ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்துத் தொடர்
08-06-2012 11:45 PM
Comments - 2       Views - 1784
இன்று இரவு முதல் ஆரம்பிக்க இருக்கும் ஒரு கால்பந்துத் திருவிழா பற்றிய தகவல்கள், செய்திகள், தரவுகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக இணைய வாசகர்களை சர்வதேச ரீதியில் ஈர்த்துள்ள தமிழ்மிரர் வாயிலாக உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.

ஐரோப்பியக் கால்பந்துக் கிண்ணம்
உலகின் மூன்றாவது மிகப் பெரும் சர்வதேசக் கால்பந்துத் தொடர் இது. உலகக் கிண்ணம், ஒலிம்பிக் கால்பந்துத் தொடர்களுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய அந்தஸ்து பெற்ற கால்பந்துத் தொடராகக் கருதப்படுகின்ற இந்த ஐரோப்பிய கிண்ணக் கால்பந்தாட்டத் தொடர் 1960ஆம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் விளையாடப்பட்டு வருகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையாடப்பட்டு வரும் இத்தோடர் இம்முறை போலந்து - உக்ரெய்ன் ஆகிய நாடுகளால் கூட்டாக நடத்தப்படுகிறது. பதினான்காவது தடவையாக இடம்பெறும் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை இவ்விரு அணிகளும் ஒரு தடவை தானும் கிண்ணம் வென்றதில்லை என்பதுடன், இவை போட்டித்தொடரை நடத்தியதும் இல்லை என்பது முக்கியமானது.


முதல் இரண்டு போட்டித் தொடர்களும்
UEFA European Nations Cup (யூஈஎஃப்ஏ ஈரோபியன் நேஸன்ஸ் கப்) என்ற பெயரால் அழைக்கப்பட்டன; 1968ஆம் ஆண்டு இடம்பெற்ற மூன்றாவது தொடர் முதல் இதன் பெயர் தற்போதைய பெயரான  UEFA Euro (யூஈஎஃப்ஏ ஈரோ) என்று அழைக்கப்பட்டு வருகிறது.

பதினாறு நாடுகள் விளையாடிவரும் இத்தொடர் அடுத்த முறை (2016) பிரான்சில் நடைபெறுவது முதல் 24 நாடுகள் விளையாடும் தொடராக மாறவுள்ளது.

இதுவரை நடைபெற்ற தொடர்களில் ஜெர்மனியே அதிக தடவை கிண்ணம் வென்ற நாடாக உள்ளது. மூன்று தடவைகள் ஜெர்மனியால் ஐரோப்பிய கிண்ணம் வெல்லப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெய்ன் ஆகியன தலா இரு தடவைகள் வென்றுள்ளன.

நடப்பு சாம்பியனாகவும் தற்போதைய உலக சாம்பியனாகவும் இருக்கின்ற ஸ்பெய்ன் அணிக்கே இம்முறையும் கூடுதல் வாய்ப்புக்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

(ஐரோப்பியக் கிண்ணம் - இதற்காகத் தான் இத்தனை நாடுகள் மோதல்)

2010ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற உலகக் கிண்ணத்தில் வெற்றிபெற்ற ஸ்பெய்ன் அணியின் வீரர்கள் பத்துப் பேர் இந்த ஐரோப்பியக் கிண்ணத் தொடரிலும் இடம்பெறுகிறார்கள் என்பது சுவாரஸ்யமான விடயமாகும்.

உலகக் கிண்ண இறுதியிலே ஸ்பெய்னிடம் போராடித் தோற்றிருந்த நெதர்லாந்து அணியும் இம்முறை கவனிக்கப்படவேண்டிய அணியாக இருக்கிறது.

2010ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து 2011 நவம்பர் வரை நடந்த தெரிவுப்போட்டிகளின் மூலம் 51 ஐரோப்பிய நாடுகளில் இருந்து பதினான்கு நாடுகள் தெரிவு செய்யப்பட்டன. போட்டிகளை நடத்தும் இரு நாடுகளும் நேரடியாகத் தெரிவாகின.

2007ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளை நடத்தும் நாடுகளைத் தெரிவு செய்வதற்கான போட்டியில் இத்தாலி, ஹங்கேரி-குரோஷியா ஆகியன இத்தொடரை நடத்த முயற்சிகளைத் தோற்கடித்து இம்முறை இரு நாடுகளிலும் உள்ள எட்டு நகரங்களில் இந்தப் போட்டிகளை நடத்துகின்றன.

Warsaw, Gdańsk, Wrocław, Poznań ஆகிய போலந்து நகரங்களிலும் Kiev, Donetsk, Kharkiv, Lviv ஆகிய உக்ரெய்ன் நகரங்களிலும் உள்ள புதிதாக மீளமைக்கப்பட்ட மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பெரிய ரசிகர் கொள்ளளவுள்ள கீவ் அரங்கிலே தான் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

(2008ஆம் ஆண்டு வெற்றியாளர்கள் & தற்போதைய நடப்பு உலக சாம்பியன்கள் ஸ்பெயின் அணி)

இன்னொரு சுவாரஸ்ய விடயம் என்னவென்றால் உக்ரெய்ன் தனது ஐரோப்பிய கிண்ண அறிமுகத்தை இவ்வாண்டிலேயே மேற்கொள்கிறது என்பது தான். சோவியத் யூனியனின் ஆளுகைக்குட்பட்ட நாடாக முன்பு விளையாடி இருந்தாலும் சுதந்திர நாடாக முதன்முறை சொந்த மண்ணிலேயே விளையாடப் போகிறது.

டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும், அயர்லாந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகும் ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறு அணிகளும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகும்.

பிரிவு A யில் போட்டிகளை நடத்தும் போலந்துடன், கிரீஸ், ரஷ்யா, செக் குடியரசு ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

பிரிவு B யில் பலம் வாய்ந்த, ஐரோப்பாவின் கால்பந்து வல்லரசுகள் என முத்திரை குத்தக்கூடிய மூன்று அணிகளான ஜெர்மனி, நெதர்லாந்து, போர்த்துக்கல் ஆகிய அணிகளுடன் முன்னாள் ஐரோப்பிய சாம்பியனான டென்மார்க்கும் இடம்பெற்றுள்ளன.

பிரிவு C யில் நடப்பு வெற்றியாளரான ஸ்பெய்ன் அணியுடன், பாரம்பரியமாகவே கால்பந்து மன்னர்களாகத் திகழும் இத்தாலி, குரோஷியா, அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

பிரிவு D யில் போட்டித்தொடரை நடத்துகின்ற அடுத்த நாடான உக்ரெய்ன், தங்களுக்கிடையில் எப்போதுமே மூர்க்கமாக மோதும் பாரம்பரிய வைரிகளான இங்கிலாந்து - பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடங்கியுள்ளன.

ஜூலை முதலாம் திகதி இடம்பெறும் இறுதிப் போட்டியில் பெறுமதிவாய்ந்த ஐரோப்பியக் கிண்ணத்தைத் தம் வசப்படுத்தவேண்டும் என்ற முனைப்போடு பதினாறு அணிகளுமே களத்தில் குதித்துள்ளன.

ஆனால் ஐரோப்பிய கால்பந்துப் போட்டிகள் என்றவுடனேயே ஞாபகம் வரும் Hooliganism எனப்படும் கால்பந்து வன்முறை தான் சிக்கலையும் தொடரின் அமைதித் தன்மை பற்றிய சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

ஆனாலும் இம்முறை தொடரின் மகுட வாசகமான "Together we are creating the future" நாம் சேர்ந்து எதிர்காலத்தை உருவாக்குவோம் என்பதற்கமைய இந்தக் கால்பந்தாட்டத் தொடர் இனிவரும் தொடர்களுக்கான நம்பிக்கையை வழங்கவேண்டும் என்பதே வீரர்களதும் ரசிகர்களதும் எதிர்பார்ப்பாகும்.

தொடர்ந்து வரும் நாட்களில் இந்தப் பக்கத்தைத் தொடருங்கள்... நாம் ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்துத் தொடரைத் தொடர்வோம்...
"ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்துத் தொடர்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (2)
Jeewa 09-06-2012 05:02 AM
நல்ல முயற்சி தொடர வாழ்த்துகள்...
Reply .
0
2
Sas 11-06-2012 07:04 AM
வாழ்த்துகள்
Reply .
0
1
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty