2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

ஆறு வாரம் கடந்தும் அணுவும் அசையவில்லை. உறுதிமொழி என்னவாயிற்று?

George   / 2016 ஜூலை 13 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த மே மாதம் 23ஆம் திகதி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றபோது முன் வைக்கப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக கூறிய போதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் வடமாகாண சுகாதார அமைச்சர் மேற்கொள்ளவில்லை' என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்துக்கு  திங்கட்கிழமை(11) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ளக ரீதியில் பல்வேறு விதமான குறைபாடுகள் குறித்து 5ஆம் மாதம் 23ஆம் திகதி மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் பொது வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடலின் போது பல்வேறு குறைபாடுகள் முன் வைக்கப்பட்டன.

குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக வடமாகாண சுகாதார அமைச்சர் என்ற வகையில் கூறினீர்கள். ஆனால் இது வரை எவ்வித குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டதாக தெரியவில்லை. ஒரு வாரத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக்குழு அமைக்கப்படும் என உத்தரவாதம் வழங்கினீர்கள். ஆனால் ஆறு வாரம் கடந்தும் அணுவும் நகரவும் இல்லை.

உங்கள் உத்தரவாதம் இது தானா? தென்னிலங்கை அரசியல்வாதிகளை தமிழ் அரசியல்வாதிகளும் விஞ்சிவிடுவார்களோ எனும் ஐயம் எழுகின்றது. எனவே உயிர் காக்கும் உத்தம சேவையினை ஸ்திரப்படுத்த வேண்டியது உங்களின் தார்மீக கடமையாகும். அதனை விரைவாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்ளுகின்றோம்' என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .