Menaka Mookandi / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் தற்போது சந்தித்திருப்பது ஒரு பயனற்ற விடயமே. இது எவ்விதத்திலும் பயன்படப் போவதில்லை. இவர்களால் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது:-
"இந்த இணைவில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் நான் அந்த நிகழ்வுக்குப் போகவில்லை. இலங்கையில் தமிழர்கள் என்ற ஒரு இனம் இருப்பதற்கும் அந்த இனத்தின் பிரச்சினைகள் இன்று சர்வதேச ரீரியில் கொண்டு செல்லப்பட்டதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளே காரணம். புலிகள்தான் எங்களுடைய பிரச்சினைகளை வெளியுலகிற்கு கொண்டு சென்றார்கள் என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.
முள்ளிவாய்க்கால் எங்களுடைய முடிவல்ல. அது எங்களுடைய ஆரம்பம். அதிலிருந்து நாங்கள் மீண்டும் எழுவோம். புலம் பெயர்ந்து வாழ்கின்ற எமது மக்கள் தான் எங்களுடைய பலம்.
அங்கு அவர்கள் நாலுபேர் கூடிநின்று ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. புலம்பெயர் தமிழர்கள் இன்று ஒன்று திரண்டுள்ளார்கள். அவர்கள்தான் இப்பொழுது எங்களுடைய உரிமைப் பிரச்சினைகளை கொண்டு செல்கின்றார்கள்" என்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், "மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுபவர்கள் எமது இனத்திற்குள்ளும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசவேண்டும்.
வெறுமனே ஒரு தரப்பால் மட்டும் மீறப்பட்ட மனித உரிமை மீறல்களைப் பேசுபவர்கள் உண்மையான மனித உரிமை வாதிகளாகவோ அல்லது ஜனநாயகவாதிகளாகவோ இருக்க முடியாது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற எல்லா மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசவேண்டும்.
அவ்வாறு பேசுவதுதான் இவ்வாறான நாட்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும். நேற்று நடந்தவற்றை மட்டும் மனித உரிமை மீறல்களாக பேசிக்கொண்டு, அதற்கு முன்னைய காலங்களில் எமது இனத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களின் வரலாற்றைப் பேசாமல் இருப்பது நியாயமற்றது.
முஸ்லிம்கள் 24 மணிநேரத்திற்குள் தமது சொந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்ட நிகழ்வையும் பேசுங்கள். அவையும் அப்பட்டமான மனித உரிமை மீறலே.
இதையும் பேசிக்கொண்டு இன்னொரு இனத்தால் எம்மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசுவது நியாயமானது. மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசும் போது இரு பக்கங்களையும் பார்க்க வேண்டும். எல்லா மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேச வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், யோகேஸ்வரன், சி.சிறிதரன் மற்றும் ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், மனித உரிமை இல்லத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி கணேசலிங்கம், வவுனியா நகர சபைத் தலைவர் நாதன், மனித உரிமை இல்லத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் மேகலா, வவுனியா பிரதேச செயலர், கிராம அலுவலர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பொரும்பாலானவர்கள் கலந்துகொண்டனர்.
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025