2025 ஜூலை 19, சனிக்கிழமை

Ford மற்றும் World Vision Lanka இணைந்து மழைநீர் சேமிப்பு திட்டம்

Editorial   / 2018 ஜனவரி 25 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

Fort Motor Company மற்றும் அதன் உள்நாட்டு விநியோகப் பங்காளரான Future Auto mobiles (Pvt) Limited ஆகியன World Vision Sri Lanka உடன் ஒன்றிணைந்து பொலன்னறுவையில் மழைநீர் சேமிப்பு செயற்திட்டமொன்றை அண்மையில் ஆரம்பித்து வைத்துள்ளன.  

பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தையிலுள்ள 100 பயனாளிகளுக்கு வருடம் முழுவதும் தண்ணீரைப் பெற்றுக்கொள்ள வழிவகுத்துக் கொடுப்பதே இச்செயற்திட்டத்தின் இலக்காகும். எவ்வித பயனுமின்றி வீணாகப் போகின்ற மழைநீரைப் பயன்படுத்தி, நிலைபேற்றியல் கொண்ட நீரேந்துப் பிரதேசங்களினூடாக வருடம் முழுவதும் இங்கு வாழும் மக்கள் தண்ணீரைப் பெற்றுக்கொள்ள இச்செயற்திட்டம் இடமளிக்கின்றது.

இச்செயற்திட்டத்தின் மூலமாக மூன்று பிரதான நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. முதலாவதாக, 5-6 வீடுகளைக் கொண்ட வலையமைப்புக்கு மழை நீர் சேமிப்புத் தொகுதிகளையும், மீள்நிரப்பல் தொகுதிகளையும் ஸ்தாபித்து வருடம் முழுவதும் தண்ணீரைப் பெற்றுக்கொள்ள வழிவகுப்பதாகும்.  

குடும்ப ரீதியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒரு நபர் தெரிவு செய்யப்பட்டு சமூகம் சார்ந்த அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். மழை நீர் சேமிப்புத் தொகுதிகளை ஒழுங்காகப் பேணிப் பராமரிப்பதை இது உறுதிசெய்யும்.  

மழைநீர் சேமிப்பு தொடர்பில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதுடன், சூரிய மின்வலு மூலம் நீர்பாய்ச்சும் முறைமைகளுடன் புதுப்பிக்கத்தக்க மின்வலுப் பொறிமுறைகளும் சமூகங்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  

இச்செயற்திட்டத்தின் இரண்டாவது நோக்கமாக, வரட்சிக் காலத்தின்போது, நிலத்தடி நீரைப் பேணிப் பாதுகாத்து, நிலைபேற்றியலை உறுதிசெய்யும் வகையில் பொருத்தமான கிணறு அல்லது நீரேந்துப் பிரதேசத்தினூடாக நிலத்தடி நீரை மீள்நிரப்புவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  

 மூன்றாவதாக, குடும்ப ரீதியான குழுக்கள் மத்தியில் புதுப்பிக்கத்தக்க தண்ணீரை பாவிக்கும் சமூகங்களைத் தோற்றுவித்து, சூரிய மின்வலுவுடன் இயங்கும் மழைநீர் சேமிப்புத் தொகுதிகளின் இயக்கத்தைப் பேணிப் பராமரிப்பதற்கான பயிற்சியை வழங்குவதாகும்.  

 “நீண்ட காலமாக World Vision உடன் நாம் பேணி வந்துள்ள பங்குடமையில் இது புதியதோர் அத்தியாயமாகும். வருடம் முழுவதும் தண்ணீரைப் பெற்றுக்கொள்வது இந்தச் சமூகங்களின் நலனுக்கு மிகவும் முக்கியமான ஒரு தேவையாகக் காணப்பட்டது. வெலிக்கந்தை பிரதேசம் கடுமையான வரட்சி நிலவும் பருவகாலத்துக்கு முகங்கொடுக்கின்ற ஒரு பிரதேசம் என்ற வகையில், மழைநீரை மிகச் சிறந்த வழிகளில் உபயோகிக்கும் வழிமுறைகளைக் கைக்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
 மழை நீர் சேமிப்பு முறைமை மற்றும் சூரிய மின்வலுவுடன் இயங்கும் நீர்ப் பாய்ச்சல் முறைமைகள் போன்ற புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பங்களின் பாவனை ஆகியவற்றின் இணைப்பு, அச்சமூகம் தனது தண்ணீர்த் தேவைகளை நிலைபேற்றியல் கொண்ட வழியில் நிர்வகிப்பதற்கு இடமளிக்கும்,’ என்று Future Automobiles இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான சமத் தென்னக்கோன் குறிப்பிட்டார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X