2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மக்களின் கோரிக்கைகளை கூட்டமைப்பு அலட்சியம் செய்கின்றது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச சபையினை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பேற்று 36 மாதங்கள் கடந்த நிலையில, மக்களின் சிறிய அபிலாசைகள் கூட நிறை வேற்றப்படவில்லையென மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று(16) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் உபதலைவர் என்ற வகையில் மக்களின் உரிமைகள் பற்றியும், சில கிராமங்களில் இருந்து வருகின்ற கோரிக்கைகளையும் வெளிப்படுத்துகின்ற போதும் அவைகள் இன்று வரை அமுல்ப்படுத்தப்படாத தீர்மானங்களாகவே இருக்கின்றன.

மக்களின் கோரிக்கைகளுக்கான தீர்வுகளை எழுத்து மூலம் சொல்லி விட்டு அதனை நடை முறைப்படுத்தாமல் மன்னார் பிரதேச சபையின் தலைமைப்பீடம் காலம் தாழ்த்தி வருகின்றது .

சில கிராமங்களின் வீதி புனரமைப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட மக்களிடமிருந்தும் ஆலயங்களின் மூலமாகவும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மூலமாகவும் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அல்லது செயற்படுத்துவதற்கு தலைமைப்பீடம் ஏன் காலம் தாழ்த்துகின்றது?

சில கிராமங்களில் வீதி விளக்குகள் பொருத்தப்படாத  நிலையிலும் சில பெரிய கிராமங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

அண்மையில் பேசாலை வைத்தியசாலையில் சிரமதான பணியொன்றினை முன்னெடுக்க மண்அகழும் உபகரணமொன்றை பெற்றுத்தருமாறு உப தலைவர் என்ற முறையில் கோரிக்கை விடுத்திருந்த போதும் அதற்குரிய  ஒழுங்குகள் செய்து தரப்படவில்லை.

இவ்வாறான நிலையில், மக்களின் தேவைகள் பிரச்சினைகள் தீர்க்கப்படாத போதும் மக்களுக்கு சரியான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாத போதும் பிரதேச சபையில் பதவியில் இருப்பது அர்த்தமற்றதாகிவிடும் என்பதால் நான் 3 தடவைகள் மாகாண சபை கூட்டங்களில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளேன்.

அதுமட்டுமின்றி எமது பிரதேச சபை எல்லைக்குள் காணி அபகரிப்புக்கள் அதிகமாக நடைபெற்று வருகின்ற போதும் இதனை தட்டி கேட்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சபையில் உபதலைவர் என்ற வகையில் என்னால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மிக விரைவில் அதாவது 2 வார காலத்திற்குள் அமுல்படுத்தபடாவிட்டால் மக்களை ஒன்றுதிரட்டி பிரதேச சபைக்கு அழைத்து  செல்வதுடன் மக்கள் தரப்பில் இருந்து நேரடியாக கேள்விகள் எழுப்பப்படும் என்பதை தெரிவித்துகொள்கின்றேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--