2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் மின்சார சபையை முற்றுகையிட்ட மக்கள்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த், எஸ்.றொசேரியன் லெம்பேட்

கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மன்னார் பகுதியில் மின்சாரம் அடிக்கடி தடைப்படுவதால் எற்படும் அசௌகரியங்களை தடுத்து அதனை சீர்செய்து தருமாறு கோரி, மன்னார் மின்சார சபையை இன்று புதன்கிழமை (19) நண்பகல் மக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மன்னார் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள குறித்த மின்சார சபைக்கு முன்னால் கூடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், மின்சாரம் தடை ஏற்படுவதற்கான காரணத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டுமெனவும் மின்சாரத்தை சீராக வழங்க உடன் ஏற்பாடு செய்யுமாறும் மின் அத்தியட்சகரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

மன்னாரில் மின்தடை ஏற்படுவதால் வியாபாரிகள் பெரிதும் நஷ்டமடைவதாக சுட்டிக்காட்டியதுடன் பாடசாலை மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகுவதாக மக்கள் இதன்போது விசனம் தெரிவித்தனர்.  

குறித்த இடத்துக்கு வட மாகாண சபையின் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர் குணசீலன் ஞானசீலன், இம்முறை பொதுத் தேர்தலில் தெரிவாகியுள்ள செல்வம் அடைக்கலநாதன், மன்னார் நகரசபையின் முன்னாள் உப தலைவர் ஜேசுதாசன் ஜெம்ஸ், அருட்தந்தை ஞானபிரகாசம் உள்ளிட்டோரும் வருகைதந்தனர். 

மன்னார் மாவட்ட மின் அத்தியட்சகர் மிஸ்ரக்குடன் மின்சார தடை சம்பந்தமாக இதன்போது இவர்கள் கலந்துரையாடினர். 

மன்னார் மாவட்டத்தில் நிலவும் மின்சார தடை காரணமாக வியாபார ரீதியில் முதலீட்டினை செய்வதற்கு வியாபார நிறுவனங்களோ தொழில் அதிபர்களோ தயங்குவதனால் மன்னார் மாவட்டம் பின்தங்கிபோயுள்ளதாக இதன்போது இவர்கள் சுட்டிக்காட்டினர். 

இதற்கு பதில் அளித்த மன்னார் மின் அத்தியட்சகர் முகமட் மிஸ்ரக், மன்னரில் உள்ள சில அதியுயர் மின் கோபுரங்களில் உள்ள மின் வயரில் உப்புக்கசிவு ஏற்படுவதன் காரணத்தினாலேயே குறித்த  மின் தடங்கள்  ஏற்படுவதாகவும் தன்னாலான அனைத்து முயற்சியினையும் எடுத்து குறித்த பிரச்சினையை தீர்த்து வைப்பதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .