2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட மீனவர் பிரச்சினை தொடர்பில் அசமந்தம்

Princiya Dixci   / 2016 மே 23 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

வெளிமாவட்ட மீனவர்களின் ஊடுருவலினால் முல்லை மாவட்ட மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து, அவற்றுக்கு நிரந்தரமான தீர்வை காண்பதற்காக கடற்றொழில் அமைச்சால் நியமிக்கப்பட்ட 8 பேர் கொண்ட குழு செயற்படாமல் இருப்பதாக மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

இந்தக் குழு ஒரு வார காலத்துக்குள் ஆராய்வுகளை மேற்கொண்டு, அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் எனக் கூறப்பட்ட போதும்,  1 ½ மாதங்கள் கடந்தும், குழு செயற்படாமல் இருக்கின்றது.

குழுவின் அசமந்தப்போக்கு குறித்து விரக்தியடைந்துள்ள மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வெளிமாவட்ட மீனவர்களின் ஊடுருவலைத் தடுப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கோரியுள்ளனர்.

முல்லை மாவட்ட கடற்பரப்பில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அத்துமீறி தொழில் செய்வதுடன் சட்ட விரோதமான முறையில் தடை செய்யப்பட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் முல்லை மாவட்ட மீனவர்கள் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வருவதுடன் கடலுணவுகளின் உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்படுகின்றது.

இந்நிலை குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடமும் கடற்றொழில் அமைச்சரிடமும் பல தடவைகள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து இதற்கு சமரசமான முறையில் தீர்வு காண முன் வந்துள்ள கடற்றொழில் அமைச்சர் கடந்த ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட மீனவர்களுடனும் கலந்துரையாடினார்.

இதையடுத்து இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிட்டும் வகையில், வெளிமாவட்ட மீனவர்களின் ஊடுருவல் பற்றியும் எத்தனை மீனவர்கள் தொழிலில் ஈடுபடுகின்றார்கள்?. இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்பன பற்றியும் விரிவாக ஆராய்ந்து ஒருவார காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக திட்டமிடல் கண்காணிப்பு பணிப்பாளர் தலைமையில் 08 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தார்.

இக்குழுவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர், முல்லை மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் உட்பட பல அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .