2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

மெனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து 986 குடும்பங்களை மீள்குடியேற்ற ஏற்பாடு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 19 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

  (ஆர்.சுகந்தினி)

வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களில் 986  குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் 22ஆம் 24ஆம் 27ஆம் திகதிகளில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில்  சுதந்திரபுரம், தேவிபுரம், வள்ளிபுனம் ஆகிய பகுதிகளிலும்; கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் செம்மலை கிழக்குப் பகுதியிலும் எதிர்வரும் 22ஆம் 24ஆம் 27ஆம் திகதிகளில் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளது. இந்தப் பகுதிகளில் கண்ணிவெடி அகற்றி முடிவடைந்ததற்கான சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ள நிலையிலேயே இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இன்று தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு அவர் கூறினார்.  

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவான சுதந்திரபுரம் பகுதியில் எதிர்வரும் 22ஆம் திகதி மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளது. இங்கு 346 குடும்பங்களைச் சேர்ந்த 1106 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

தேவிபுரம் பகுதியில் எதிர்வரும் 24ஆம் திகதி மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளது. இங்கு 306 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளனர். வள்ளிபுனம் பகுதியில் எதிர்வரும் 27ஆம் திகதி மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளது. இங்கு 307 குடும்பங்களை சேர்ந்த 894 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் செம்மலை கிழக்குப் பகுதியில் எதிர்வரும் 24ஆம் திகதி மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளது. இங்கு 27 குடும்பங்;களைச் சேர்ந்த 91 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.  

மீள்குடியேற்றப்படவுள்ள இந்த மக்களுக்கு உணவுப் பொருட்களும்  தற்காலிகக் கொட்டகைகள் அமைப்பதற்கான கூரைத்தகடுகளும் வழங்கப்படவுள்ளன. அத்துடன், யூ.என்.எச்.சி.ஆர் இன் 20,000 ரூபாய் பணக் கொடுப்பனவும் தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படவுள்ளது. இந்த மக்களுக்கான ஏனைய அடிப்படைத் தேவைகள் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.   

இதேவேளை, கோம்பாவில், இரணைப்பாலை உடையார்கட்டு வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் கண்ணிவெடி அகற்றி முடிவடைந்ததற்கான சான்றிதழ் இன்னும் இரு வாரங்களில் கிடைக்கப்பெறுமெனவும் இதனைத் தொடர்ந்து மெனிக்பாம் நலன்புரி நிலையத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் அங்கு மீள்குடியேற்றப்படுவார்களெனவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .