2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மன்னார் பிரதான பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் பிரதான பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்  விபத்தில் கடற்படையினர் இருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் காசநோய் தடுப்புப்பிரிவு வைத்தியர் யூட் ரவி பச்சக் என்பவரும் இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் பொதுவைத்தியசாலையில் கடமையாற்றும் குறித்த வைத்தியர் தனது கடமை நேரம் முடிவடைந்த நிலையில்  மன்னார் பொதுவைத்தியசாலையிலிருந்து வங்காலையிலுள்ள தனது இருப்பிடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றது.  தள்ளாடி வீதியூடாக மன்னார் பாலம் வழியாக  வந்த கடற்படையினரின் அதிவேக மோட்டார் சைக்கிளும் வைத்தியரின் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடனொன்று நேருக்குநேர் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

 இதனைத் தொடர்ந்து பாலத்தின் வழியாக  வந்த பஸ்ஸை இடைமறித்த ஏனைய கடற்படையினர்,  பஸ்ஸில் பயணித்தவர்களை  இறக்கி விட்டு விபத்தில் காயமடைந்த இரண்டு கடற்படையினரையும் மாத்திரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர்  இந்த விபத்து குறித்து  மன்னார் வைத்தியசாலைக்கு தகவல் வழங்கப்பட்டு அம்பியூலன்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டு வைத்தியர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குறித்த வைத்தியருக்கு ஒரு கால் முறிவடைந்துள்ளதுடன், உடம்பிலும் காயங்கள் காணப்படும் நிலையில்  அவர்   தற்போது  மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மன்னார் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.அசாத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--