2021 மே 06, வியாழக்கிழமை

இங்கிலாந்து, பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் மீள் பார்வை

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 06 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.விமல்

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற தொடரில் பாகிஸ்தானுக்கு தொடர் வெற்றி கிடைத்துள்ளது. இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி தொடரை ஆரம்பித்து இருந்தாலும், பாகிஸ்தான் அணி அந்த ஆதிக்கத்தை உடைத்து தங்கள் ஆதிக்கத்தை காட்டி வெற்றியை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி பலமான அணியாகவும் தொடரைக் கைப்பற்றும் வாய்பை அதிகம் கொண்ட அணியாகவும் தொடரை ஆரம்பித்தது. அதை செய்தும் காட்டி விட்டது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு என்ன நடந்தது? மிகுந்த சவாலை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதே போன்று முதற் போட்டியின் வெற்றி வாய்ப்பு போதிய வெளிச்சம் இன்மையால் கை நழுவிப் போனது.

அந்த அடியை சாதகமாக பாவித்த பாகிஸ்தான் மிக சிறப்பாக மீள் வருகையைக் காட்டியது. முக்கியமாக அனுபவம் மிக்க வீரர்கள் தமது பொறுப்பை உணர்ந்து தேவையானவற்றை அணிக்காக செய்து கொடுத்தனர். அடுத்தடுத்து இரண்டு தொடர்கள் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி. இலங்கையில் வைத்து இலங்கை அணியையும், தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் இங்கிலாந்து அணியை 2 இற்கு 0 எனக் கைப்பற்றியுள்ளது.

இந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் நான்கு இன்னிங்ஸ்களும் விளையாடப்பட்டுள்ளன. 3 போட்டிகளுமே  ஐந்து நாட்களும் மதியபோசனம் தாண்டும் வரை நடைபெற்றுள்ளன. முதற் போட்டி முழுமையான நேரம் வரையும் விளையாடப்பட்டுள்ளது. அடுத்த போட்டி தேநீர்பான இடைவேளைக்கு பின்னர் நிறைவடைந்தது. மூன்றாவது போட்டி மதியபோனசத்துக்கு பின்னர் நிறைவடைந்தது. ஆக இரு அணிகளும் சிறப்பாக விளையாடியுள்ளன என்பதற்கு இது நல்ல உதாரணம். டெஸ்ட் போட்டிகள் இறக்கின்றன என சாவு மணி அடிப்பவர்களுக்கு இந்த தொடர் ஒரு சாவு மணியே. கிரிக்கெட் இதுதான் என பாருங்கள் என அவர்களுக்கு நையாண்டி செய்யும் தொடர் இது. 

போட்டிகள் மீள் பார்வை

முதற் போட்டி

ஓட்டங்கள் குவிக்கப்பட்ட ஒரு போட்டி. இலகுவான சமநிலையாக முடியப்போகும் போட்டி என்று பார்த்தல் இங்கிலாந்து தனக்கு முழுமையான வெற்றி வாய்ப்புக்களை உருவாக்கி வெற்றிக்கு போராடியது. ஆனால் நேரம் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. 99 ஓட்டங்கள் வெற்றி இலக்கு என நிர்ணயிக்கப்பட்ட நிலையில்  11 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 74 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 523 ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றது. சொஹைப் மலிக் 245 ஓட்டங்களைப் பெற்று அபார மீள் வருகையைக் காட்டினார்.  அசாத் ஷபீக் 107 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

இங்கிலாந்து அணி அதன் தலைவர் அலஸ்டையர் குக்கின் 263 ஓட்டங்களுடன் 9 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து அணி 598 ஓட்டங்களைப் பெற்றது. ஜோ ரூட் 85 ஓட்டங்களைப் பெற்றார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் வஹாப்  ரியாஸ் 3 விக்கெட்களையும், இம்ரான் கான், சொஹைப் மலிக் ஆகியார் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இரண்டாவது இன்னிங்சை பாகிஸ்தான் அணி துடுப்பாடி நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்க, 173 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. மிஸ்பா உல் ஹக் 51 ஓட்டங்களைப் பெற்றார். அறிமுகப் போட்டியில் அதில் ரசீட் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஜேம்ஸ் அன்டர்சன், மூயேன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். 99 ஓட்டங்கள் மாத்திரமே முன்னிலை பெற முடிந்தது.

நேரம் போதாமை, மற்றும் குறைந்த ஓவர்கள் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு இருந்தது. வேகம் அடித்தாடும் வீரர்களை முன் வரிசையில் அனுப்பி அடித்தாடி வெற்றி பெற இங்கிலாந்து அணி முயன்றது. ஆனாலும் இருள் நிலை உருவாக போட்டியை  நடுவர்கள் சமநிலையில் நிறைவு செய்தனர். இங்கிலாந்து அணி 11 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றது. ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 33 ஒடன்களைப் பெற்றார். சுல்பிகார் பாபர், சொஹைப் மலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக சொஹைப் மலிக் தெரிவானார்.

 

இரண்டாவது போட்டி

பாகிஸ்தான் அணிக்கு 178 ஓட்டங்களினால் வெற்றி கிடைத்தது. முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் 378 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப விக்கெட்கள் வேகமாக வீழ்ந்த போதும் யூனுஸ் கான் (56) , மிஸ்பா உல் ஹக்(102) ஆகியோரது இணைப்பாட்டம் பாகிஸ்தான் அணிக்கு கை கொடுத்தது. பின்னர் வந்த அசாட் சபீக் 83 ஓட்டங்களைப் பெற்றார். மொயின் அலி , மார்க் வூட் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் 242 ஓட்டங்களைப் பெற்றது. ஜோ ரூட் 88 ஓட்டங்களையும், அலஸ்டயர் குக் 65 ஓட்டங்களையும் பெற்றனர். வஹாப் ரியாஸ், யசீர் ஷா ஆகியோர் தலா 4 விக்கெட்களை கைப்பற்றினர். முதல் இன்னிங்சில் நல்ல இணைப்பாட்டத்தை வழங்கிய அதே மூவரும்  இரண்டாம் இன்னிங்சிலும் பிரகாசித்தனர். யூனுஸ் கான் 118 ஓட்டங்களையும்,  மிஸ்பா உல் ஹக் 89 ஓட்டங்களையும், ஆசாட் சபிக் 79 ஓட்டங்களையும் பெற்றானர். பாகிஸ்தான் அணி 3 விக்கட் இழப்பிற்கு 354 ஒட்டங்களைப் பெற்று 491 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. ஜேம்ஸ் அன்டர்சன், மார்க் வூட் ஆகியோர் தலா 2  விக்கெட்களை கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்சில் 312 ஓட்டங்களைப் பெற்று 178 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. இதில் ஜோ ரூட் 71 ஓட்டங்களையும், அதில் ரசீட் 61 ஓட்டங்களையும் பெற்றனர். யசீர் ஷா 4 விக்கெட்களையும், சுல்பிகர் பாபர் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக வஹாப் ரியாஸ் தெரிவானார். 

 

மூன்றாவது போட்டி

தொடரை தீர்மானிக்கும் முக்கிய போட்டி. ஓட்டங்கள் குறைவான இறுக்கமான போட்டி. 5 நாட்களுக்கு இந்த போட்டி சென்றது. ஆனாலும் 127 ஓட்டங்களினால் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வெற்றி கொண்டது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 234 ஓட்டங்களைப் பெற்று தடுமாற இங்கிலாந்து அணி 306 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து அணி மீள் வருகையைக் காட்டியுள்ளது, வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன. தொடர் சமநிலை நோக்கி நகரும் என நம்பினாலும் இரண்டாம் இன்னிங்ஸ், முடிவை தலைகீழாக மாற்றியது. பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் மிஸ்பா உல் கக் 71 ஓட்டங்களைப் பெற இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் ரெய்லர் 76 ஓட்டங்களை பெற்றார். மற்றைய துடுப்பாட்ட வீரர்களும் சராசரி ஓட்டங்களைப் பெற 300 ஓட்டங்களை தாண்டியது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில்  ஜேம்ஸ் அன்டர்சன் 4 விக்கெட்களையும், ஸ்டுவர்ட் ப்ரோட், சமித் பட்டேல், மூயேன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். பாகிஸ்தான் சார்பாக சொஹைப் மலிக் 4 விக்கட்களையும், யசீர் ஷா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்சில் 355 ஓட்டங்களைப் பெற்று 284 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்தது. மொஹமட் ஹபீஸ் 151 ஓட்டங்களைப் பெற்றார். இவரின் துடுப்பாட்டமே பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கை கொடுத்தது. ஸ்டுவோர்ட் ப்ரோட் 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சு இங்கிலாந்து அணியை பதம் பார்த்தது. 156 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இதில் அலஸ்டையர் குக் 63 ஓட்டங்களைப் பெற்றார்.  பந்துவீச்சில் யசீர் ஷா 4 விக்கெட்களையும், சொஹைப் மலிக் 3 விக்கெட்களையும், சுல்பிகர் பாபர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக மொஹமட் ஹபீஸ் தெரிவானார்.

தொடர் நாயகன்

முதல் போட்டியில் விளையாடாத யசீர் ஷா இரண்டு போட்டிகளில் தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார். 15 விக்கட்களை கைப்பற்றி இந்த விருதை தனதாக்கினார். இவருக்கு போட்டியானவர்கள் இருகின்றார்கள் எனக் கூற வாய்ப்புக்களும் இல்லாமல் இல்லை. ஆனாலும் முடிவு இதுவே.

 

சொஹைப் மலிக் ஓய்வு

இந்த தொடருக்காக அணியின் பயிற்றுவிப்பாளர் வக்கார் யூனிசினால் கேட்டு அணியில் இணைக்கப்பட்டவர் சொஹைப் மலிக். இரட்டைச் சத்தத்துடன் மீள் வருகையைக் காட்டியவர் நல்ல பந்துவீச்சு பெறுதியையும் வழங்கிய போதும் தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மூன்றாவது போட்டியில் அறிவித்தார். இவர் முன்னாலள் அணித் தலைவர். ஒதுக்கப்பட்டு இருக்கலாம். மனக் கவலைகள் இருந்து இருக்கலாம். அதனால் செய்து காட்டி ஓய்வை அறிவித்தார். ஆனாலும் இப்படி ஒரு முடிவு தேவையா எனக் கேட்கத் தோன்றுகின்றது. கடந்த காலத்தை மறந்து டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி இன்னும் சில வருடங்கள் விளையாடி இருக்கலாம். யூனுஸ் கான், மிஸ்பா உல் கக் ஆகியோருடன் பார்க்கும் போது இவர் இளையவரே. 33 வயதே இவருக்கு. அவசர முடிவு. இந்த தொடரில் இவர் 6 இன்னிங்சில் 292 ஓட்டங்களைப் பெற்றார். இதில் முதல் இன்னிங்சில் 245 ஓட்டங்கள். 11 விக்கெட்களைக் கைப்பற்றினார்.  

 

கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்

அதிக ரன்கள்

 

அலஸ்டையர் குக்               3              5              0            450         263         90.00     47.36     1              2

மொஹமட்  ஹபீஸ்           3              6                0           380          151         63.33      56.88     1               2

மிஸ்பா-உல்-ஹக்               3              6              0              352         102         58.66      49.02    1              3

ஆசாட் ஷபிக்                        3              6              0              326         107         54.33     49.17     1              2

யூனிஸ் கான்                        3              6              0              302         118         50.33      50.84    1              1

சொயிப் மாலிக்                    3              6              0              292         245         48.66      54.27    1              0

ஜோ  ரூட்                                3              6              1              287         88           57.40     54.45     0              3

இயன்  பெல்                           3              6             1               158         63           31.60      31.53    0              1

சப்ராஸ் அஹமட்                 3              6              1              139         39           27.80      66.19    0              0

ஜொனி பெயர்ஸ்டோவ்        3              6              0              134         46           22.33      37.11    0              0

ஆதில் ரசீட்                            3              5              0              103         61           20.60      30.83    0              1

 (போட்டிகள், இன்னிங்ஸ், ஆட்டமிழக்காத இன்னிங்ஸ், ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதம், அரைச்சதம்)

கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்

யாசிர் ஷா                                     2              4                124         323         15             4/44      8/180     21.53     2.60

ஜேம்ஸ்  அன்டர்சன்                    3              6             108.1       203        13           4/17       6/69       15.61     1.87

சொயிப் மலிக்                              3              6              77.5        228        11           4/33       7/59       20.72     2.92

சுல்பிக்கார் பாபர்                         3                6                189          409         9              3/53       3/88       45.44     2.16

மூயேன் அலி                              3               6                107.2        438         9              3/108     4/168     48.66     4.08

வஹாப் ரியாஸ்                         3               6                108          347          8              4/66       5/144     43.37     3.21

ஆதில் ரஷீட்                               3               6                 136.5        556         8              5/64       5/227     69.50     4.06

(போட்டிகள்,இன்னிங்ஸ்,ஓவர்கள், ஓட்டங்கள், விக்கெட்கள், ஒரு இன்னிங்ஸ் சிறந்த பந்துவீச்சு, ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சு, சராசரி, ஓவருக்கு வழங்கிய ஓட்டங்கள் )

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .