2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

தமிழர்களின் உரிமைப் போராட்டம் முடியவில்லை: மன்னார் ஆயர் இல்லம்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், மார்க் ஆனந்த்

தமிழர்களின் உரிமைப் போராட்டமானது, அஹிம்சைப் போராட்டமாக ஆரம்பித்து பின்னர் அது ஆயுதப் போராட்டமாக மாறி, கடந்த 2009இல் முடிவுக்கு வந்தது. போர் முடிவடைந்தாலும் தமிழர்களின் உரிமைப் போராட்டம் முடிவடையவில்லை. தற்போது தமிழர்களாகிய நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நமது ஜனநாயக பலம்தான் என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை சார்பாகவும் அவரது ஆலோசனை மன்றத்தின் சார்பாகவும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. ஏ.விக்டர் சோசை அடிகளாரால் நேற்று வியாழக்கிழமை (06) விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

'நமக்கு இருக்கக்கூடிய ஜனநாயக உரிமைகளை உரிய விதத்தில் பயன்படுத்தி, நமது உரிமைகளை வென்றெடுக்கும் வழிவகைகள் பற்றி அதிக சிரத்தையோடு சிந்திக்கவும் செயலாற்றவும் அழைக்கப்படுகின்றோம். குறிப்பாக நமது கையில் இருக்கும் வாக்குச் சீட்டை, சரியான வழியில் பயன்படுத்துவதன் மூலம் நமது உரிமைகளை நாம் உத்தரவாதப்படுத்த முடியும்.

நமது வாக்களிக்கும் உரிமையை நிதானமாகச் சிந்தித்து செயற்படுத்துவதன் மூலம் நமது அரசியல் உரிமைகள் மற்றும் வாழ்வாதார, அடிப்படை உரிமைகளை நாம் வென்றெடுக்கமுடியும்.

குறிப்பாக இன்றைய இலங்கை அரசியல் சூழ்நிலையில் பெரும்பான்மைக் கட்சிகள் சம பலத்தோடு போட்டியிடும் நிலையில், சிறுபான்மை மக்களாகிய நாம் நமது வாக்குகளைப் பயன்படுத்தி தமிழ்த் தேசிய நலன்களை முன்னிறுத்தக்கூடிய பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதன் மூலம், இலங்கை அரசியலை  தீர்மானிக்கும் சக்தியாக எம்மால் விளங்க முடியும்' என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .