2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி.

Kogilavani   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினரின்  துணையுடன் வன்னிப் பகுதியில் பெருமளவிலான  காட்டுமரங்கள்; கடத்;தப்படுவதாக வன்னி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பெறுமதி வாய்ந்ததும் பலவருடங்கள் பழமையானதமான பாலை, முதிரை போன்ற காட்டு மரங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்க மற்றும் படைத்தரப்பின் செல்வாக்கினைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சில தனிநபர்கள் தொடர்ச்சியாக பெறுமதி வாய்ந்த இம் மரங்களை வெட்டி விற்பனை செய்து பெரும் இலாபம் ஈட்டுகின்றனர். இவ் வருமானத்தின் ஒரு பகுதியை தமக்கு உதவிய அரசாங்க மற்றும் படைத்தரப்பினருக்கும் வழங்கி வருகின்றனர். மேலும் படைஉயர் அதிகாரிகள், அரசின் உயர் மட்டத்தில் உள்ளோரும் இத்தகைய பேரழிவு நடவடிக்கையை நேரடியாகவும் மறைமுகமாவும் தமது இலாப நோக்கிற்காக செய்து வருவதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தமது வீட்டு நிர்மாணத்திற்காக வீட்டில் இருக்கின்ற சாதாரண வேப்ப மரங்களையே  வெட்டுகின்றபோது அதனை தடுத்து, வெட்டிய மரங்களை பொலிஸாரும் வன இலாகாவும் பறிமுதல் செய்கின்றனர்.

ஆனால் பெருந்தொகையாக அரியவகை மரங்கள் கடத்தப்படுகின்றபோது எந்தவொரு நடவடிக்கையும் உரிய அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை. குடியேற்றம் என்ற பெயரில் எமது நிலம் அபகரிக்கப்படுகின்ற போதும் பெருமளவிலான தேக்கம் காடுகளும், ஏனைய காடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு பெரியளவில் வருமானத்தை நோக்காக கொண்டு காட்டு மரங்கள் அழிக்கப்படுவதனால், காட்டு வளங்கள் அழிவடைந்து வருவதுடன் சூழல் பாதிப்புக்களும் ஏற்பட்டு, இயற்கைச் சமநிலையும் குழப்பமடைந்து வருகின்றது. சுற்றுச் சூழல் மாசடையாமல் இயற்கையை பாதுகாப்பது என்ற சர்வதேச கோட்பாடுகளையும் மீறி வெறுமனே தமிழர் பிரதேசம் என்பதால் வகைதொகையின்றியும் கேட்பார் இல்லை என்ற போக்கிலும் இதனை அரசு அனுமதிப்பதை கண்டிப்பதோடு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

அத்துடன்,  வவுனியா மாவட்டத்தில் 50 க்கு மேற்பட்ட கற்குவாரிகள் அரச செல்வாக்குடன் இயங்கிவருகின்றது. இவற்றில் பெரும்பாலான பகுதிகளில் நிலமட்டத்தில் காணப்படுகின்ற கற்களை 5 தொடக்கம் 10 அடி ஆழம் வரை உடைத்து எடுத்து வருகின்றனர். இதனால் நிலத்தில் பாரிய குழிகள் ஏற்பட்டு நீர் தேங்கி சுகாதார கேடுகளும்களும் ஏற்படுகின்றது.

மேலும், வவுனியாவின் பல பகுதிகளிலும் 20 அடி ஆழம் வரை கிரவல் அகழப்பட்டு வருகின்றது. இவ்வாறு சட்டதிட்டங்களையும் மீறி அனுமதிகளையும் பெறாமல் நிலம் அகழப்படுவதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தாமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பாலை, முதிரை மரங்களை கொள்ளையிடுதல், தேக்கம் காடுகளை அழித்தல், சட்டத்திற்கு முரணான வகையில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் கற்குவாரிகள் இயங்குதல், கிரவல் அகழ்தல் என்பன தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி எமது வளங்களைப் பாதுகாக்க முன்வரவேண்டும்' எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .