கலாநிதி தனன் சேனாதிராஜா, “மிகவும் ஏழ்மையான மற்றும் அதிகம் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மீது பாரியளவிலான தாக்கத்தை கொவிட்-19 ஏற்படுத்தும் என நாம் அஞ்சுகிறோம். இந்த அவசர நிலையானது அவர்களின் உடல்நலத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாது, இக்குடும்பங்களை மேலும் வறுமை நிலைக்கும் மேலதிக பாதிப்புக்குள்ளும் தள்ளும். அவர்கள் நலனடைந்து, மீண்டெழுந்து, நெகிழ்வுத்தன்மையுடன் வாழ உதவுவதற்கு வேள்ட் விஷன் முனைகின்றது.

"எங்களுடைய பிரதானமான இலக்குக் குழுக்களாக, குறைந்த வருமானத்தைப் பெறும் பெண்களால் தலைமை தாங்கப்படும் குடும்பங்கள், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள அங்கவீனங்களைக் கொண்டுள்ளோர், நாளாந்த வருமானங்களில் தங்கியிருந்தோரும் தமது வாழ்வாதாரங்களை இழந்தோருமென பொருளாதார ரீதியாகப் பாதிப்படைந்துள்ள குடும்பங்கள், போஷாக்கு மட்டத்தில் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடிய 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களைக் கொண்ட குடும்பங்கள், இலகுவாகப் பாதிப்படையக்கூடிய முதியோர் ஆகியோர் காணப்படுகின்றனர்" என, சேனாதிராஜா தெரிவித்தார்.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்துடன் இயைபுடையதாக அமையும் வகையிலான வாழ்வாதார ரீதியிலான இடையீடுகளில், இந்த இரண்டாம் கட்டத்தில் வேள்ட் விஷன் கவனம் செலுத்த எதிர்பார்க்கிறது. வீட்டு உணவுப் பாதுகாப்பை அதிகரித்தல், சிறுவர்களின் போஷாக்குத் தேவைகளை உறுதி செய்தல் ஆகியவற்றுக்காக வீட்டுத்தோட்டங்கள் ஊக்குவிக்கப்படும். வாழ்வாதாரங்களை மீளக்கட்டியெழுப்புவதற்காக, தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு உணவு அல்லது பண மானிய உதவி வழங்கப்படும்.

நீரும் உணவும் சுகாதாரமும் (WASH) என்ற பிரிவில் அனைத்து நடவடிக்கைகளும், சுகாதார நிலையங்கள் போன்ற பொது இடங்களிலும் பாடசாலைகளிலும் கை கழுவுவதற்காக வசதிகளை வழங்குவதன் மூலமாக, சிறுவர்களிலும் அவர்களது குடும்பங்களிலும் சமூகங்களிலும் கவனஞ்செலுத்தும். சிறந்த சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்தக்கூடிய குடும்ப சுகாதாரக் கையேடு உள்ளடங்கலான முழுக்குடும்பத்தின் தேவைக்கும் உதவக்கூடிய சுகாதாரப் பொதிகள், குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படும்.

எமது கல்விசார் துறையானது, கல்விக்கான டிஜிட்டல் மற்றும் இலத்திரனியல் அணுக்கமின்றிக் கல்வியைத் தொடர முடியாதுள்ள சிறுவர்களுக்கு (62%) உதவுவதற்காகக் கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படும்.

இந்த அவசரகால உதவிக்கான முதல் கட்டமானது 16 மாவட்டங்களில் 36 பிரதேசங்களைச் சேர்ந்த 42,815 குடும்பங்கள், அவர்களது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு அவதியுற்ற நிலையில், அவர்களுக்கான உலருணவுப் பொதிகளை வழங்குவதில் கவனஞ்செலுத்தியிருந்தது. தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தல், சுகாதார நிலையங்களினதும் சுகாதாரப் பணியாளர்களினதும் முக்கியமான தேவைகளுக்கு உதவுதல் போன்றவற்றையும் முழுமையான பதிலளிப்பு உள்ளடக்கியிருந்ததோடு, 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியில் இப்பதிலளிப்பு அமைந்திருந்தது.

இப்பதிலளிப்புத் தொடர்பாகத் தெரிவித்த சேனாதிராஜா, “கூட்டாண்மை நிறுவனங்கள், அறக்கட்டளைகள், தனிப்பட்ட அன்பளிப்பாளர்கள் ஆகியோர், எமது match-funding எனப்படும் முன்னெடுப்பு மூலமாகப் பங்களித்தனர். அவர்களின் உதவி மூலமாக மாத்திரம், 6,400க்கும் அதிகமான குடும்பங்களுக்கு உதவ எம்மால் முடிந்தது” என்றார்.

கொவிட்-19 தனிமைப்படுத்தல் காரணமாக அடுத்த மூன்று மாதங்களில் உலகளாவிய ரீதியில் 85 மில்லியனுக்கும் மேற்பட்ட பெண், ஆண் பிள்ளைகள் உடல்ரீதியான, பாலியல், உளவியல் ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாகக்கூடும் என, வேள்ட் விஷனின் அண்மைய உலகளாவிய ரீதியிலான அறிக்கை ஒன்று எச்சரிக்கிறது.

வேள்ட் விஷன் தனது செயற்பாடுகளை இலங்கையில் 1977 ல் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை நாடு முகங்கொடுத்த கூடுதலான அனைத்து அனர்த்தங்களுக்கும் அவசர உதவியை வழங்கி வருகின்றது. இந்த அமைப்பானது தற்போது நாட்டின் 15 மாவட்டங்களில் 34 பிரதேசங்களில் இயங்கி வருவதோடு, அதிகப்படியான பாதிப்பு மட்டத்தில் வாழும் 100,000 சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மீது நேரடியான நல்விளைவுகளை ஏற்படுத்துகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--