2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

எமில் காந்தனுக்கு எதிரான வழக்கு: ‘நகலை வழங்கத் தயார்’

Thipaan   / 2017 மே 24 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராடா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், பிரதிவாதிகள் தரப்பால் கோரப்பட்ட ஆவணங்களை நீதிமன்றப் பதிவாளரூடாக வழங்கத் தயார் என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கடகொட, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (23) அறிவித்தார். 

2006ஆம் ஆண்டு டிசெம்பர் 6ஆம் திகதி தொடக்கம் 2009ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதிவரை, ராடா (புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி முகவரகம்) நிறுவனத்தில் அரச பணமான,

124 மில்லியன் ரூபாயை மோசடி செய்தமை தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.  

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டிரான் அலஸ், எல்.ரீ.ரீ.யின் நிதி சேகரிப்பாளரான எமில் காந்தன் மற்றும் ராடா நிறுவனத்தின் இரண்டு பணிப்பாளர்களான டொக்டர் ஷெஹான் சாலிய விக்கிரமசூரிய, ஜயந்த டயஸ் சமரசிங்க ஆகியோருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.  

இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி முன்னிலையில் நேற்று (23) எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனது  சேவைபெறுநருக்கு எதிரான ஆவணங்களின் அசல் பிரதியை வழக்குத் தொடுநர், தமக்கு வழங்கவில்லை என்றும் நகல் பிரதிகளே வழங்கப்பட்டுள்ளன எனவும் டிரான் அலஸ் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நளின் லதுவஹெட்டி கூறினார்.  

அத்துடன், அட்டவணைப்படுத்தப்பட்ட கணினிச் சாட்சியத்தையும் பிரதிவாதிகள் தரப்பு பரிசீலனை செய்யச் சந்தர்ப்பம் தரவில்லை எனவும் வழக்குரைஞர் கூறினார்.  

இது தொடர்பில் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கடகொட, இந்த வழக்குடன் தொடர்புடைய அசல் ஆவணங்கள் தம்மிடம் இல்லை எனவும் நகல் ஆவணங்களே உள்ளனவெனவும் அதன் பிரதிகளே, பிரதிவாதிகள் தரப்புக்கு வழக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். தம்மிடம் உள்ள நகல் ஆவணங்களை நீதிமன்றப் பதிவாளரூடாக வழங்கத் தயார் எனவும் கூறினார்.  

திருமணம் ஒன்றுக்காக, 3ஆவது பிரதிவாதி இலண்டனுக்குச் செல்ல வேண்டியுள்ளதாகவும் அதற்கு அனுமதிக்குமாறும், அவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சாலிய விக்கிரமசூரிய கோரியதுடன், திருமண அழைப்பிதழையும் மன்றில் சமர்ப்பித்தார்.  

அந்த அழைப்பிதழைப் பார்த்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், வெளிநாடு செல்ல அனுமதிப்பதற்கு தமது ஆட்சேபணையைத் தெரிவித்ததுடன், விசா விண்ணப்பம் மற்றும் இதர ஆவணங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு கட்டளையிடுமாறு, நீதிபதியிடம் கோரினார்.  

இது தொடர்பான ஆவணங்களை, ஜூன் மாதம் 6ஆம் திகதி சமர்பிக்குமாறும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூலை 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .