2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

அழிவடையும் நிலையில் வவுனியா, வீமன்கல் கிராமம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 19 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம்


வவுனியா, வீமன்கல் கிராமத்தில் அடிப்படைத்  தேவைகளுடன் மீள்குடியேற்றம் செய்யப்படாமையால் இந்தக் கிராமம் அழிந்துபோகும் நிலையில் உள்ளதாக இந்தக்  கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவின் கிழக்கு முகமாக மாமடு என்னும் சிங்கள கிராமத்திற்கு அண்மையில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வீமன்கல் கிராமம் சுமார் 250 வருடங்கள் வரலாறு கொண்ட வவுனியாவில் பழமையான கிராமங்களில் ஒன்றாகும்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டமைந்த இந்தக் கிராமம், 1976ஆம் ஆண்டில் முதன் முதல் இடம்பெற்ற இனக்கலவரம் காரணமாக இடப்பெயர்வை சந்தித்தது. அந்தக் காலப்பகுதியில் அங்கு வாழ்ந்த 48 குடும்பங்களும் வவுனியா நகரை நோக்கி இடம்பெயர்ந்தனர். பின்னர் 4 வருடங்கள் கழித்து 1980ஆம் ஆண்டு மீள்குடியேறிய நாம் மீண்டும் 1986ஆம் ஆண்டு இடப்பெயர்வை சந்தித்தோம் எனவும் தெரிவிக்கின்றனர்.
அன்று இடம்பெயர்நது  24 வருடங்களின் பின்னர் 2010ஆம் ஆண்டு 3ஆம் மாதம் மீண்டும் மீள்குடியேறுவதற்காக 69 குடும்பங்கள் வருகை தந்திருந்தனர். எனினும் அப்போது மீள்குடியேறுவதற்கு போதுமான செயன்முறைகள் பின்பற்றப்படாமையினால் பெண்கள் மற்றும் சிறுவர்களுடன் இருந்த குடும்பங்கள் மெல்ல மெல்ல மீண்டும் வவுனியா மற்றும் ஏனைய பிரதேசங்களை நோக்கி செல்லத்தொடங்கியதனால் தற்போது 9 குடும்பங்கள் மாத்திரமே அங்கு தொடர்ச்சியாக இருந்து வருகின்றனர் எனவும் அவர்கள் கூறினர்.

எமது கிராமம் வளமானது என்பதனால் நாம் மீண்டும் எமது காணிகளை புதுப்பித்து வாழும் நோக்குடன் பலத்த எதிர்பார்ப்புடன் வந்திருந்தோம். எனினும் எமது காணிகள் காடாக காட்சியளித்ததனால் துப்பரவு செய்யவேண்டியேற்பட்டது. எனினும் சிலரது முயற்சியினால் சிறு நிலப்பரப்பு துப்பரவு செய்யப்பட்டாலும் முழுமையாக எமது காணிகள் துப்பரவு செய்யப்படாமையினாலும் எமது காணிகளுக்கு பின்னால் காடாக காட்சியளித்தமையினாலும் நாம் குடியிருக்க முடியாதுள்ளது.

பல குடிகள் மீளக்குடியேறும் நோக்குடனேயே இங்கு பாரிய பாடசாலை கட்டப்பட்டாலும் அங்கு படிப்பதற்கு மாணவர்கள் இன்மையால் அது மூடப்பட்டுள்ளது.  வீட்டுத்திட்டம் தருவதாகவும் அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும் நாம் மீள்குடியேற வந்தபோது கூறினார்கள். ஆனால் 3 வருடங்களாகியும் இதுவரை மலசலகூடமே கட்டித்தரவில்லை.  எனவே மக்கள் மீள்குடியேற ஏதுவான நடவடிக்கைகள் செய்யப்படாவிட்டால் இந்தக் கிராமம் சில காலங்களில் அழிந்துபோய் விடும் எனவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனிடம் கேட்டபோது, வீமன்கல் கிராமத்திற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அந்த வகையில் மக்கள் மீள்குடியேறுவதற்கான முதல்க்  கட்ட பணிகளையும் மேற்கொண்டிருந்தோம். குறிப்பாக மக்கள் தமது வீடுகளை அமைப்பதற்கு வீதியோரம் இருந்த காடுகளை வெட்டி கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் அங்கு மக்கள் மீள்குடியேறுவதில் ஆர்வம் காட்டவில்லை. மக்கள் பலர் மீள்குடியேறுவர் என்ற உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே பாரிய பாடசாலை கட்டிடம் கூட கட்டப்பட்டது. எனினும் மக்கள் மீள்குடியேறாமையினால் அந்தப் பாடசாலையும் தற்போது மூடப்பட வேண்டியுள்ளது. மக்கள் மீளக்குடியேறுவார்களேயானால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .