2021 மார்ச் 01, திங்கட்கிழமை

அருகிவரும் நாட்டார் விளையாட்டுக்கள்

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வேலாயுதபிள்ளை பகீரதன்

சமுதாயத்திலே பிரிக்க முடியாத ஓர் அங்கமாக விளையாட்டு அமைகிறது. மனிதப் பண்புகளையும் சமுதாயப் பண்புகளையும் அது வளர்ப்பதோடு, உறுதிபெற்ற உடலையுந் தந்து ஒவ்வொருவரையும் முழு மனிதனாக்குகிறது. வளமான சீரிய வாழ்வுக்கு வேண்டிய நற்பண்புகளை பயிற்றி பண்படுத்தி விடும் நல்லதோர் ஆசானாக விளங்குகின்றது. இன்றுள்ள கல்வித் திட்டத்தில் விளையாட்டுக்கள் தனிசிறப்புடைய ஓரங்கமாக விளங்குகின்றன. ஏட்டுக் கல்வி செயல்முறைக்கல்வி என்பவற்றுக்;கு இருக்கின்ற சிறப்பு விளையாட்டுக்களுக்கும் உண்டு என்பதை கல்வித்திட்டம் வலியுறுத்துகின்றது. எந்த விளையாட்டும் தன்னிச்சையின்றி சிரமத்தோடு செய்யப்படுமானால் வேலையாகின்றது.

உள ரீதியான பலத்தை மனிதனுக்கு விளையாட்டுக்கள் ஏற்படுத்துகின்றன. மனிதன் தன்னலம் மறந்து கருமமாற்றுவது அரிது. தேவையான வேளைகளில் காணப்படும் தன்னலமற்ற மனப்பான்மையும் வாழ்கையில் பெறத்தக்க பெரும்பேறுகளாம். போட்டி விளையாட்டுக்களிலே தான் குழுவின் வெற்றியே தன் வெற்றியென்றும் ஒவ்வொரு விளையாட்டு வீரனும் கருதுகின்றான்.

இவ் விளையாட்டுக்களை நாம்  இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்து வகைப்படுத்திக் காட்டலாம். ஒன்று நாட்டார் விளையாட்டுக்கள் அல்லது சுதேச விளையாட்டுக்கள், இரண்டாவது மேலைதேய விளையாட்டுக்கள். சுதேச விளையாட்டுக்களில் கிளித்தட்டு மறித்தல், கெந்தியடித்தல், கிட்டிப்புள்ளு அடித்தல், சடுகுடு விளையாட்டு, உச்சரிப்பு விளையாட்டு, போர்த்தேங்காய் அடித்தல், ஊஞ்சல்  பாட்டு விளையாட்டு, கிச்சி, மாச்சி, தம்பலம், ஆடு புலி ஆட்டம், சங்கு விளையாட்டு, ஆலாப்பறத்தல் விளையாட்டு, எவடம் எவடம் விளையாட்டு, கிள்ளுப்பிராண்டி விளையாட்டு, பாட்டன் குந்துவிளையாட்டு, கொம்பு முறி விளையாட்டு, பூசணிக்காய் விளையாட்டு, அல்லது சுரக்காய் விளையாட்டு, பூப்பறிக்கப் போதல் விளையாட்டு என பல விளையாட்டுக்களைக் கூறலாம். 

மேலைத் தேய விளையாட்டுக்களிலே கிரிக்கெட், கால்பந்தாட்டம், மென்பந்தாட்டம் மேசைப்பந்தாட்டம், ஹொக்கி என பல விளையாட்டுக்கள் உள்ளன. இந்த மேலைத்தேய விளையாட்டுக்கள், உலக நாடுகளினது ஆதரவுடன் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால், கிராமிய விளையாட்டுக்கள் என்று கூறப்படும் சுதேச விளையாட்டுக்கள் இன்றைய காலகட்டத்தில் அருகிக்கொண்டு அழிந்துபோய்க்கொண்டு இல்லாதுபோய்கொண்டு செல்வதனை காணலாம். எனவே, அவை அவை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய எம் எல்லோரதும் கடைமையாகும்.
இவ்விளையாட்டுக்களுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். நாட்டார் விளையாட்டுக்கள் பற்றி பார்க்கும் போது மனிதகுலம் என்றுதோன்றியதோ அன்றுதொட்டே இவ் விளையாட்டுக்களும் தோன்றிவிட்டன. இவ் விளையாட்டுக்கள் எல்லாம் வயதினரும் ஏற்ற விளையாட்டுக்களாக இருந்தாலும் சிறுவர்களுக்கும் மிகப் பொருத்தமுடையதாக காணப்படுகிறது. இவ் விளையாட்டுக்களாக மட்டுமல்லாமல் பாடல்களுடன் ஒன்றிணைந்த விளையாட்டுக்களாக அமைந்துள்ளன.

காலத்துக்கேற்ப விளையாட்டுக்களும் மாற்றடைகின்றன. அம்மாற்றத்துடன் பாடல்களும் மாற்றமடைகின்றன. இவ் விளையாட்டுக்கள் தமக்கென தனித்தன்மைகளைக் கொண்டிருந்தாலும் இப்பொழுது எல்லோரது வாழ்கையிலும் கூடிய நேரம் தொலைக்காட்சியுடனே கழிவதனால், பழம் தமிழ் விளையாட்டுக்கள் அவை தொடர்பான வழக்கில் இருந்த பாடல்கள் என்பவற்றை இன்றய தலைமுறையினர் அறியமுடியாது போய்விடுவது ஒரு துரதிர்ஷ்டமான விடயமே.
இனி கிராமிய விளையாட்டு என்றும் நாட்டார் விளையாட்டு என்றும் சிறுவர் விளையாட்டு என்றும் சிறப்பித்துக் கூறப்படும் சுதேச விளையாட்டுக்களை ஒவ்வொன்றாக நோக்குவோம்.
கிட்டிப்புள் விளையாட்டானது அன்று முதல் கிராமங்கள் தோறும் விளையாடப்பட்டு வந்த பழம் பொரும் விளையாட்டுக்களில் ஒன்று கிட்டிப்புள் அடித்தல். ஒரு பெரிய பொல்லும் சிறிய பொல்லும் வைத்து ஆடப்படுவது ஆகும். இவ்விளையாட்டைச் சிறுவர்களும் இளைஞர்களும் விளையாடினாலும் பொதுவாக 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களே விளையாடுவார்கள். இது பாழ்வளவு, வெட்டவெளி போன்ற இடங்களில் விளையாடப்படும்.

இவ்விளையாட்டுட்டில் இரு குழுக்கள் காணப்படும் இரு தலைவாகள் இருந்து மற்றவர்களைப் பிரித்து எடுப்பார்கள். பின்னர் எந்தக் குழு முதலில் விளையாடுமென்பதை நாணயத்தை எறிந்து தீர்மானிப்பார்கள் பின்னர் விளையாட்டு ஆரம்பிக்கப்படும். இங்கு பயன்படுத்தப்படும் பெரிய புள்ளை தாய்க்கம்பு என்றும் சிறிய புள் குட்டிக் கம்பு தாய் கம்பின் மூன்றில் ஒரு பங்கு நீளமானதாய் இருக்கும்.

குறிப்பிட்ட  ஒரு தொகையை தமது பாட்டத்துக்கான  எண்ணிக்கையாகத் தீர்மானிப்பார்கள். ஒரு குழியை நிலத்தில் தோண்டி அதன் மேல் குட்டிப் புள்ளை வைத்து தாய்க்கம்பால் ஒரு குழுவினரில் உள்ள  ஒருவர் உந்துவார். மற்றைய குழுவினர் கிட்டிப் புள்ளை  பிடித்தால் உந்தியவர் விளையாட்டில் இருந்து  விலக்கப்படுவார். பிடிக்காவிட்டால் அதனை குழியடிக்கு எடுத்து எறிவார்கள். எறியும் போது தாய் புள்ளை குழியின் குறுக்காக வைப்பார். அப்போது தாய் புள்ளில் குட்டிப்  புள்ளு பட்டாலும் உந்தியவர்  விளையாட்டில் இருந்து விலக்கப்படுவார். அவ்வாறு செய்து புள் படாவிட்டால் உந்தியவர் தாய் புள்ளால் கிட்டிப் புள்ளை அடித்து அது போன தூரத்தை குத்துமதிப்பில் சொல்லி பெறுமதியை எடுப்பார்கள். அத் தூரத்தை மனசில் வைத்துக்கொண்டு இவ்வாறு பல முறை விளையாடி குறிப்பிட்ட எண்ணிக்கையைப் பெற்றது “பாட்டம்” இடம்பெறும் ‘பாட்டம்’ என்பது மூச்சு விடாமல் படித்துக்கொண்டு ஓடுதல் இவ்வாறு பாடப்படும் பாடல்களில் “ஆலையிலே சோலையிலே ஆலங்காடிச் சந்தியிலே கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுக்கி அடிக்கப் பாலாறு” பாலாறு பாலாறு...” என்னும் பாடல் “மாம்பட்ட மதுரம் பட்ட வெளவால் ஓடிய தென்னம்பட்ட ப+ம்பட்ட புளியம்பட்ட பட்டனோம் பட்டனோம் பட்டனோம்... என்னும் பாடல் ‘ஜூம் ஜூம ஆதம் மலைக்கு போனாராம் ஆதம் பாவாவும் போனாராம் ஆதம் பாதம் கண்டாராம் ஆகா அற்புதம் என்றாராம்... போன்ற பாடல்கள் இவ்விளையாட்டின் போது பாடப்படும். இப்பாடல்கள் பாடும் போது சிறுவர்களுக்கு மூச்சுப் பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைப்பது உடலியல் ரீதியாக நன்மை பயக்கக்கூடியதாக உள்ளது. அது மட்டுமல்லாது இப்பாடல்களை சிறுவரகள் ஓசை நயத்துடன் பாடிக்கொண்டு ஓடும்போது மிகவும் இனிமையாகவும் ரம்மியமாகவும் இருப்பதுடன் கிராமிய பேச்சு வழக்குச் சொற்களை சிறுவர்கள் இலகுவாக கற்றுக் கொள்கிறார்கள் இப்படியாக சிறப்பு மிக்க இவ்விளையாட்டு இன்றைய காலகட்டத்தில் அருகிக்கொண்டு போவது மிகவும் வேதனைக்குரியதே.

அடுத்து ‘சடு சடு’ விளையாட்டை நோக்குவோம் இது தமிழர் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்த விளையாட்டாகும். சங்க இலக்கியங்கள் கூறும் வெட்சித் திணையிலே ஆநியைக்கவர்வதும் கவர்ந்த ஆநிரைகளை மீட்கச் சென்றவர்கள் வெற்றியுடன் மீண்டுவர வேண்டும். என்பதற்காகவும் போரின் போது வெற்றி கி;ட்ட வேண்டும் என்பதற்காகவும் காளியை வணங்கி சென்றனர். அப்பொழுது சடு குடுப்பை என்ற பாறையினால் ஓலி எழுப்பி வழிபாடு செய்தனர். இதுபோன்ற பகுதிகள் இவ்விளையாட்டிலும் காணப்படுவதனாலும் இவ்விளையாட்டு ‘சடு குடு’ என அழைக்கப்பட்டிருக்கலாம் 
என எஸ்.நவரோச் செல்லையா 'விளையாட்டுகளுக்குப்பெயர் வந்தது எப்படி?” என்ற நூலில் கூறியுள்ளார். இவ்விளையாட்டு இன்று இலங்கை போன்ற நாடுகளில் ‘கபடி’ என்றும் அழைக்கப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது. இவ்விளையாட்டிலே எதிரணியினர் ஆடுகளத்துக்குள் மூச்சுவிடாமல் பாடிக்கொண்டே சென்று எதிரணி ஆட்டகாரர்களில் எவரையாவது தொட்டுவிட்டு வெளியேற விடாது சுற்றி வளைத்து ஆடுகளத்துக்;குள்ளேயே அவரை பிடித்து வைத்தால் அவர் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவார். இந்த விளையாட்டின் போது பாடப்படும் பாடல் பின்வருமாறு அமையும்:

‘கவடியடிக்க கவடியடிக்க 
கைகால் முறியக் கைகால் முறியக்
காலுக்கு மருந்து தேடிக்கட்டு தேடிக்கட்டு,
தேடிக்கட்டு’ 
சில இடங்களில் ‘ஆலஞ் சருகு மட மட மெனவே 
ஆங்கொரு வண்டி 
லுருண்டுவரக் காலாடி வரப் பொழுதேறிவரத்
தெந்தட்ட தெருந்தட்ட
தெருவெங்கும் பொறிதட்ட
பூம்பட்டை புளியம்பட்டை 
வெளவாலோடிய தென்னம்பட்டை
கவடிக்... கவடிக்...
என்னும் பாடலும் பாடப்படுவதுடன் கிட்டிப்புள் விளையாட்டில் பயன்படுத்தப்படும் சில பாடல்களும் பாடப்படுகின்றன. இவ்விளையாட்டு இன்று, தேசிய ரீதியான குழு விளையாட்டுகளில் ஓன்றாக அங்கிகரிக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெறுவது மகிழ்ச்சிக்குரியது. ஆனாலும் இப்பாடல்கள் அருகிவிட்டன. வெறுமனே கபடிக் கபடிக் கபடிக் கபடிக் என்று மட்டுமே பாடி விளையாடப்படுகின்றது.

அடுத்து பாட்டன் குத்து விளையாட்டைப் பற்றி நோக்குவோம் இந்த விளையாட்டும் சிறுவர்களிடையே வெற்றி தோல்வி சந்தோசம் துக்கம் என்ற விடயங்களை சமனானகக் கருதும் பண்பை வளர்க்கின்றன. இரு இரு சிறுவர்களாக விளையாடுவதை காணலாம். ஒரு சிறுவர் கைகளை விரித்துக் கொண்டிருக்க மற்றவர் உள்ளங் கைக்குள் அடித்துக் கொண்டிருப்பார். கைகளை நீட்டி விரித்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள் அடித்துக் கொண்டிருக்கும் சிறுவனின் கைகளை பிடித்தால் பிடித்தவருக்கு வெற்றி பிடிபட்டவருக்கு தோல்வி.

குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயும், குழந்தைக்கும் ஏனைய உறவுகளுக்கிடையேயும் இவ்விளையாட்டு இடம் பெறுவதுண்டு. இவ்விளையாட்டின் போது குழந்தை, தாய் ஆகிய இரு உள்ளங்கங்களும் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், இன்றைய இயந்திர உலக வாழ்கையில் இவ்விளையாட்டு இவ்வாறு அருகிக்கொண்டு போய் கொண்டு இருக்கிறமைக்கு காரணம் என்னவெனில் சிறுவர்கள் இப்படியாக விளையாட்டுகளில் இருந்து தவிர்க்கப்பட்டு மூன்று வயதானாலும் கல்விக்காக தனியார் வகுப்புகளுக்கும் பேச்சுக்கலை ஆங்கில வகுப்புக்கும் அனுப்பப்படுகின்றனர். நேரத்தை இவ்விளையாட்டுக்காக ஒதுக்க இன்றைய பெற்றோர் நாட்டம் காட்டாமையும் பல இளம் பெற்றோருக்கு இவ்விளையாட்டுப் பற்றிய அறிவின்மையும்  இன்னும் பல இதர காரணிகளும் காரணமாய்  இருப்பது வேதனை தருவதாய் உள்ளன.
அடுத்து உச்சரிப்பு விளையாட்டை   நோக்கும் போது சிறுவர்கள் தமது உச்சரிப்பு மொழி வளத்தை விருத்தி செய்வதற்காக இந்த விளையாட்டைத் தமக்குள் விளையாடும் மரபு ஆரம்பம் முதல் இன்றுவரை உள்ளது. பின்வரும் பாடல் அடிகளை திரும்ப திரும்ப உச்சிரிப்பதன் மூலம் சிறுவர்கள் இவ்விளையாட்டை விளையாடுவார்கள். 

“கடலோரம் உரல் உருளுது பிரளுது
தத்தளிக்குது தாளம் போடுது
உத்தரிக்குது ஓடி வா”
ஓரு சிறு நரியிலே ஒரு நரி, சிறு நரி 
சிறு நரி முதுகிலே ஓரு பிடி நரை மயிர். 

இப்பாடல் அடிகளை சிறுவர்கள் வட்டமாக இருந்து உரத்த தொனியல் இடைவிடாது திரும்பத் திரும்பப் பாடுவார்கள். கிராமிய வழக்கில் சிறப்புப் பெற்றிருந்த இவ்விளையாட்டுக்கள் இன்று அருகிப் போய்விட்டமை ஒரு துரதிர்ஷ்டவசமான விடயமாகும். ஏனெனில், சிறுவர்களுக்கு விளையாட்டு மூலமாக மொழியைக் கற்பிக்கும் நுட்பங்களை ஒன்றாக பயன்படுத்துவது சிறந்த அடைவைத் தரும் ஒன்றாக உள்ளது. 

அடுத்து பூசணிக்காய் விளையாட்டு அல்லது சுரக்காய் விளையாட்டு பற்றி நோக்குவோம். பொதுவாக சிறுவர்களிடையே சுரக்காய் விளையாட்டு என்று அழைக்கப்படும் இவ்விளையாட்டானது.
சிறுவர் ஒருவர் : டொக் டொக் 
சிறுவர்கள் : யார் வந்த 
சிறுவர் ஒருவர் : அரசன் வந்த 
சிறுவர்கள் : எனக்குக் குத்து 
சிறுவர் ஒருவர் : கொக்குக்கும் குருவிக்கும் கல்யாணமாம் இரண்டு சுரக்காய் தரட்டாம். 
சிறுவர்கள் : இப்பதான்  நாட்டி இருக்கு
 இதனைப்போன்றே இரன்டாவது தடவையும்
சிறுவர் ஒருவர் : டொக் டொக் 
சிறுவர்கள் : யார் வந்த 
சிறுவர் ஒருவர் : அரசன் வந்த 
சிறுவர்கள் : எனக்குக் குத்து 
சிறுவர் ஒருவர் : கொக்குக்கும் குருவிக்கும் கல்யாணமாம் இரண்டு சுரக்காய் தரட்டாம். 
சிறுவர்கள் : இப்பதான் கொழுந்து விட்டிருக்கு.என்றவாறு பலமுறை இப்பதான் ப+த்திருக்கு. இப்பதான் காய்த்திருக்கு சிட்டிப் பார்த்து ஆய்ந்துட்டு போ என்றவுடன் குறிப்பிட்ட ஒருவர் குந்தி இருக்கும் சிறுவர்களின் தலைமீது குட்டுவர். முத்தியிருந்தால் ‘டொங் டொங்’ என சத்தம் கேட்கும் என்று சொல்லி விளையாடுவார். இந்த விளையாட்டு வீட்டின் முன் உள்ள மரத்தூண் ஒன்றின் முன்னிருந்து அல்லது மரத்தடியில் இருந்து கொண்டு ஒரு சிறுவரின் வயிற்றை மற்றச் சிறுவர்கள் இறுக்கிப் பிடித்துக் கொள்வர். இவ்வாறு நான்கு அல்லது ஐந்து பேர் தமக்கு முன்னால் இருப்பவரின் வயிற்றை இறுக்கமாகப் பிடித்துக் கொள்வர்.குறிபிட்ட ஒரு சிறுவர் அந்த வரிசையின் பின்னால் இருப்பவரை முதலில் இழுத்து வெளியே எடுப்பார். சுரக்காய் கொடியிலிருந்து ஒவ்வொரு சுரக்காயாக ஆய்வதனை அல்லது பிடுங்குவதைக் கற்பனை செய்துக்கொள்வர். இந்த விளையாட்டு மிகவும் மகிழ்ச்சிகரமானது. ஆயினும் இன்றைய நிலையில் இதுகூட அருகிப் போய்விட்டது. மட்டக்களப்பில் வாகரைப் பிரதேச ஆரம்ப வகுப்பு பாடசாலை மாணவர்களிடமே ஓய்வு நேரங்களின் போது விளையாடப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கதும் மகிழ்ச்சி தரும் ஒன்றாகவும் உள்ளது.

அடுத்து சங்கு விளையாட்டு பற்றி நோக்தும் போது சங்கு விளையாட்டில் சிறுவர்கள் பலர் கலந்து கொண்டு வீட்டினுள் அல்லது நிலவில் இரவு நேரங்களில் விளையாடுகின்றனர். நிலத்தில் வட்டமாக இருந்து கொண்டு சிறுவர்கள் கைகளால் பொத்திப் பிடித்துக்கொண்டு ஒருவரின் கைகளுக்கு மேல் இன்னொருவனின் கைகள் அடுக்கப்படும். இந்தக் குழு விளையாட்டுக் ஒரு சிறுவர் தலைமையை தாங்குவார். இவரது ஒரு கை மட்டும் அடுக்கப்பட்டிருக்கும் கைகளைக் காட்டி இது யார் சங்கு என்று தொடங்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறவு முறையைச் சொல்லி அம்மா சங்கு அப்பா சங்கு என்பர். அடுக்கப்பட்டிருக்கும் அனைத்து கைகளில் யார் யார் சங்கு என்று சொன்னவுடன் வொட்டவா? தீட்டவா? என்று கேட்பர். அதில் ஒருவர் வெட்டு என்றவுடன் விளையாட்டுத் தலைவர் இரண்டாக வெட்டுவார் அவ்வாறு பிரிக்கப்பட்ட போது எல்லாச் சிறுவர்களும் தங்களின் கைகளை எடுத்து வாயில் வைத்து ஊ.....ஊ.... ஊ.... என்று உரத்துக் கூறுவர் இப்பாடல் பின்வருமாறு அமையும்.

இது யார் சங்கு- அம்மா சங்கு, இது யார் சங்கு- அப்பா சங்கு, இது யார் சங்கு- அண்ணா சங்கு, இது யார் சங்கு- அக்கா சங்கு, இது யார் சங்கு- தம்பி சங்கு, இது யார் சங்கு- தங்கை சங்கு, இது யார் சங்கு வெட்டவா? தீட்டவா? இவ்வாறு கிராமத்துச் சிறுவர்களால் இந்த விளையாட்டு விளையாடப்படுகின்றது. இருப்பினும் இன்று இவ் விளையாட்டு அருகிவிட்டது.
 அடுத்து ஆலா பறத்தல் விளையாட்டை நோக்கும் போது வட்டமாக தரையில் உட்கார்ந்து கைகளை விரித்து உள்ளங்கை நிலத்தில் பட வைத்துக் கொண்டு இருப்பர். அப்பொழுது ஒரு குழந்தை ஆலாப்பற  என்று கூற மற்றவர்கள் கைகளை உயர்த்திப்பிடிப்பார்கள். 

அடுத்து ‘எவடம் எவடம்’ விளையாட்டை நோக்கும் போது ஒரு சிறுவரின் கையில் மண்ணை அள்ளி வைத்து அதனுள் ஓர் அடையாளப் பொருளை வைப்பர் (பூ, இலை, குச்சி எதுவாகவும் இருக்கலாம்) அடையாளத்தை வைத்திருக்கும் அந்த சிறுவரின் கண்களை இன்னொருவர் பின்னால் வந்து பொத்திக் கொண்டு அவரை முன்னும் பின்னும் சுற்றி வளைத்தும் நடத்திக்கொண்டு செல்வார். செல்லும் போது ‘எவடம் எவடம்’ என்று கண்கள் பொருத்தப்பட்ட சிறுவரைக் கேட்க அவருக்கு பின்னால் போகும் ஏனைய சிறுவர்கள் ‘புளியடி புளியடி’ என்று பாடிக் கொண்டு செல்வர் ஒரிடத்திலிருந்து வைத்து பின்னர் அவர் இடத்தை அவரே கண்டு பிடிக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து விளையாடுவர் எவடம் எவடம் கொம்பன் எவடம் கொம்பன் புளியடி என்னும் பாடல் பாடியவாறு இவ்விளையாட்டு சிறுவர்களால் விளையாடப்படும். இவ்விளையாட்டும் இப்போது அருகி வருகின்றது. இருந்தாலும் கிராமங்களில் சில இடங்களில் இன்றும் உண்டு. 

அடுத்து தேங்காய் அடித்தல் விளையாட்டை நோக்கும் போது இது சிறுவர் தொட்டு முதியவர் வரை யாவராலும் விளையாடப்படுவது ஆகும். இதில் ஒருவருடைய தேங்காய் குவியலில் வைத்து மற்றவர் தனது கையில் உள்ள தேங்காயினால் குத்தி உடைக்க வேண்டும். அவ்வாறு உடைக்கப்படாவிட்டால் மற்றைய வீரன் தனது தேங்காயினால் உடைக்க வேண்டும். இவ்வாறு மாறி மாறி ஆட்டப்படும். இது யாழ்பாணத்தில் வீர விளையாட்டு என அழைக்கப்படுகின்றது.
அடுத்து கொம்புமுறி விளையாட்டை நோக்கும் போது இது மட்டகளப்புப் பிரதேசத்தில் சிறப்பாக விளையாடப்பட்ட ஒன்று. அம்மன் சடங்கு காலத்தில் இரண்டு குழுவாகப் பிரிந்து வடமோடி, தென்மோடி என்று இரண்டு அணிகளாகப் பிரிந்து விளையாடுவர். அம்மன் விளையாட்டைப் பார்த்து மகிழ்ந்து சிரிந்ததாக ஐதீகக் கதை ஒன்றும் உண்டு. இவ்வாறு சிறப்பு மிக்க கிராமிய விளையாட்டுகளான நாட்டார் விளையாட்டுகள் இன்றைய நிலையில் அருகி வருகின்றன. இதனை மீண்டும் புத்துயிர் பெறச்செய்ய ஆரம்ப வகுப்புகளில் ஆசிரியர்கள விளையாட்டும்; ஓய்வ என்னும் தேர்ச்சியை இவ்விளையாட்டுகளினூடாக மாணவர்களுக்கு ஏற்படுவதினால் இந்த விளையாட்டுக்கள் புத்துயிர் பெறும். எனவே இந்தப் பொறுப்பு ஒவ்வொரு ஆரம்ப பிரிவு ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் விடப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .