2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

'தமிழ் இளைஞர், யுவதிகள் சிறையில்; புலித் தலைவர்களை பாலூட்டி வளர்க்கின்றனர்'

Suganthini Ratnam   / 2013 ஜூலை 30 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

சிறைச்சாலைகளில் தமிழ் இளைஞர், யுவதிகள் பல வருடங்களாக வாடுகின்றபோது கருணா அம்மான் மற்றும் கே.பி. க்கு பாலூட்டி வளர்க்கின்றனர். தயா மாஸ்டரை தாலாட்டுகின்றார்கள். தமிழினிக்கு விடுதலை. இவர்களால் வழிநடத்தப்பட்டு பிடித்துச் செல்லப்பட்டு புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டவர்கள் இன்றும் சிறையில் வாடுகின்றனர் என்று ஜே.வி.பி. யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதிலும் 89 ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகள் வாழ்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

'தேசிய ஒற்றுமைக்காக ஜே.வி.பி.யை வெற்றி பெறச்செய்வோம்' எனும் கருப்பொருளில் வவுனியா நகர மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'ரோகன விஜயவீரவினால் கடந்த 32 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஜே.வி.பி. யின் பொதுக்கூட்டத்திற்கு பின்னர் தற்போது வடமாகாணத்தில் வவுனியாவில் பொதுக்கூட்டத்தை நாம் சோமவன்ச அமரசிங்க தலைமையில் நடத்துகின்றோம்.

அப்போது ரோகன விஜயவீர உரையாற்றுகையில்; இந்த நாட்டில் தமிழர்,  சிங்களவர், முஸ்லிம்; என்கின்ற பாகுபாடின்றி எமது நாடு என்கின்ற நிலை ஏற்படும்வரை இலங்கைக்கு விமோசனம் இல்லை என தெரிவித்திருந்தார்.  ஆனால், துரதிஷ்டவசமாக 30 வருட யுத்தத்திற்கு நாம் அனைவரும் முகம் கொடுத்திருந்தோம்.

இந்த 30 வருட யுத்தத்தால் தமிழ், சிங்கள மக்கள் அனைத்தையும் இழந்தார்கள்.  அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி எனும் ஆட்சியாளர்களால் தென் பகுதியில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். எமது தலைவரும் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வட பகுதியில் இருந்த இளைஞர்கள் கைதுசெய்யப்படுகின்ற, கொல்லப்படுகின்ற சம்பவங்களை அடுத்து மூர்க்கத்தனமான யுத்தம் வெடித்து பல உயிர்கள் பலியெடுக்கப்பட்டன.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்கள் நம்பினார்கள் எங்களுக்கு வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என. அன்று யுத்தத்தின் பிடியில் இருந்த மக்கள் வருகின்றபோது அவர்கள் எதிர்பார்த்தார்கள் எங்களுக்கு விமோசனத்தை பெற்று தருவதற்கு ராஜபக்ஷ அரசாங்கத்தால் தான் முடியும் என. ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்த பின்னர் மக்களுக்கு விமோசனம் கிடைத்துள்ளதா? விடுதலை கிடைத்துள்ளதா? மக்களுக்கு சுதந்திரமாக நடமாட முடியுமா என பார்க்கும்போது எல்லா பிரதேசத்திலும் இராணுவ ஆதிக்கத்தின் கீழ், அவர்களது இரும்பு காலடியின் கீழ் அகப்பட்டுள்ளார்கள்.

யுத்தம் முடிந்த கையோடு மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்த வடக்கிற்கு வசந்தம் என்றனர். கிழக்கிற்கு உதயம் என்றனர். ஆனால் கிழக்கில் உதயம் நடந்துள்ளதா,  வடக்கில் வசந்தம் வீசுகின்றதா என தேடிப்பார்க்கின்றபோது எதுவுமே இல்லை.

எல்லாவற்றுக்கும் மாறாக வடக்கில் வாழும் மக்கள் இன்னும் அகதிகளாக வாழ்கின்றனர். அவர்களுக்கு சொந்தமான காணி இன்னமும் பறிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலயம் என கூறிக்கொண்டு பல்தேசியக் கம்பனிகளுக்கும் நாட்டின் காணிகள் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடம் கொடுக்காதவர்கள் வேறு யாரும் அல்ல.

இன்று வடக்கில் மாத்திரம் 37 ஆயிரத்திற்கும் அதிகமான விதவையாக்கப்பட்ட பெண்கள் இருக்கின்றார்கள். நாடு முழுவதும் 89 ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்கின்றார்கள். 8 ஆயிரத்திறகும் அதிகமான தாய், தந்தையை இழந்த சிறுவர், சிறுமியர்கள் பரிதவிக்கின்றனர். 8 ஆயிரத்திற்கும் அதிகமான முதியவர்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் அநாதைகளாக்கப்பட்டுள்ளார்கள். இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு சுமூகமான வாழ்வை ஏற்படுத்துவதற்கு பதிலாக மேலும் மேலும் சுமைகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்கள்.
வவுனியா சிறைச்சாலையில் இருந்து கொழும்பு சிறைச்சாலையை எடுத்துக்கொண்டாலும் சரி அனைத்து சிறைச்சாலையிலும் 10 வருடங்கள், 17 வருடங்களாக இளைஞர், யுவதிகள் வாடும் நிலையை பார்க்கின்றோம்.

இவர்கள் இவ்வாறு வாடும்போது கருணா அம்மானுக்கு பால் ஊட்டி வளர்க்கின்றனர். கே.பி. க்கு பால் ஊட்டுகின்றார்கள். தயா மாஸ்டரை தாலாட்டுகின்றார்கள். தமிழினிக்கு விடுதலை. இவர்களால் வழிநடத்தப்பட்டு பிடித்து செல்லப்பட்டு புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டவர்கள் இன்றும் சிறையில் வாடுகின்றனர். இதனால் வடக்கில் வாழ்பவர்களுக்கு இன்னும் வசந்தம் வீச வில்லை.

இவ்வாறான நிலையில் நாம் வடக்கில் வாழும் தமிழர்களுக்கு மட்டும் தான் பிரச்சினை என நினைக்க கூடாது. இங்கு அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கையில் மிகவும் வறுமையான பிரதேச செயலாளர் பிரிவாகவுள்ளது சிங்கள மக்கள் வாழும் சியம்பலாபிட்டடிய பிரதேச செயலாளர் பிரிவு காணப்படுகின்றது. இலங்கையில் கூடுதலாக விபசாரம் நடைபெறும் மாவட்டத்தை தேடிப்பார்க்கும்போது சிங்கள மக்கள் கூடுதலாக வாழும் அநுராதபுரம் மாவட்டமாக உள்ளது.

கொழும்பில் சேரிப்புரத்தில் வாழ்பவர்கள் சிங்களவர்களாக உள்ளதுடன், போதைபொருளுக்கும் கஞ்சா கசிப்புக்கு அதிகமாக அடிமையாகியுள்ளவர்கள் யார் என பார்த்தால் அது சிங்கள இளைஞர், யுவதிகளாகவும் காணப்படுகின்றனர்.

35 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பில்லை. 35 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பில்லை. இவர்களிலும் அதிகமானவர்கள் சிங்கள மக்களே. அதனால் இந்த நாட்டில் உள்ள பிரச்சினை அனைவருக்கும் உரியதாக உள்ளது. இவற்றுக்கெல்லாம் பொருளாதார பிரச்சினையே முக்கியமாக உள்ளது.

இவ்வாறான நிலையில் ஆட்சியில் உள்ள ராஜபக்ஷ அரசு தனது குடும்ப நலனிலேயே அக்கறை காட்டுகின்றது.  நாட்டில் தேவையற்ற விதத்தில் விமானம் இறங்காத விமான நிலையமும் கப்பலே வராத துறைமுகமும் அமைக்கப்பட்டு பயனற்ற அபிவிருத்தி நடந்துள்ளதே தவிர மக்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படவில்லை' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--