2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் கர்ப்பிணி பெண் திடீர் மரணம்

Editorial   / 2020 மார்ச் 03 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில் கல்மடு பகுதியைச் சேர்ந்த இளம் வயது கர்ப்பிணி பெண், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களைக் கடுமையான சோகத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இது குறித்து தெரிய வருவதாவது, 

சம்புக்குளம் கல்மடு பகுதியைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண், நேற்று (02) காலையிலிருந்து கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். 

இருப்பினும் அது சிறுநீர் தொற்று காரணமாக ஏற்பட்ட வயிற்று வலி என நினைத்து, எவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த நிலையில் பிற்பகல் திடீரென மயங்கி விழுந்தவரை தருமபுரம் வைத்தியசாலையில் சேர்ப்பித்தபோது அவரது இதயம் இயக்கத்தை நிறுத்தியிருந்தது. 

தருமபுர வைத்தியசாலை ஊழியர்களால் கடுமையாக முயற்சித்து இதயத்தை மீள இயங்க வைத்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

எனினும்,  ஏற்கெனவே ஏற்பட்டிருந்த அதிக இரத்தப்போக்கு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

கருவானது, கர்ப்ப பைக்கு வெளியே தங்கியதால் வயிற்றறையில் ஏற்பட்ட திடீர் இரத்தப்போக்கே இந்த மரணத்துக்கு காரணம் என வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற முதலாவது கர்ப்பகால மரணம் இது என்பதால் முழு வைத்தியசாலையும் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 

கர்ப்ப காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, தலைசுற்றல் முதலிய எந்த ஒரு அறிகுறிகளையும் கர்ப்பவதிகள் சாதாரணமாக எடுக்காமல் உடனடியாக தமது பகுதி குடும்ப நல உத்தியோத்தர்களிடம் தொடர்பு கொண்டோ அல்லது அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று ஆலோசனை பெற்றோ கர்ப்பகாலங்களில் ஏற்படக்கூடிய இவ்வாறான அபாய நிலைகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மு.தமிழ்ச்செல்வன்    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .