2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது ’கண்ணீருக்கு என்ன பதில்?’ -

Editorial   / 2017 மே 31 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தங்களுடைய உறவுகளைத் தேடித்தருமாறு வலியுறுத்தி, கிளிநொச்சியில் ஆரம்பித்த போராட்டம், தீர்வேதுமில்லாத நிலையிலே 100ஆவது நாளை எட்டியிருக்கிறது. தங்களுடைய நியாயமான கோரிக்கைக்கு, நிச்சயமாக ஒரு தீர்வு கிட்டும். காணாமலாக்கப்பட்ட தங்களின் உறவுகளைப் பற்றிய சேதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இந்தப் போராட்டத்தை இந்த மக்கள் ஆரம்பித்திருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கை, இன்றுவரை வெற்றியளிக்கவில்லை. இந்த மக்களின் நிலைமையைக் கருத்திற்கொண்டு, இனியும் தாமதிக்காது, உடனடியாக உரிய தீர்வினை முன்வைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என, சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தெரிவித்தது.

இது தொடரடபில், அவ்வமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார் கூறியதாவது,

“தற்போதைய ஆட்சியானது, மிகக்கூடுதலான ஜனநாயக அடித்தளத்தைக் கொண்டது எனவும் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறையுள்ளது என்றும் கூறப்படுவதைக் கருத்திற்கொண்டே, இந்த நெடிய போராட்டத்தை நம்பிக்கையோடு இந்த மக்கள் நடத்தி வருகின்றனர்.

தீர்வு கிட்டும் என்று எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு, குறைந்தபட்ச நம்பிக்கை அளிக்கக்கூடிய ஆரம்பகட்ட நடவடிக்கைகளையாவது அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும். அதற்கான அழுத்தங்களை நாடாளுமன்றத்திலும் வெளிச்சூழலிலும் ஏற்படுத்தியிருக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கிவரும் அரசியல் சக்திகளுக்குண்டு.

இந்தச் சக்திகள், முறையாகச் செயற்பட்டிருக்குமானால், இன்று இந்த மக்கள் 100 நாட்களைக் கடந்தும், எத்தகைய தீர்வும் இல்லாத நிலையில் இந்தத் தகரக் கொட்டகையினுள் மழையிலும் வெயிலிலும் சோர்ந்திருக்க வேண்டியிருந்திருக்காது. குறைந்தபட்சம் இந்த மக்களை, ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்தித்துப் பேசுவதற்கான ஏற்பாட்டையாவது மேற்படி அரசியல் சக்திகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.

தனிப்பட்ட ரீதியிலான அரசியல் தேவைகளுக்காக நேரம் ஒதுக்கி, தங்கள் வீடுகளுக்கு ஜனாதிபதியையும் பிரதமரையும் அழைக்கின்ற அக்கறையை ஏன் இந்த மக்களுக்காக முன்னெடுக்கவில்லை என்று, இவ்வமைப்பு கேட்கிறது.

வலிகளைச் சுமந்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, தீர்வே மகத்தான மருந்தாகும். அந்த மக்களை, தொடர்ந்தும் வலிகளில் துவளவிடுவதில்லை. இது, பொது விதிக்கும் மருத்துவ முறைக்கும் உரியதல்ல. ஆகவே, இனியும் தாமதங்களை ஏற்படுத்தாது, இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கைகளை, முயற்சியை சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்புக் கோருகிறது” என, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X