2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

நலன்புரி முகாமிலுள்ள 402 முன்னாள் போராளிகளுக்கு நாளை விடுதலை: அமைச்சர் டி.யூ.குணசேகர

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)
சரணடைந்த நான்காயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் மேலும் போர் காலத்தில் ஊனமடைந்தோர், பரீட்சை எழுதவேண்டிய மாணவர்கள், வயோதிபர்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட  12 ஆயிரம் பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாளை வியாழக்கிழமை வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியுள்ள 402 பேர் விடுவிக்கப்படவுள்ளனர். அத்துடன் மேலும் இரண்டாயிரம் பேரை விரைவில் விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சர் டி.யூ.குணசேகர தெரிவித்தார்.

வடமாகாணத்திற்குரிய புனர்வாழ்வு அதிகார சபையின் பிராந்திய அலுவலகத்தை வவுனியாவில் இன்று புதன்கிழமை காலை திறந்தவைத்து பேசியபோது  மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் யுத்த காலத்தில் பாதிக்கப்பட் 29 அரச அலுவலர்களுக்கு 3.7 மில்லியன் ரூபாய்க்கான காசோலைகளும் வழங்கப்பட்டன. வவுனியா நகர சபையின் எதிர்கட்சி தலைவர் ஜி.ரி.லிங்கநாதன், அமைச்சர் குணசேகரவுக்கும் பிரதி அமைச்சர் விஜயமுனி சொய்ஸாவுக்கும் நகர மக்களின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

மாவட்ட அரச அதிபர், அமைச்சின் செயலாளர், புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் உள்ளிட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அமைச்சர் குணசேகர தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது-

வடக்கு மக்களுடைய நலன் கருதி இந்த பிராந்திய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. எனது அமைச்சு மூன்று முக்கிய பணிகளை மேற்கொண்டுள்ளது. புனர்வாழ்வு அதிகார சபையின் ஊடாக நஷ்டஈடு வழங்கல், சரணடைந்த புலி உறுப்பினர்களுடைய புனர்வாழ்வு பொறுப்பு, நாடுபூராவும் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள 30  ஆயிரம் கைதிகளுடைய பராமரிப்பு நிர்வாகம் என்பன என்னிடம் உள்ளன.

கடந்த ஐந்து மாத காலத்தில் மிகப்பெரிய பணிகளை மேற்கொண்டுள்ளோம். பொதுமக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் இந்த பிராந்திய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஷ்டஈடு வழங்குதலாகும்.

இரண்டு மாதத்திற்கு முன்னர் வடக்கே எனது அமைச்சு நடத்திய நடமாடும் சேவையில் பல அனுபவங்களை கண்டோம். நடமாடும் சேவைக்கு 9 ஆயிரம் பேர் பங்கு பற்றினார்கள். அதில் 36 ஆண்கள் மட்டுமே வந்திருந்தனர். ஏனையவர்கள் அனைவரும் இளம் பெண்கள். அதில் விதவைகளும் அடங்கியிருந்தனர். இது எங்களுக்கு ஒரு புது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சமூகத்தின் அடிப்படையில் பல பிரச்சினைகள் உள்ளதினை உணரமுடிகின்றது. தேவைகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும், பொருளாதார வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதினை உணர்த்துகின்றது எனவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--