2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

தமிழர் முன்னேற்றக் கழக அறிமுக விழா கிளிநொச்சியில்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழர் முன்னேற்றக் கழகம், தமிழ் மக்களுக்கான தேசிய அமைப்பாக கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மக்களின் கல்வி, கலை கலாசார, தலைமைத்துவ மற்றும் அரசியல் போன்றவற்றில் அபிவிருத்திக்கு கை கொடுப்பதன் மூலம் தமிழ் மக்களை முன்னேற்ற முடியும் என்ற குறிக்கோளுடன் தேசிய அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களே என்ற நிலையில் அதாவது எமக்காக நாம் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு ஆரம்ப்பிகப்பட்டு தமது ஆரம்ப கட்ட நடவைக்கைகளில் களமிறங்கியுள்ளது. அந்த வகையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் தமிழர் முன்னேற்றக் கழகம் தமது அறிமுக நடவடிக்கைளில் இறங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக கடந்த 20ஆம் திகதி கிளிநொச்சியில் தமிழர் முன்னேற்றக் கழகம் தமது அறிமுக நிகழ்வையும் சித்திரை புதுவருட கலை நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்ப்பாடு செய்து நடாத்தி இருந்தது. கிளிநொச்சி மக்கள் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்த அதேவேளை கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண கலைஞர்கள் இந்த கலை நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தனர்.   

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் பிரதம அமைப்பாளர் விநாயகமூர்த்தி ஜனகன், அமைப்பாளர் சந்திரசேகரன் விமலச்சந்திரன், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரலிங்கம் முகுந்தன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அறிமுக உரையை கழகத்தின் பிரதம அமைப்பாளர் விநாயகமூர்த்தி ஜனகன் ஆற்றினார். இதில் கழகத்தின் குறிக்கோள் பற்றிய தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டது. ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கு கல்வி முதன்மையாக இருக்கின்றது. கல்வி அபிவிருத்தியில் ஆரம்பித்து கலை கலாசாரம், விளையாட்டு அபிவிருத்திகளை மேம்படுத்துவதன் மூலம் தமிழ் சமூகத்தை அபிவிருத்தி செய்ய முடியும். எமது தமிழ் இனமும் இன்றைய காலத்தில் மிகப் பெரியளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் அவர்களின் அபிவிருத்திக்கும், மன மாற்றத்திற்கும் கல்வி, கலை, கலாசார, விளையாட்டு அபிவிருத்தி என்பன முக்கியமாகின்றது. இவற்றை அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதாரத்தில் மேம்பட முடியும். இதன் மூலம் வழமான சமூகமாக வளர முடியும் என கூறியவர் தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் போதுமான அறிவை இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை. அரசியலில் இருந்து ஒதுங்கி அல்லது எமக்கென்ன என்ற போக்கில் இருக்கின்றனர். அத்துடன் நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்க தவறிவிட்டனர். இதற்கு தேசிய ரீதியில் நல்ல பல உதாரணங்கள் இருக்கின்றன. பெரும்பான்மையின மக்கள் தமக்கு தேவையான நல்ல தலைவர்களை உருவாக்கி வைத்துள்ளனர். அவர்கள் கட்சி மாறினால் கூட பெருவாரியான வெற்றிகளைப் பெற்றுக் கொள்கின்றனர். தமிழர்கள் மத்தியில் கட்சி ஆதிக்கம் இருக்கின்ற போதும் எமக்கான தலைவர், எம் பிரதேசத்துக்கான தலைவர் எமக்காக களத்தில் இறங்கி நிற்கும் ஒருவர் என்ற ஒருவரை இன்றுவரை நாம் உருவாக்கவில்லை. இந்த நிலை மாறவேண்டும். இளையவர்கள் இதற்காக களமிறங்க வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் இளைய முற்ப்போக்கான தலைவர்கள் உருவாக வேண்டும் என ஜனகன் மேலும் தனது உரையில் தெரிவித்து இருந்தார். 


தமிழர் முன்னேற்றக் கழகம் பதிவிகளை நோக்கமாக கொள்ளாத அமைப்பு. எனவேதான் கழகம் தலைவர், செயலாளர் போன்ற பதவிகளை உருவாக்காமல் தனியே உறுப்பினர்கள் என்ற அடிபப்டையில் தனது நடவடிக்கைகளை எடுத்து செல்கின்றது, இது ஒரு தேசிய அமைப்பு. எனவே சகல மாவட்ட உறுப்பினர்களும் இதில் இணைய வேண்டும், அதற்க்கு இன்னமும் காலமிருக்கின்றது. இப்போது ஒவ்வொரு மாவட்டமாக கழகம் தனது அமைப்புகளை உருவாக்கி வருகின்றது. அந்த வகையில் எமக்கா நாம் என்ற ரீதியில் நாம் எமக்காக உழைக்க வேண்டும். அடுத்த கட்டமாக எமது அடுத்த மாவட்ட மக்களுக்காக உழைக்க வேண்டும். இப்படியாக தமிழர் ஒற்றுமையை காட்டி நாம் ஓர் அமைப்பாக தேசியளவில் உருவாக வேண்டும் என அறிமுக  நிகழ்வில் உரையாற்றிய அமைப்பாளர் சந்திரசேகரன் விமலச்சந்திரன் தெரிவித்தார். நிகழ்வு ஆரம்பத்திற்கு முன்னர் நான் இங்கே உள்ள சமூக ஆர்வலர்கள், இந்த மாவட்டத்தின் வளர்சிக்காக உழைக்கும் சிலருடன் பேசிய போது இந்த மாவட்டத்தில் போருக்கு பின்னர் ஓர் இசை நிகழ்ச்சி, ஒரு நடன நிகழ்ச்சி கூட அரங்கேறவில்லை என தெரிவித்தனர். உண்மையில் இது கவலை தரக்கூடிய விடயம். எங்கள், தமிழரின் அடையாளங்கள் இவை . இவற்றை நாங்கள் படிப்படியாக இழந்து வருகின்றோம். நிச்சயம் இனி வரும் காலங்களில் இந்த நிகழ்வுகளுக்கும், ஏற்பாட்டிற்கும் த.மு.க கை கொடுக்கும். அழுத்தங்களையும் கொடுக்கும் எனவும் விமலச்சந்திரன் மேலும் அங்கே தனது கருத்துகளை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களும் தங்கள் கருத்துகளை வெளியிட்டனர். இந்த அமைப்பு தொடர்பாக தங்களுக்கு சந்தேகங்கள் இருந்தன. பல வழிகளிலும் இருந்தன. இரு பக்கமாகவும் இந்த சந்தேகங்கள் இருதன. தமிழ் மக்களுக்கான அமைப்பு என்று வரும் போது இடையூறுகள் இல்லாமல் எப்படி எடுத்துச் செல்ல முடியும்? இது அரசியல் சம்மந்தபப்ட்ட ஒரு கட்சியா? எல்லோரும் போல் பத்தோடு பதினொன்றாக வந்து வாக்கு சேகரிக்கும் நோக்கம் கொண்டதா? இப்படி பல கேள்விகள் இருந்தன. அனால் இப்போது இந்த அமைப்பு வேறு ஒரு திசையில் வேறு நோக்கங்களுடன், மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக செயற்பட முனைகின்றது. இதை நாங்கள் வரவேற்கின்றோம். எம் மக்களுக்காக, எங்கள் மாவட்டத்திற்க களமிறங்கி செயற்படும் எவரேனும் நாங்கள் ஆதரிப்போம். அவர்கள் யாருக்கு சார்பானவர்கள், எதிரானவர்கள் என்பது எமக்கு தேவை இல்லை. எங்களுக்கு நன்மைகள் கிடைக்க வேண்டும். அப்படியானால் ஆதரிப்போம். இல்லாவிட்டால் ஒரு துளிதானும் எங்களிடமிருந்து ஆதரவை பெற முடியாது எனவும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலைய பேச்சாளர்கள், “இன்றைய சமூக சூழலில் தமிழர் பண்பாடு பொழிவுடன் இருக்கின்றது! நலிவடைந்திருக்கின்றது!” என்ற தலைப்பில் பட்டிமன்ற நிகழ்வை நடாத்தி இருந்தனர். இந்த பட்டிமன்றத்தில் பங்கு பற்றி இருந்தவர்கள் அனைவரும் விசேட தேவைக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை மிக சுவாரசியமாக தமிழ் மக்கள் எதிர் நோக்கும் கஷ்டங்கள், சிக்கல்கள் என்பனவற்றுடன் நாம் எவ்வாறு மாறிக் கொண்டு போகின்றோம். எங்கள் கலாசாரம் மற்றும் அரசியல் என்ன நிலையில் செல்கின்றது போன்ற அம்சங்களுடன் நகைச்சுவையாகவும் வழங்கி இருந்தனர். தமிழ் மக்கள் இந்திய பட்டிமன்றங்களுக்கு வழங்கும் ஆதரவினை ஏன் இவர்களுக்கு வழங்கவில்லை என்ற கேள்வி உண்மையில் எழுந்தது. நகைச்சுவை பட்டிமன்றங்களுக்கு பெயர் போன லியோனியின் பட்டிமன்றத்தை ஒத்த அல்லது அதனை தாண்டிய சிறப்பு இந்த பட்டிமன்றத்தில் இருந்தது. நாங்கள் மாற வேண்டும். இலங்கை கலைஞர்களுக்கு ஆதரவளித்தால் அவர்கள் இன்னும் நன்றாக வளர்வாகள் எனபதற்கு இது ஒரு நல்ல உதாரணமாக அமைந்தது. ஊடகவியலார் முகுந்தன் தலைமையில் எங்கே போகிறோம் என்ற தலைப்பில் கவியரங்கம் இடம்பெற்றது. தமிழர்களின் கலாசாரம் தொடர்பில் கிளிநொச்சியை சேர்ந்த இளையவர்கள் மற்றும் அனுபவஸ்தர்கள் இணைந்து இந்த கவியரங்கத்தை வழங்கி இருந்தனர். நல்ல பல கருத்துகளை தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை சொல்லி இருந்த அதேவேளை, தமிழ் மக்கள் தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவதையும் அவை மாற்றப்பட வேண்டும் என்பதையும் நாசுக்காகவும் தேவையான இடங்களில் நேரடியாகவும் சுட்டிக்காட்டி இருந்தனர் கவியரங்கத்தில் பங்கு பற்றிய கவிஞர்கள்.  

கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம மாணவர்கள் வழங்கிய பரத நாட்டிய நிகழ்வும், கிளிநொச்சி விமல்ராஜின் இசைக்கவி இசைக்குழு வழங்கிய இடைக்கால பாடல்களின் இசை நிகழ்ச்சியும் இந்த நிகழ்வில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகளில் கள ஏற்பாடுகளை கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களே செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையத்தினர் தமக்கு 5 கணினிகள் தேவைபப்டுவதாகவும் அவற்றில் ஒன்றை தமக்கு வழங்குமாறும் த.மு.க பிரதம அமைப்பாளர் ஜனகனிடம் கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கைகையின் அடிப்படையில் ஐந்து கணினிகளையும் வழங்குவதாக கூறிய அவர் அவற்றை  தனது தனிப்பட்ட சமூக சேவை அமைப்பான ஜனனம் அறக்கட்டளையூடாக வழங்குவதாக உறுதி வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாணவர்கள் ஆங்கில மொழியில் மிகவும் பின் தங்கி இருப்பதாகவும் அதற்கு எதாவது நடவடிக்கை எடுப்பதன் மூலம் மாணவர்களின் கல்வியில் மேம்பாட்டை உருவாக்க முடியும். அதற்கான வழிமுறைகளை செய்து தருமாறு நிகழ்வில் கலந்து கொண்ட சிலர் கேட்டுக் கொண்டனர். இதற்கு அமைவாக அங்கிகரிக்கபப்ட்ட நிறுவனம் ஒன்றின் மூலம் தான் இந்த சேவையை வழங்குவதாகவும், அதற்க்கான அங்கிகரிக்கபப்ட்ட சான்றிதழையும் பெற்றுத் தருவதாகவும் உறுதி வழங்கிய ஜனகன் த,மு,க உடனடியாக இந்த வேலைத்திட்டத்தில் இறங்குவதாகவும் மே மாத இறுதிக்குள் வகுப்புக்களை ஆரம்பிக்கும் முகமாக இந்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாகவும் அந்த மக்களிடம் கூறினார்.

உங்கள் எண்ணங்கள் எங்கள் வேலைத்திட்டங்கள் என்ற தொனிப்பொருளில் செயற்ப்படும் தமிழர் முன்னேற்றக் கழகம், கிளிநொச்சி மக்களின் வேண்டுகோள்களை ஏற்று அவர்களுக்கு தேவையான வேலைகளை செய்யும் என நம்ப முடியும். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பல ஆண்களும், பெண்களும் தமிழ் முன்னேற்றக கழக உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .