2021 மார்ச் 01, திங்கட்கிழமை

குருந்தூரில் ஆராய்ச்சி நடவடிக்கை ஆரம்பம்

Niroshini   / 2021 ஜனவரி 18 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-விஜயரத்தினம் சரவணன், செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

 

தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள் உள்ளடங்கிய குமுளமுனை - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை மற்றும் மணலாறு - படலைக்கல்லு ஆகிய இடங்களில் இரண்டு புராதான பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து, இராணுவத்தின் அனுசரணையுடன், தொல்லியல் திணைக்களத்தால், இன்று (18), அகழ்வு ஆராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளை இராணுவத்தினர் புடைசூழ தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க, தொல்லியல் அமைச்சின் செயலாளர், முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, குருந்தூர்மலை பகுதிக்கு புத்தர்சிலை ஒன்று கொண்டுவரப்பட்டு, வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு அகழ்வாராய்ச்சி நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் கொடிகள் குருந்தூர் மலை சூழ நாட்டப்பட்டு, நூற்றுக்கணக்கான இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளுக்காக குருந்தூர் மலையிலிருந்து அருகிலுள்ள குமுளமுனை கிராமம் வரைக்கும் நிறுத்தப்பட்டு, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

இந்த பகுதியில் குருந்தாசேவ புராதன விகாரை ஒன்று இருந்ததாக 1932இல் வெளியிடபட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

இது ஒரு தொல்லியல் பிரதேசம் எனத் தெரிவித்த அவர், இங்கே இருக்கும் தொல்லியலை பாதுகாக்க வேண்டியது தொல்லியல் திணைக்களத்தின் கடமை எனவும் இந்த நிலையில் இந்த தொல்லியல் சிதைவுகள் குறித்து அகழ்வு ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை தொல்லியல் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது எனவும் கூறினார்.

இந்த நிலையில் குறித்த மலை பகுதியில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த புராதன ஆதிசிவன் அய்யனார் கோவில்; காணப்பட்ட நிலையில், அங்கு குமுளமுனை, தண்ணிமுறிப்பு கிராம மக்கள் சென்று பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
ஆனால் நேற்றைய தினம் (17) குருந்தூர் மலை பகுதிக்குள் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறான கோவில் அங்கு இல்லாது உடைத்து அழிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் குருந்தூர் மலையில் இருந்த சூலம் உடைத்து எறியப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த கோவில் சின்னங்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .