2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வாக்குகளை சிதறடிக்கவே சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன: சிவசக்தி ஆனந்தன்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

நடைபெறவுள்ள வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கத்துடன் சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இவ்வாறான குழுக்களை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் நேற்று சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய வெற்றியைப் பெற்றுக்கொள்ளும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால், கூட்டமைப்புக்கு கிடைக்கக் கூடிய வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கத்துடனேயே சுயேட்சைக் குழுக்கள் பல களமிறக்கப்பட்டுள்ளன.

வடமாகாண சபைத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும். இதில் பாரிய ஒரு வெற்றியை நாம் பெற்றுக்கொள்வது அவசியம். எமக்குக் கிடைக்கக்கூடிய இந்த வெற்றியை குறைக்கும் வகையிலேயே சுயேட்சைக் குழுக்கள் போட்டிக்கு நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களில் இருந்தவர்கள் இதுவரையில் எங்கே இருந்தார்கள். தமிழர்களுக்காக என்ன செய்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது.  தமிழ் மக்களின் போராட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டவர்களும் இன்று சுயேட்சைக் குழுக்களாக தமிழ் மக்கள் முன்வந்து வாக்கு கேட்கின்றார்கள். இவர்களை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்து கூட்டமைப்பு பாரிய வெற்றி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். இதன் மூலமாகவே பலமான மாகாண சபை ஒன்றை நாம் அமைத்துக்கொள்ள முடியும்.

வடபகுதியில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் கொண்டுவந்து இறக்கப்பட்ட மக்கள் இன்றும் தமது வாழ்வாதாரத்துக்கு வழியற்றவர்களாகத்தான் உள்ளார்கள். போரில் ஊனமுற்றவர்களுக்கான வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் பலமான ஒரு மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும்.

சுயேட்சைக் குழுக்கள் பல போட்டியிடும்போது அவற்றுக்குச் செல்லக்கூடிய சிறியளவிலான வாக்குகளும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாரிய வெற்றிபெறச் செய்யும் அதேவேளையில், சுயேட்சைக் குழுக்களை தமிழர்கள் முற்றாக நிராகரிப்பதும் அவசியம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X