2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

ஸ்ரீ முருகேசு மஹரிஷியின் 77ஆவது ஜயந்தி விழா

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடவுள் என்பவர் மனிதர்களிடையே நேரடியாக தோன்றி அவர்களுக்கு நன்மைகளை செய்பவர் அல்ல. அதனால்தான் பலருக்கு கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சந்தேகத்துடனேயே வாழ்வதால் வாழ்வில் பிடிப்பின்மையில் பலர் திரிவதை நாம் அவதானித்திருக்கிறோம்.

இப்பூமியில் பிறந்த ஜீவராசிகள் அனைத்திலும் நாங்கள் கடவுளை காணமுடியும். அதிலும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரிடம் அதிகமாகவே தெய்வகுணம் ஒட்டியிருப்பதையும் நாங்கள் அவதானித்திருக்கிறோம். இறைவன் சில இறைதூதுவர்களை தேர்ந்தெடுத்து அவர்களூடாக மனிதர்களுக்கு நன்நெறிகளை கற்றுக்கொடுக்கிறார். இந்த இறைதூதர்கள் நம்மத்தியில்தான் வாழ்கிறார்கள். அவர்களை இனம்காண்பதுதான் கடினமானது. சரியான நேரத்தில் நல்ல குருநாதர் வடிவில் அந்த இறைதூதர் உங்களை சந்திப்பார்.

அந்தவகையில் மாமஹரிஷி முருகேசு சுவாமிகளை குறிப்பிட்டாகவே வேண்டும். மக்களோடு மக்களாக எளிமையாக வாழ்ந்து மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டி, ஜீவசமாதியடைந்த மகா சித்தர் அவர்.

காவியுடை தரித்து, கமண்டலம் ஏந்தி மக்களுக்கு போதித்தவர் அல்ல முருகேசு சுவாமிகள். எளிமையான உடையணிந்து தான்பெற்ற இறைபோதனையை மக்களுக்கு போதித்த மகா சித்தர் அவர். தன்னிடம் இருப்பவற்றை பிறருக்கு கொடுத்து அவர்களின் சந்தோஷத்தில் ஆனந்தப்படுபவர் முருகேசு சுவாமிகள்.

முருகேசு சுவாமிகள் ஜீவசமாதியடைந்து மூன்று வருடங்கள் கரைந்துவிட்டன. இருப்பினும் இப்பொழுதும் தன் பக்தர்கள் மத்தியில் காருண்ய வடிவில் உலாவருகின்றமை மெய்சிலிர்க்கும் உணர்வாகவே பலருக்கு இருக்கிறது.

கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இறைபணியில் ஈடுபட்டுவந்த மாமஹரிஷி முருகேசு சுவாமிகளின் 77ஆவது ஜனன தினம் இம்மாதம் 26ஆம் திகதியாகும்.

மாபெரும் தவ ஆற்றல்களை பெற்ற ஸ்ரீ முருகேசு மஹரிஷிகளின் 77ஆவது ஜயந்தி இம்மாதம் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நுவரெலியா ஸ்ரீ காயத்திரி பீட வளாகத்தில் மிகவும் பக்தி பூர்வமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த அரை நுற்றாண்டுகளுக்கு மேலாக மண்ணுலக மக்கள் மாண்புற வழிகாட்டி வந்த சற்குரு தேவர் அவர்கள் 1933ஆம் ஆண்டு ஒக்டோபர்  மாதம் 26ஆம் திகதி இராமன் காளிமுத்து - சந்தனம்மா தம்பதிகளுக்கு சிரேஷ்ட புத்திரனாக பூவுலகில் அவதரித்தார். சிறு பராயம் முதலே ஆன்மீக நாட்டம் கொண்டவராக திகழ்ந்த சுவாமிகள், தமது ஆரம்ப கல்வியுடன் குடும்ப சுமையின் காரணமாக சிறிய தொழில்களையும் அதன் பின் ஓர் ஆங்கில கம்பனியில் சிரேஷ்ட உத்தியோகஸ்தராகவும் பணிபுரிந்து தமது குடும்பத்தினை பராமரிக்கவும் செய்தார்.

பூர்வ புண்ணிய தவபயனினாலும் மஹரிஷிகளினாலும் ஆட்கொள்ளப்பட்ட சற்குரு தேவர், அடிக்கடி பாரதம் சென்று வரும் காலங்களில் சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள் போன்றோரிடத்தில் ஆசி பெற்று வருவது வழக்கம். தமது பலகால ஆன்மீக தேடலின் பலனாக 14 வருடங்கள் அகஸ்திய மாமஹரிஷிகளின் நேரடி கண்காணிப்பில் ஆன்ம சாதனை பயின்ற மாபெரும் தவ சிரேஷ்டர் ஸ்ரீ கண்ணையா யோகீஸ்வரரை ஞான குருவாக ஏற்கும் பாக்கியத்தை முருகேசு சுவாமிகள் பெற்றார்.

தமது சற்குரு நாதரிடத்தில் மனித அறிவுக்கு எட்டாத, சிந்தனைக்கும் புலப்படாத, விஞ்ஞானிகளாலும் புரிந்து கொள்ள முடியாத மந்திர, தந்திர, சாஸ்திரங்கள், மஹரிஷிகளால் மறைக்கப்பட்டிருந்த, உலகம் அறிந்திராத உயர் சாதனைகள் போன்றவற்றை கற்று தேர்ந்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தம் குருநாதரிடத்தில் ஆன்ம இரகசியங்களை கற்று அனிமாதி அஷ்டசித்திகளையும் பெற்ற சற்குரு தேவர், தம் குருநாதர் போன்றே இலைமறை காய்போல் வாழ்ந்து அண்டியோரை மட்டும் ஆட்கொண்டு வழிநடத்தி வந்தார்.

1976ஆம் ஆண்டு நுவரெலியா மாநகரிலே ஒரு சிறிய ஆசிரமத்தினை அமைத்து தமது ஆன்மீக சேவையை தொடந்த முருகேசு சுவாமிகள் மாபெரும் தவ யோகியான ஸ்ரீ சிவபால யோகிகளுக்கு சாட்சாத் சிவபெருமானினாலேயே கிடைக்கப்பெற்ற சுயம்புலிங்கத்தினை, 1978ஆம் ஆண்டு ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயத்தினை அமைத்து பிரதிஷ்டை செய்வித்தார். அதனோடு அகிலம் அனைத்தையும் ஆக்கி அமைத்தழிக்கும் ஆதிசக்தி அன்னை ஸ்ரீ காயத்திரி தேவிக்கு இலங்கையிலே முதலாவது பீடத்தினையும் ஸ்தாபித்தார். காலப்போக்கில் மட்டக்களப்பு, தம்பிலுவிலில் காயத்திரி தபோவனம், நாவலடியில் சப்தரிஷி வளாகம், கல்லடியில் கலாசார நிலையம், திருகோணமலையில் ஆத்மயோக ஞானசபா போன்ற புண்ணிய ஸ்தலங்களை அமைத்து பல்லாயிரக்கணக்கிலான மக்கள் மாண்புற வழிகாட்டியாக விளங்கினார். மேலும் மேலைத்தேய நாடுகளான தென் ஆபிரிக்கா, கனடா, ஜேர்மன், அமெரிக்கா, மலேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் ஆலயங்கள் அமைத்தும் தனிப்பட்ட ரீதியிலும் தமது அருள் குழந்தைகளான சீடர்கள் மூலமாக தமது பணியை தொடர செய்துள்ளார்.

தமது ஞான குருவின் உத்தரவிற்கமைய மக்களோடு தாமும் ஒருவராக இருந்து தாம் பெற்ற உயர் சித்திகளை பணம், பொருள், புகழுக்காக பயன்படுத்தாது மிகவும் எளிய முறையிலேலே வாழ்ந்து வந்தார்.

முருகேசு சுவாமிகள் 1974ஆம் ஆண்டு உலக ஆன்மீக நாடாளுமன்றத்தில் 179 நாடுகளின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பல்வேறு துறைகளில் டொக்டர் பட்டங்கள் கிடைத்தது மட்டுமல்லாது 'மகா அவதார்', 'பிரம்மரிஷி', 'ஆதி மகா பரம்ம குரு', 'ஞகத் குரு' போன்ற மிகப்பெரும் ஆன்மீக பட்டங்களுக்கு சொந்தக்காரராகவும் திகழ்ந்தார்கள்.

சற்குரு தேவர் முருகேசு சுவாமிகள் 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பாரதத்திலே மகா சமாதி அடைந்தார்.  நுவரெலியா ஸ்ரீ காயத்திரி பீட வளாகத்திலுள்ள தியான மண்டபத்தில் ஜீவசமாதி அமைய பெற்றுள்ளது.

சித்தர்கள் தமது ஸ்தூல உடலோடு செயல்படுவதை விட ஜீவசமாதியில் சூட்சுமமாக இருந்து அதிகமாகவே செயல்படுவார்கள் என்பது உண்மை. அவ்வாறே சற்குரு தேவர் ஜீவசமாதியில் இருந்த வண்ணம் தம்மை நாடி வருவோரின் தேவைக்கேற்ப பொருள் வேண்டுபவர்களுக்கு பொருளையும் அருள் வேண்டுபவர்களுக்கு அருளையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

மாதம் தோறும் நடைபெறும் பௌர்ணமி மற்றும் விஷேட பூஜைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து பலன் பெற்று செல்கின்றார்கள். இம்மாதம் 26ஆம் திகதி நடைபெறவிருக்கும் சற்குரு தேவரின் 77ஆவது ஜயந்தி குருபூஜை என்பன மிகவும் பக்தி பூர்வமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் சங்காபிஷேகம், குரு பூஜை, பஜனை, அருளுபதேசம், மற்றுத் மகேஸ்வர பூஜை என்வனவும் நடைபெறவுள்ளன.

மேலும் தம்பிலுவில் காயத்திரி தபோவனம், நாவலடி சப்தரிஷி வளாகம், திருகோணமலை ஆத்ம யோக ஞானசபா மற்றும் உலகின் பல பாகங்களிலும் வாழும் சற்குரு தேவரின் அருள் மாணவர்கள், சீடர்கள் மூலமாகவும் விஷேட பிரார்த்தனைகள், அன்னதானம் என்பனவும் நடைபெறவுள்ளன.

மெய்யண்பர்கள் இப்புண்ணிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு எம்மை எல்லாம் வழி நடத்தி வரும் சற்குரு முருகேசு மஹரிஷிகளின் பரிபூரண ஆசிகளை பெற்று இகபர சுகங்களோடு பெருவாழ்வு வாழ்வோமாக.


  Comments - 0

  • kuanthan Friday, 30 March 2012 08:44 PM

    முருகசு சுவாமிகள் பற்றி பல தகவல்கள் எம்மால் தரமுடியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--