2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கூட்டமைப்பினர் வந்ததால் பிரதேச சபை அமர்வில் குழப்பம்

Editorial   / 2020 மே 20 , மு.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை அமர்வில், முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டபோது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் கலந்து கொண்டதால், குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

தெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில், நேற்று (19) நடைபெற்றது.

இதன்போது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களும் தேர்தல் வேட்பாளர்களுமான ப.சத்தியலிங்கம், செ.மயூறன் ஆகியோர் சென்றிருந்தனர்.

இதனால் சபை அமர்வில் குழப்பநிலை ஏற்பட்டிருந்ததுடன், ஏனைய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனால், சபை அமர்வு, வெள்ளிக்கிழமை (22) வரை சபை ஒத்திவைக்கபட்டது.

இது தொடர்பாக வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்த போது,

“அஞ்சலி நிகழ்வுக்கு கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.  ஆனால், ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

“இந்த செயற்பாடு  ஒருதலைப் பட்சமான, கட்சி சார்ந்த விடயமாக இருந்ததால், நாம் அதனை புறக்கணித்து, சபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்” எனத் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக பிரதேச சபையின் தவிசாளரிடம் வினவியபோது, அதற்கு பதிலளித்த அவர், அஞ்சலி நிகழ்வை நடத்த முற்பட்ட போது  சில உறுப்பினர்கள் தடங்கல்களை முன்னெடுத்திருந்தனரெனவும் இதனால் சபையிலிருந்து கீழே வந்து அஞ்சலியை செலுத்தியிருந்தோமெனவும் கூறினார்.

அதற்குப் பின்னர் குழப்பங்களை ஏற்படுத்த முனைந்தமையால், வெள்ளிக்கிழமை வரை சபையை ஒத்திவைத்ததாகவும், அவர் கூறினார்.

அத்துடன், அஞ்சலி நிகழ்வுக்கு தான் யாரையும் அழைத்திருக்கவில்லையெனவும் அவர்களாக கேட்டபோது வருவதென்றால் வாருங்கள் என்று சொல்லியிருந்ததாகவும், தவிசாளர் கூறினார்.

மேலும், இன்றயதினம் (செவ்வாய்க்கிழமை) காலை, அனைத்து கட்சியினருக்கும் தொலைபேசி மூலமாக தான் அழைப்பு விடுத்திருந்ததாகவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X