2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

‘பெரும்பான்மைத்துவ ஆட்சி’ என்ற கூற்று நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது’

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள தனது கொள்கை அறிக்கையில், “பெரும்பான்மைத்துவ ஆட்சி” என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமொரு பெரும் நெருக்கடியை தமக்கு ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,  இதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்
போவதில்லையெனவும் கூறினார். 

அத்துடன், தமிழ் மக்களின் சுவாசத்தை நிறுத்திவிடக் கூடிய வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெறுகின்றனவெனவும், அவர் கூறினார்.  

முல்லைத்தீவில், நேற்று (04) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு ​தொடர்ந்துரையாற்றிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள கொள்கை அறிக்கையைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர், இந்த நாட்டினுடைய இனப் பிரச்சினையை முக்கியமாகக் கருதி ஒரு கொள்கை அறிக்கையை வெளியிடுவார் என தாம் எதிர்பார்த்திருக்கவில்லையெனவும் கூறினார். 

 அவர், புதிய சித்தாந்தங்களைச் சொல்வதாகத் தெரிவித்த மாவை சேனாதிராஜா எம்.பி, இந்த நாட்டில், எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த வரலாற்றை மாற்றியமைப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். 

 “ஜனாதிபதி, தனது கொள்கை அறிக்கையில் ஒரு புதிய வார்த்தையைப் பாவித்திருக்கின்றார். அது, பௌத்த - சிங்கள நாடு என்பது மாத்திரமல்ல, பௌத்த சிங்கள பெரும்பான்மைத்துவ ஆதிக்கத்தை நான் கடைப்பிடிப்பேன்; நிலைநாட்டுவேன் என்று சொல்லியிருக்கின்றார்” என, மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

 இந்தக் கூற்று இன்னுமொரு பெரும் நெருக்கடியைத் தமக்குத் தந்திருப்பதாகத் தெரிவித்த அவர், இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமது மொழி உரிமைக்காகவும் தமது நில விடுவிப்புக்காகவும் தமது விடுதலைக்காகவும் பல இலடசம் பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். அதைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட குறிப்பிடவில்லையெனவும் சாடினார். 

 சித்தாந்தத்தையோ, ஜனநாயகப் பண்பாடுகளையோ குறிப்பிடாது, பௌத்த - சிங்களப் பேரினவாத, பெரும்பான்மைத்துவ ஆட்சிதான் இந்த நாட்டில் இடம்பெறும் என உறுதி பூண்டிருப்பதை, தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோமெனவும், அவர் கூறினார். 

 இந்த ஆட்சியால் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துகள், ஜனநாயகத்துக்கு ஏற்படப்போகும் ஆபத்துகள் நிறையவே இருக்கின்றனவெனத் தெரிவித்த அவர், இராணுவ அதிகாரிகள் எல்லாம் தற்போது சிவில் நிர்வாகத்தில் இந்த அரசாங்கத்தால் இணைத்துக்கொள்ளப்படுகின்றனரெனவும் கூறினார். 

 எனவே, தமது இனமும் நிலமும் விடுதலை பெறும்வரையில் ஜனநாயக ரீதியாக தொடர்ந்தும் போராடுவோமென, மாவை சேனாதிராஜா எம்.பி மேலும் கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--