2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை

‘COVID-19 பரவல் சூழலில் வீட்டிலிருந்து பணியாற்றுவது எமக்கு வெற்றி’

Editorial   / 2020 மே 19 , பி.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

 

உலகளாவிய ரீதியில் COVID-19 பரவலின் தாக்கம், இலங்கையிலும் உணரப்பட்ட நிலையில், மார்ச் மாதம் நடுப்பகுதி முதல் இலங்கையில் தொழில் புரிவோரை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது. அரச மற்றும் தனியார் துறைகளில் இந்த விதிமுறையை பின்பற்றுமாறு அரசு அறிவித்திருந்த நிலையில், வீட்டிலிருந்து பணிபுரிவது என்பது இலங்கையை பொறுத்தமட்டில் பலருக்கு புதிய அனுபவமாக அமைந்திருந்தது.

சர்வதேச நிறுவனங்கள் பல வீட்டிலிருந்து பணியாற்றுவதை இந்த COVID-19 பரவலுக்கு முன்னதாகவே பின்பற்றி வந்திருந்தன. குறிப்பாக ஊழியர்கள் மத்தியில் குடும்ப-தொழில் சமநிலையை பேணும் வகையில் சில நிறுவனங்கள் வாரத்தில் ஒரு நாளை வீட்டிலிருந்து பணிபுரியும் நாளாக அறிவித்திருந்தன. சில மாதத்தில் இரு தினங்களை இவ்வாறு அறிவித்திருந்தன. எவவே சர்வதேச நிறுவனங்களுக்கு இது ஒரு புதிய அனுபவமல்ல.

இலங்கையில் அவ்வாறு சர்வதேச பின்புலத்துடன் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் AIA இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியிடம், COVID-19 பரவலினால் வியாபாரத்துக்கு எழுந்துள்ள தாக்கம், அவற்றை சீர்செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், வீட்டிலிருந்து பணிபுரிவது தொடர்பில் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மற்றும் ஊழியர்களுக்கு அந்த செயற்பாடுகளுக்கு கிடைக்கும் பங்களிப்பு பற்றிய விடயங்களை கேட்டறியும் நேர்காணல் ஒன்றை தமிழ்மிரர் வணிகப்பகுதி முன்னெடுத்திருந்தது.

இதன் போது AIA இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிகில் அத்வானி கருத்துத் தெரிவிக்கையில், ”உலகளாவிய ரீதியில் பரவும் COVID-19 என்பது இலங்கையில் ஒரு தேசிய பிரச்சினையாக அமைந்துள்ளது. எம் அனைவரையும் இது பாதித்துள்ளது. பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளதுடன், வியாபாரங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளன. AIA இன்சூரன்ஸ் செயற்பாடுகளும் இந்த தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும், எமது சர்வதேச அனுபவம் மற்றும் நிதி வலிமை போன்றவற்றினால் எம்மால் உறுதியான அடித்தளத்துடன் செயலாற்றக்கூடியதாக அமைந்துள்ளது. குறிப்பாக, ஒரு காப்புறுதி நிறுவனம் கொண்டிருக்க வேண்டிய ஆகக்குறைந்த மூலதன போதுமை விகிதத்தை (CAR) விட ஐந்து மடங்கு அதிகளவு தொகையை நாம் கொண்டுள்ளோம். அதாவது, இடரை எதிர்கொள்வதற்கு AIA இன்சூரன்ஸ் தயார் நிலையில் இருப்பதுடன், வெற்றிகரமாக முகங்கொடுக்கக்கூடிய நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றது.”

”எமது காப்புறுதியாளர்களின் முதலீட்டுப் பணத்தை நாம் முதலீடு செய்யும் போது அரசாங்க பிணைமுறிகள், உயர் தர கடன் பத்திரங்கள் போன்றவற்றில் மாத்திரமே முதலீடு செய்கின்றோம். இதனூடாக, எமது முதலீட்டு பிரிவு உயர் கடன் தரத்தைகத் கொண்டுள்ளது. அத்துடன், ஃபிட்ச் ரேட்டிங்கினால் “A” தரப்படுத்தல் வழங்கப்பட்ட கடன் பத்திரங்களில் மாத்திரம் நாம் முதலீடுகளை மேற்கொள்வதாலும், நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யாததால், எமது காப்புறுதிதாரர்களின் முதலீடுகள் பாதுகாப்பாக அமைந்திருக்கின்றமையை உறுதி செய்கின்றோம்.”

”100 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்ட AIA Group பின்புலத்தை நாம் கொண்டுள்ளோம். எனவே, இந்த தொற்றுப் பரவும் சூழலிலும், எதிர்வரும் காலங்களிலும் AIA இன்சூரன்ஸ் உறுதியான நிலையை இலங்கையில் கொண்டிருக்கும் என்பதுடன், வியாபார விஸ்தரிப்புகளை மேற்கொள்ளும் என்பதை என்னால் தெரிவிக்க முடியும்.”

”நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குசட்டம் என்பது எமது வியாபார செயற்பாடுகளுக்கு சவாலானதாக அமைந்துள்ளது. குறிப்பாக எமது வியாபார செயற்பாடுகள் என்பது, நபர்களுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தி மேற்கொள்ளும் செயற்பாடாகும். ஆனாலும், அனைத்துக்கும் முதல் சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதால், இதனை நாம் வரவேற்கின்றோம்.”

”எமது தினசரி செயற்பாடுகளில் COVID-19 பரவல் பாரிய தாக்கம் எதனையும் மேற்கொள்ளவில்லை, ஒரு நாளினுள் நாம் முழுமையாக வீட்டிலிருந்து பணியாற்றும் சூழலுக்கு மாறினோம். இந்த மாற்றத்தில் எமது அணியினர் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். இதனூடாக எம்மால் வாடிக்கையாளர்களுக்கு இடைவிடாது சேவைகளை வழங்க முடிந்துள்ளது. குறிப்பாக ஊரடங்கு அமலிலிருந்த சூழலிலும் நஷ்டஈடுகளை வழங்கக்கூடிய வகையில் நாம் செயலாற்றியிருந்தோம்.”

”மின்னஞ்சல், இலத்திரனியல் முறையினூடாக எமது சகல செயற்பாடுகளையும் நாம் மேற்கொண்டோம். இதனூடாக, நாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்ததை விட வேகமாக டிஜிட்டல் முறையில் செயலாற்றுவதற்கு எம்மை மாற்றிக் கொள்ள முடிந்தது. ஊரடங்கு நிலவிய காலப்பகுதியில், எமது ஊழியர்கள் மற்றும் விநியோக செயலணியைச் சேர்ந்தவர்களுக்கு டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக காப்புறுதி வழங்கும் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது பற்றிய பயிற்சிகளை வழங்கியிருந்தோம். இதன் காரணமாக, இலங்கையில் COVID-19 பரவும் சூழலிலிருந்து விடுபட்டு நாம் முன்னோக்கி பயணிக்கையில், இந்த செயற்பாடு பெருமளவு நேர்த்தியான பங்களிப்பை வழங்கும் என நான் கருதுகின்றேன்.”

”வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவுகளை ஒன்லைனில் மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியிருந்ததுடன், அவர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கு எமது வாடிக்கையாளர் சேவை தொலைபேசி இலக்கம் சேவையில் இருந்தது. வாடிக்கையாளர்களுக்கு COVID-19 காப்பீட்டு தொகையையும் இந்தக் காலப்பகுதியில் நாம் அறிமுகம் செய்திருந்தோம்.”

”சுகாதார அமைச்சுடன் கைகோர்த்து IDH, முல்லேரியா மற்றும் வெலிகந்த ஆகிய மூன்று வைத்தியசாலைகளின் சுமார் 1100 வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவத்துறை ஊழியர்களுக்கு  இலவச ஆயுள் காப்புறுதியை வழங்க நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம்.”

”எமது ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் நாம் முக்கியத்துவம் வழங்குகின்றோம். இந்த இடர்நிறைந்த காலப்பகுதியிலும் இந்த இரு தரப்பினருக்கும் நாம் சேவையாற்றியிருந்தோம். இதற்கான வளங்கள் எம்மிடம் காணப்படுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு உயர் தர சேவைகளை வழங்க டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ரொபோட்டிக் செயன்முறை தன்னியக்கமயமாக்கல் (RPA) முறைகளில் நாம் முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். ஊரடங்கு வேளையில் எமது அலுவலகங்கள் மூடப்பட்டிருந்த போதிலும், எமது பொட்கள் மற்றும் இதர தன்னியக்கமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் தொடர்ந்து இயங்கியிருந்தன. இதனால் எமது செயற்பாடுகளின் துல்லியத்தன்மை உறுதி செய்யப்பட்டிருந்தது.”

” AIA Group மற்றும் பிராந்தியத்தின் சக ஊழியர்களுடன் இணைப்பை பேணும் எமது செயற்பாடுகளின் அங்கமாக ஒன்லைனில் பணியாற்றும் முறைமையை நாம் ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தோம். எனவே, எம்மைப் பொறுத்தமட்டில் வீட்டிலிருந்த பணியாற்றும் சூழலுக்கு மாறிக் கொள்வது என்பது இலகுவானதாக அமைந்திருந்தது. நிறுவனத்துக்கும் ஊழியர்களுக்குமிடையே ஒரு இடைவெளியை தோற்றுவிக்கக்கூடியதாக இந்த வீட்டிலிருந்து பணியாற்றுவது அமைந்திருந்தாலும், ஊழியர்களை ஈடுபடுத்துவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஊழியர்களை ஊக்குவிக்கும் பொழுது போக்கு அம்சங்களை நாம் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். டிஜிட்டல் புதுவருட கொண்டாட்டங்களையும் நாம் எமது ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருடன் முன்னெடுத்திருந்தோம்.”

”ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் நாம் இதுவரையில் எவ்விதமான மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை. எமது ஊழியர்களின் பங்களிப்பை நாம் மதிக்கின்றோம். இதன் காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக நாம் தெரிவு செய்யப்பட்டிருந்தோம்.” என்றார்.

”வீட்டிலிருந்து பணியாற்றுவது என்பது உண்மையில் ஆரம்பத்தில் சற்று சிரமமாக அமைந்திருந்தது. குறிப்பாக, வீட்டுச் சூழலில் பணியாற்ற பழக்கிக் கொள்வதில் சிறு சவால் நிலை நிலவியது. ஆனாலும், நாட்கள் செல்கையில் இதற்கு எம்மை பழக்கப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. உண்மையில் வீட்டிலிருந்து பணியாற்றுவதை நாம் தொடர்ந்து வாரத்தில் சில தினங்களுக்கேனும் முன்னெடுப்பது சிறந்தது. நிறுவனத்திடமிருந்து எமக்கு பூரண ஆதரவு கிடைத்திருந்தது.” என AIA இன்சூரன்சில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் தெரிவித்திருந்தார்.

”நிறுவனத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப வசதிகளினூடாக, எம்மால் சிறப்பாக செயலாற்ற முடிந்துள்ளது. குறிப்பாக முன்னர் சிறிதளவில் டிஜிட்டல் முறைமைகளை பயன்படுத்தி செயலாற்ற பழகியிருந்த நாம், தற்போது முழுமையாக கடதாசி பாவனையற்ற டிஜிட்டல் முறையில் சேவையாற்ற தேவையான பயிற்சிகளை பெற்று, அதனை பின்பற்றுகின்றோம். ஒன்லைன் ஊடாக பயிற்சிகளை பெற முடிந்துள்ளதுடன், பொழுது போக்குக்கான அம்சங்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக எமது நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.” என இன்சூரன்சில் பணியாற்றும் மற்றுமொரு ஊழியர் தெரிவித்திருந்தார்.

இது போன்ற சர்வதேச பின்புலங்களுடன் இயங்கும் நிறுவனங்களில் பின்பற்றப்படும் வீட்டிலிருந்து பணியாற்றும் வழிமுறைகளை, உள்நாட்டில் இயங்கும் சிறிய, நடுத்தரளவு வியாபாரங்களும் பின்பற்றி, புதிய வழமைக்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். காலத்தின் வளர்ச்சியுடன், தொழில்நுட்ப வளர்ச்சியும் பதிவாகியுள்ள நிலையில், அதன் அனுகூலத்தை பெற்று, தமது வியாபார நடவடிக்கைகளையும் டிஜிட்டல் முறையில் செயற்படுத்த இந்நிறுவனங்கள், AIA இன்சூரன்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனெனில், எதிர்காலத்திலும் இந்த வீட்டிலிருந்து பணியாற்றுவது எனும் கோரிக்கை தொடரலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X