2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

மன்னார் மனிதப் புதைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த உத்தரவு

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.அகரன்

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை, தற்காலிகமாக எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இரா. கண்ணன், இன்று (13) உத்திரவிட்டதாக, சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரட்னவேல் தெரிவித்தார்.

இன்று வவுனியா மேல் நீதின்றத்தில், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட மன்னார் சதோச மனிதப் புதைகுழி வழங்கில் சட்டத்தரணிகள் சிலர் ஆஜராகுவதற்கு வழங்கப்பட்ட உத்தரவை மீள் பரிசீலனை செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்ததாக சட்டத்தரணி தெரிவித்தார்.

தொடர்ந்தும் சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரட்னவேல் கருத்துத் தெரிவித்ததாவது,

“இன்றையதினம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிமன்றத்தில் மன்னார் புதைகுழி சம்பந்தமாக மன்னார் நீதவான் மேற்கொண்ட ஒரு கட்டளையை மீளாய்வு செய்வதற்கான ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தோம்.

“இந்த மாதம் மார்ச் 10ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான், குறித்த மன்னார் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதாவது காணாமற்போன குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் பங்குகொள்வதற்கு எந்தவிதமான அருகதையும் தகுதியுமில்லை என்றும் எனவே அவர்கள் சார்பாக சட்டத்தரணிகளும் இந்தச் சட்ட நடவடிக்கையில் பங்குபெற்றக் கூடாதென்று கட்டளை பிறப்பித்திருந்த சந்தர்ப்பத்தில், அதற்கெதிராக நாங்கள் மீளாய்வு விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தோம்.

“அந்த விண்ணப்பத்தில் என்னவென்றால் தொடக்கத்தில் மிகவும் திறந்த விடயமாக நடத்தப்பட்ட அகழ்வு ஆராய்ச்சியும் அதன் சான்று பொருள் சேகரிப்பும் இடைநடுவில் வித்தியாசமாக மாற்றப்பட்டது.

“ஏனென்றால், அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பல எச்சங்கள், அதாவது 28 இளம் சிறார்களின் எலும்புக்கூடுகள் மற்றும் பிஸ்கட் பெட்டியின் லேபள், கைகள் பின்னால் சங்கிலியால் கட்டப்பட்டு அந்த நிலையில் காணப்பட்ட மனித எலும்புக்கூடு என்பவற்றை,  ஊடகங்கள் படம்பித்துப் பிரசுரித்தன. அதனைப் பொறுக்க முடியாத அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி, இதனை ஏதோ ஒரு வகையில் நிறுத்துவதற்கும் ஊடகங்களின் பங்களிப்பை தடுப்பதற்காகவும், காணாமற்போன குடும்பங்களின் பங்களிப்பைத் தடுப்பதற்காகவும் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே, சட்டமா அதிபரின் ஒரு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தி, சட்டமா அதிபர் நீதிமன்றத்துக்கு வந்து நாங்கள் காணாமல் போனோரைப் பிரதிநிதிப்படுத்தற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார்.

“ஆனால், இந்த நடவடிக்கையானது ஒரு மரண விசாரணை நடவடிக்கையல்ல. எலும்புக்கூடு மட்டுமல்ல அவை சார்ந்த பொருட்களின் கால அளவும் நிர்ணயிக்கப்பட வேண்டும். எனவே, ஒரு தவறான நிறுவனத்துக்கு இந்தச் சான்றுகள் அனுப்பப்பட்டு ஓர் அறிக்கையை 300 ஆண்டு என்று வந்துவிட்டது.

“அதை மட்டும் கவனத்திற் கொள்ளாது, நீதிமன்றம் ஏனைய சான்றுகள் வரும் வரையும் பொறுத்திருக்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோள் இந்த விண்ணப்பத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனை பரிசீலித்த நீதிமன்றம், எங்களுடைய விண்ணப்பத்துக்கான முகத்தோற்றத்தில் அளவான முன்னணி காரணங்கள் இருப்பதாக திருப்திப்பட்டு இந்த வழக்கின் நடவடிக்கைகள் எதிர்வரும் 16, 17ஆம் திகதி  இடைநிறுத்துமாறு மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு கட்டளையிட்டு இடைக்காலத் தடை உத்தரவையும் வழங்கியுள்ளார்.

“எனவே, நாங்கள் காணாமல் போனோரின் குடும்பங்களின் சார்பாக இந்த விடயத்தில் நீதிமன்றத்தை அணுகி அதில்  எங்களுக்கு சார்பான ஓர் உத்தரவு கிடைத்துள்ளது. அது எதிர்வரும் 27ஆம் திகதி வரை அந்தத் தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X