2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இலங்கையில் தென் ஆபிரிக்கா: மட்டுப்படுத்தப்பட்ட தொடர்கள் (ODI, 20-20)

A.P.Mathan   / 2013 ஜூலை 18 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த காலம்: ஒரு மீள் பார்வை
தென்ஆபிரிக்க அணியானது இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுபயணம் மேற்கொண்டு வந்துள்ளது. ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், மூன்று டுவென்டி டுவென்டி போட்டிகளிலும் பங்குபற்ற வந்துள்ளது. தென் ஆபிரிக்க அணியானது இலங்கை வந்தால் எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருக்கும். பொதுவாக இலங்கைக்கு மற்றைய நாடுகள் வருவதிலும் பார்க்க தென் ஆபிரிக்க அணி வருகை தருவது என்பது குறைவு. ஒரு பலமான அணியாக கருதப்படும் அணி. எனவே நல்ல போட்டிகளை பார்க்க முடியும் என்ற எதிர்பார்ப்புக்கள் மிக அதிகமாக இருக்கும். அண்மைக்காலமாக இலங்கையில் ஒரே மாதிரியான அணிகளையும் போட்டிகளையும் பார்த்த ரசிகர்களிற்கும் இது வித்தியாசமானதாக இருக்கும். 
 
2006ஆம் ஆண்டு இலங்கைக்கு தென் ஆபிரிக்கா அணி ஒருநாள்ப் போட்டித் தொடருக்காக வருகை தந்தது. அது ஒரு முக்கோண ஒரு நாள்ப் போட்டித் தொடர். ஆனால் அந்த தொடர் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது. எனவே நாங்கள் அந்த தொடரை மறந்து விடுவது நன்று. அதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு இலங்கைக்கு தென் ஆபிரிக்க அணி வருகை தந்தது. ஆக 9 வருடங்களின் பின்னர் ஒரு பலமான முக்கியமான அணியை சொந்த நாட்டில் எதிர்கொள்வது என்பது மிக முக்கியமான ஒரு நிலை. வீரர்களிற்கும் ரசிகர்களிற்கும் மிக முக்கியமான தொடராக இது இருக்கும். 
 
ஆனால் என்னவோ இலங்கைக்கு கிரிக்கெட் அணிகள் வந்தால் தேடி வரும் மழை இம்முறையும் தேடி வந்துவிட்டது. எனவே மழைக்கும் இது முக்கிய கிரிக்கெட் தொடரே. ஆனாலும் கொழும்பில் போட்டிகள் வழமையிலும் பார்க்க குறைவு என்றாலும் ஒருநாள்ப் போட்டிகள், கொழும்பிலும் கண்டியிலும் மாத்திரம் என்பது என்னவோ மழை புகுந்து விளையாடும் என்ற அச்சத்தை எழுப்பாமல் இல்லை. ஹம்பாந்த்தோட்டையில் 20-20 போட்டிகள் இரண்டு மாத்திரமே. எனவே ஒருநாள்ப் போட்டி ரசிகர்கள் மிகப் பயப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளார்கள். 
 
இலங்கையில், இலங்கை மட்டும் பங்கு பற்றிய தொடரில் தென் ஆபிரிக்க அணி பங்குபற்றுவது இது மூன்றாவது தடவையாகும். 1993 ஆண்டு, 2004ஆம் ஆண்டு முன்னைய தடவைகள் தென் ஆபிரிக்க அணி இலங்கைக்கு வருகை தந்தது. மற்றைய தொடர்களில் 2000ஆம் ஆண்டு முக்கோண ஒருநாள்ப் போட்டித் தொடரில் பங்கு பற்றினர். அந்த தொடரில் இலங்கை அணியானது தென் ஆபிரிக்க அணியை இறுதிப் போட்டியில் வெற்றி கொண்டது. மற்றைய அணி பாகிஸ்தான் அணி. அடுத்த முக்கோண தொடர் 2006ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. 2002ஆம் ஆண்டு ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக வருகை தந்தது. 
 
தென் ஆபிரிக்க அணி எவ்வளவுதான் பலமான அணியாக இருந்தாலும் இலங்கை மண்ணைப் பொறுத்த மட்டில் அவர்கள் ஜிம்பாவே அல்லது பங்களாதேஷ் அணிக்கு ஒப்பானவர்களே. 1993ஆம் ஆண்டிற்கு பின்னர் அவர்கள் எந்த ஓர் ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும் இலங்கையில் வைத்து இலங்கை அணியை வெற்றி பெறவில்லை. முதற் தொடரில் பெற்ற முதல் வெற்றி மட்டுமே அவர்கள் பெற்ற ஒரே வெற்றி. இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள வெற்றிகள் இலகுவான தென் ஆபிரிக்க அணிக்கு பெறப்பட்டவை இல்லை. இலங்கை அணி பெற்றுள்ள 9 வெற்றிகளும் பலமான முழுமையான அணிக்கு எதிராக பெற்றுக்கொள்ளப்பட்டவை. எனவே இலங்கை அணி மிகப் பலமாக இருந்துள்ளது. இரு அணிகளுக்குமான தொடரில் பந்து வீச்சு முக்கியமாக அமைந்துள்ளது. 
 
இலங்கை சார்பாக சுழல்ப்பந்து வீச்சும், தென் ஆபிரிக்க சார்பாக வேகப் பந்தும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இதுவரையில் இந்த இரு அணிகளுக்குமான தொடரில் ஒரு சதம் மாத்திரமே அடிக்கப்பட்டுள்ளது. அந்தளவிற்கு பந்து வீச்சு இறுக்கமாக சிறப்பாக அமைந்துள்ளது. 
 
இதுவரையில் இரு அணிகளும் இலங்கையில் மோதிய போட்டிகளின் படி கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள் 
(போட்டிகள், இன்னிங்ஸ்,ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட்,சதங்கள்,அரைச்சதங்கள்  )
 
கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள் 
 
(போட்டிகள், இன்னிங்ஸ்,ஓவர்கள்,வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி)
 
2013 தொடர் 
இலங்கை அணி நல்ல முறையில் அண்மைய தொடர்களில் விளையாடி வந்தாலும் இறுதிப் போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ளது. இந்திய அணியிடம் அடுத்தடுத்த இரு தோல்விகள் ஒரு நாள்ப் போட்டிகளில். இவற்றில் இருந்து இலங்கைக்கு நிச்சயம் ஒரு மாற்றம் தேவை. ஒரு தொடர் வெற்றி தேவை. கடந்த ஒரு வருடம் இலங்கை அணிக்கு ஒரு நாள்ப் போட்டிகளில் சிறப்பான வருடம். இலங்கையில் வைத்து இந்திய அணியிடம் மோசமான தொடர் தோல்வி. அதை தவிர்த்து நியூசிலாந்தில் வெள்ளையடிப்பு வெற்றி. அவுஸ்திரேலியாவில் வைத்து தொடர் சமநிலை வெற்றி. ஆனால் பங்களாதேஷில் சமநிலை முடிவு. கடந்த 5 மாதங்களில் ஒருநாள்ப் போட்டிகளில் இலங்கை அணிக்கு பின்னடைவுகள் ஏறப்பட்டுள்ளன. அவற்றை சீர் செய்யவும் இந்த தொடர் உதவும் என நம்பலாம். 
 
ஆனாலும் வீரர்களின் இழப்பு என்பது பின்னடைவை தரும். நுவான் குலசேகர அணியில் இருந்து உபாதை காரணமாக வெளியேறியுள்ளார். அஞ்சலோ மத்தியூசிற்கு முதல் இரண்டு போட்டிகளில் விளையாட தடை என்பன பாதிப்பே.  
 
அணிக்குள் வீரர்களை உள்வாங்குவதும், வெளியே அனுப்பவதும் இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக் குழு தொடர்ச்சியாக இதை செய்து வருகின்றது என்றே தோன்றுகின்றது. சனத் ஜெயசூரிய தெரிவுக்குழு தலைவர் ஆனதும் இந்த நிலை மாறும் என்று பார்த்தால் இப்போதும் அதே நிலை தொடர்கின்றது. குஷால் பெரேரா, டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஆகியோர் அணியால் வெளியேற்றப்பட்டுள்ளனர். 33 வயதான டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஏன் அணிக்குள் வந்தார்? வெறும் மூன்று போட்டிகளில் ஏன் வெளியேற்றப்பட்டார்? என கேட்க வேண்டியுள்ளது. குஷால் பெரேரா சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் சரியாக பிரகாசிக்கவில்லை என்பது உண்மையே. ஆனாலும் அதற்கு முன்னர் அடுத்த ஜெயசூரிய என தூக்கி தலையில் வைத்து ஆடினார்கள். சிலவேளைகளில் அது சரியாக இருக்கலாம். சரிவு ஒன்று ஏற்பட்டதும் உடனே அணியை விட்டு தூக்கிவிட்டார்கள். இன்னும் வாய்ப்பு கொடுத்து பார்த்திருக்கலாம். இலங்கை தெரிவுக் குழு இந்த இடங்களில் பிழை செய்கின்றதோ என எண்ண தோன்றுகின்றது. திசர பெரேரா மீண்டும் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். நல்ல முடிவு. இனியும் அவரை நிறுத்தாமல் தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்தால் இலங்கை அணிக்கு நல்லதே. 
 
டில்ஷான் அணிக்குள் மீண்டும் வருவது பலமே. உப்புல் தரங்க மீண்டும் அபார மீள் வருகை ஒன்றை காட்டியுள்ளார். ஆனாலும் அடுத்த மூன்று போட்டிகளிலும் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனாலும் அவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இந்த தொடரில் களமிறங்கப்போகின்றார். இவரால் ஆரம்ப வீரராக தொடர முடியுமா என உறுதி செய்யும் தொடராக இந்த தொடர் அமையும். அடுத்த மூன்று இடங்களில் மூன்றாமிடம் சங்ககாரவிற்கு என்பது உறுதி. நான்காமிடம் மஹேலவா அல்லது லஹிறு திரிமன்னவா என்பது அணி முகாமைத்துவத்தின் முடிவு. ஆனாலும் லஹிறு திரிமன்னே நான்காமிடத்தில் துடுப்பெடுத்தாடுவது நன்றே. மஹேல ஐந்தாமிடத்தில் களமிறங்குவது அணிக்கு சமநிலை தன்மையை வழங்கும். முதல் இரண்டு போட்டிகளின் தலைவரான தினேஷ் சந்திமால் அடுத்த இடமான ஆறாமிடத்திற்கு ஏற்றவரா? அந்த இடம் அவருக்கு சரியாக வருமா? ஆனால் வேறு வழியில்லை. அஞ்சலோ மத்தியூஸ் அணிக்குள் வந்தால் அவர் எந்த இடத்தில் களமிறங்குவார் என்பவை கேள்வியா இருக்கின்றது. அடுத்த இடம் திசர பெரேரா. லசித் மாலிங்க பந்துவீச்சில் உறுதி. சுழல்ப் பந்து வீச்சாளர்களாக இருவர் விளையாட வேண்டும். ஒருவர் ரங்கன ஹேரத். மற்றவர் யார்? சசித்திர சேனநாயக்க அல்லது மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் அஜந்த மென்டிஸ். மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் சமின்ட எரங்க. மத்தியூஸ் அணிக்குள் வரும் போது சமின்ட எரங்க அணியை விட்டு வெளியேற்றப்படுவார? அல்லது திசர பெரேரா வெளியேற்றப்படுவார? இரண்டுக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சிலவேளைகளில் ஒரு துடுப்பாட்ட வீரரை நிறுத்தவும் வாய்ப்புக்கள் உள்ளன.
 
அணிக்குள் புதிதாக வந்தவர்களில் கவனிக்கப்பட வேண்டியவர்கள் ஜெஹன் முபாரக் மற்றும் அஞ்சலோ பெரேரா ஆகியோர். எதிர்கால முக்கிய வீரராக இலங்கை அணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் வீரர் அஞ்சலோ பெரேரா. சுழற்சி முறையில் இவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் ஓய்வுகளை பெற்று சுழற்சி முறையில் விளையாடுவது இந்த தொடரில் இளையவர்களை மதிப்பிட உதவியாக இருக்கும். ஜெஹன் முபாரக் அணிக்குள் ஏன் மீண்டும் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார் என்பது தெரியவே இல்லை. இவர் அண்மையில் பெற்றுக் கொண்ட ஓட்டங்கள் 79, 4, 54, 7, 0, 42. ஏன் அணியில் இவருக்கு இடம்? சனத் ஜெயசூரியவிற்கு மட்டுமே வெளிச்சம். 
 
அணியை சமநிலையான அணியாக மாற்ற, வீரர்களின் இடங்களை நிலை நாட்டிக் கொள்ளவும் இளைய வீரர்களின் இடங்களை சரியாக அமைத்துக் கொள்ளவும் நல்ல ஒரு வாய்ப்பு இது. அதை சரியாக செய்தால் இலங்கை அணி சரியாக அணியை வளர்த்துக் கொள்ளமுடியும். அது மாத்திரமன்றி தொடரையும் வெற்றி கொள்ள முடியும்.  

தென் ஆபிரிக்க அணி அவர்களின் மூன்று முக்கிய  வீரர்கள் இன்றி இலங்கை வந்துள்ளனர். ஜக்ஸ் கலிஸ், கிரேம் ஸ்மித், டேல் ஸ்டைன் ஆகியோர் இல்லாமல் விளையாடவுள்ளனர். பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணி டேல் ஸ்டைன் இல்லாமல் பலமாக இருந்தாலும் சுழல்ப் பந்து வீச்சு என வரும்போது பலமில்லாமலே இருக்கின்றார்கள். கடந்த கால தொடர்களின் தோல்விக்கும் இதுவே காரணம். ரொபின் பீற்றர்சன் முழு நேரப்பந்து வீச்சாளராக விளையாடுவார். டுமினி  சுழல்ப் பந்து வீசுவார். பப் டு ப்ளேசிஸ் சுழல்ப் பந்து வீசும் துடுப்பாட்ட வீரர். பகுதி நேரப் பந்து வீச்சாளர்கள் எந்தளவிற்கு கை கொடுப்பார்கள் என்பது சந்தேகமே. தென் ஆபிரிக்க அணியின் பலமாக அமையப் போவது அவர்களின் சகலதுறை வீரர்கள். மூன்றாவது , நான்காவது வேகப் பந்துவீச்சாளர்களாக விளையாடப் போகும் வீரர்கள் நிச்சயம் சகலதுறை வீரர்களே. குழுவில் உள்ளவர்களில் ஆறு பேர் வேகப்பந்து வீசக் கூடியவர்கள். சகலதுறை வீரர்களில் க்றிஸ் மொரிஸ், ஆகியோர் விளையாட வாய்ப்புக்கள் உள்ளன. 
 
ஆரம்ப துடுப்பாட்டவீரர் பிரச்சினை ஒன்றுள்ளது.  ஹாசிம் அம்லாவுடன் களமிறங்கும் மற்றைய வீரர் யார் என்பது பிரச்சினையே. கொலின் இங்ராம் இன்னும் மிகப் பெரியளவில் அண்மைக்காலங்களில் பெறுதிகளை தரவில்லை. கடந்த 6 போட்டிகளில் இரண்டு அரைச் சதங்களை பெற்றுள்ளார். எனவே ஆரம்ப போட்டிகளில் அவர்  வாய்ப்புக்கள் உள்ளன. அடுத்த மூன்று அல்லது நான்கு  இடங்கள் சுழற்சி முறையில் மாறிக்கொண்டு இருக்கின்றன. ஜக்ஸ் கலிஸ் அணியில் இல்லாதது இதற்கு காரணம். அல்விரோ பீற்றர்சன் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளமை அதற்கான ஒரு காரணமாகும். அடுத்த மூன்று இடங்களை AB DE வில்லியர்ஸ், பப் டு ப்லேசிஸ், ஆகியோர் பகிர்ந்து கொள்வார்கள். அடுத்து இடத்தை சகலதுறை வீரராக  அவதாரம் எடுத்துள்ள அல்விரோ பீற்றர்சன் பெற்றுக் கொள்வார். மிகுதி இடங்கள்  வேகப்பந்து  சகலதுறை வீரர்கள் பிடிக்க, மற்றைய இடங்களை மோர்னி மோர்க்கல், லொன்வபூ சொர்த்சொபி ஆகியோர் பெற்றுக் கொள்ளப்போகின்றார்கள். டேவிட் மில்லர், பர்ஹான் பெஹார்டீன் ஆகியோரும் துடுப்பாட்ட வீரர்களாக விளையாட வாய்ப்புக்கள் உள்ளன. 
 
இதுவரையில் 11 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. 9 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலை , தென் ஆபிரிக்க அணி சமநிலை இன்றி உள்ள நிலை என்பனவற்றை வைத்து பார்க்கும் போது இலங்கை அணிக்கு இலகுவான ஒரு நாள்ப் போட்டித் தொடர் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம் உள்ளன. தென் ஆபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சும், AB DE வில்லியர்ஸ், அம்லா ஆகியோரின் துடுப்பாட்டமுமே இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் தரக்கூடியதாக  அமைந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--