2021 ஜனவரி 23, சனிக்கிழமை

‘நீர் மட்டம் அதிகரிக்காததால் விவசாயிகளுக்கு நெருக்கடி’

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி மாவட்டத்தில், குளங்களின் நீர் மட்டம் அதிகரிக்காததன் காரணமாக, நீர்ப்பாசனம் மேற்கொள்வதில் விவசாயிகள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனரென, நாகதம்பிரான் கமக்கார அமைப்பின் தலைவர் சி.கனகசபாபதி தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய குளமாகிய அக்கராயன் குளம், காலபோக நெற்செய்கையின் பசளையிடல், மருந்து வீசுதல் என்பவற்றுக்காக 09 அடி 05 அங்குலத்தில் திறந்து விடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால் மழை பெய்தபோதும், குளத்தின் நீர் மட்டம் அதிகரிக்காததன் காரணமாக, நீர்ப்பாசன முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குளத்தில் காணப்படுகின்ற குறைந்தளவிலான நீரைக் கொண்டு, அனைத்து வயல் நிலங்களுக்கும் நீர்ப்பாசனம் மேற்கொள்ள முடியாது இருப்பதாகவும் கூறினார்.

இதன் காரணமாக, ஐம்பது ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவக் கூறிய அவர், குளத்தின் நீர் மட்டம் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

வழமையாக, அக்கராயன் குளத்தின் நீர் மட்டம் இக்காலத்தில் 10 அடி தாண்டியதாக இருக்குமெனத் தெரிவித்த அவர், ஆனால், தற்போது 10 அடிக்குள் தான் குளத்தின் நீர் மட்டம் காணப்படுகின்றதெனவும் கூறினார்.

பொதுவாக, கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து குளங்களின் நீர் மட்டமும் தற்போது குறைந்தே காணப்படுகின்றனவென, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .