2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

அதிபரை மாற்றக் கோரி போராட்டம்

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், விஜயரத்தினம் சரவணன், சண்முகம் தவசீலன்

 

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, வேணாவில் ஸ்ரீ முருகானந்தா வித்தியாலய பாடசாலையின் அதிபரை இடமாற்றுமாறு கோரி, அப்பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், கிராம பொதுஅமைப்பினர் ஆகியோரால், இன்று (14) காலை, கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம், பாடசாலை வாயிலில், காலை 6.30 மணி தொடக்கம் முற்பகல் 9 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், கடந்த பத்து ஆண்டுகளாக, ஒரே அதிபர் காணப்படுவதாகவும் அதிபரின் துர்செயற்பாடுகள் காரணமாக பாடசாலையில் புதிதாக இணையும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் ஏனைய துறைகளிலும் கவனம் குன்றிக்கொண்டு செல்வதாகத் தெரிவித்த அவர்கள்,குறித்த அதிபரை இடமாற்றுமாறு கோரி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு, கோட்டக் கல்வி அதிகாரி, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோட்டக் கல்வி அலவலகம், வலயக் கல்வி பணிமனை ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் சாடினர்.

தரம் 9 வரையான வகுப்புகளைக் கொண்ட இப்பாடசாலையில், 147 மாணவர்களும் 17 ஆசிரியர்களும் காணப்படுகின்றனர்.

இதன் போது ஆசிரியர் ஒருவர், போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்களையும் பெற்றோர்களையும் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தியுள்ளார்.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ச.கனகரத்தினத்தின் செயலாளரிடம், ஜனாதிபதிக்கான மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.பி.அமரசிங்கவின் தலையீட்டைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் உமாநிதி புவனராஜா வரவழைக்கப்பட்டார்.

இதன்போது, குறித்த பாடசாலையில் இந்த அதிபர் இனி பணி செய்யமாட்டாரென, வலயக் கல்விப் பணிப்பாளரால் வாக்குறுதி வழங்கப்பட்டதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .