உலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1
16-09-2012 10:02 PM
Comments - 1       Views - 2403

ICC World Twenty20 (ஐசிசி உலக டுவென்டி டுவென்டி) என்று அழைக்கப்படுகின்ற Twenty 20 (டுவென்டி டுவென்டி) போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தொடர் இலங்கையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் சூடு பரப்பப்போகிறது.

உலகமே இங்கே விளையாடுகிறது (The world is playing) என்ற தொனியிலான வாக்கியம் மிகப் பொருத்தமாகவே நான்காவது முறையாக விளையாடப்படுகின்ற இந்த வகை (T20) உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு அமைந்திருக்கிறது.

இந்தப் போட்டித் தொடரில் பன்னிரண்டு நாடுகள் ஆண்கள் பிரிவிலும், எட்டு நாடுகள் பெண்கள் பிரிவிலும் பங்கேற்கின்றன.

உலகின் அத்தனை முக்கியமான T20 வீரர்களும் பங்கேற்கும் இந்தத் தொடர் இலங்கையில் இடம்பெறுவது இது தான் முதல் தடவை.

(பன்னிரண்டு தலைவர்களும் பளபளக்கும் கிண்ணமும்)

இதற்கு முன்னர் T20 உலகக் கிண்ணங்கள் இடம்பெற்ற நாடுகளும் அவற்றை வெற்றிகொண்ட அணிகளும்...
2007 -   தென் ஆபிரிக்கா               -  இந்தியா
2009 -   இங்கிலாந்து                       -  பாகிஸ்தான்
2010 -   மேற்கிந்தியத் தீவுகள்    -  இங்கிலாந்து

பெண்கள் பிரிவில் 2009இல் இங்கிலாந்தும் 2010இல் அவுஸ்திரேலியாவும் சம்பியனாகின.

இம்முறை புதிய சம்பியனா அல்லது பழைய மூன்றில் ஒன்றா என்ற கேள்வியுடன் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளன.

பெண்கள் பிரிவில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து என்ற பாரம்பரிய, பலம் வாய்ந்த அணிகளுடன் இம்முறை அண்மைக்காலமாக அசத்தி வருகின்ற இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் கூட சவால் விடுக்கக்கூடிய அணிகளாகத் தெரிகின்றன.

நான்கு பிரிவுகளாக உள்ள ஆண்கள் அணிகளைக் கொஞ்சம் விரிவாக அலசுவோம்...

பிரிவு A 
இங்கிலாந்து A1
இந்தியா A2
ஆப்கானிஸ்தான்

நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், ஐம்பது ஓவர் ஒருநாள் போட்டிகளின் உலக சாம்பியன் இந்தியாவும் அடங்கியுள்ள பிரிவு.

அண்மைக்காலப் போட்டிகள், சமச்சீர்த் தன்மை இவற்றை வைத்துப் பார்க்கையில் இங்கிலாந்து - இந்தியா இரண்டுக்குமிடையில் பெரிதாக வித்தியாசம் இருப்பதாய்த் தெரியவில்லை. ஆனாலும் இந்தியாவின் துடுப்பாட்ட வலிமை உலகின் ஏனைய எல்லா அணிகளையும் விட சக்திவாய்ந்ததாகத் தெரிகிறது. கடுமையான தெரிவுப் போட்டிகளின் சவால்களைத் தாண்டி டெஸ்ட் அணிகள் பத்துடன் இந்தப் போட்டித் தொடருக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் உறுதியான அணியாகவே தெரிகிறது.

பயிற்சிப் போட்டியொன்றில் இலங்கை A அணியை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றதைப் பார்த்தவர்கள் யாரும் ஆப்கான் அணியைக் குறைத்து மதிப்பிடமாட்டார்கள்.

ஆப்கானிஸ்தான் அணி இவ்விரு பெரிய அணிகளுக்கும் சவால் கொடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்தாலும் T20 போட்டிகள் இப்படியான அதிர்ச்சியான முடிவுகளைத் தரக்கூடியவை எனினும்,  இத்தொடரில் ஓர் அதிர்ச்சி முடிவை ஆப்கானிஸ்தான் தரும் எனப் பெருமளவில் நம்ப முடியாது.

இங்கிலாந்து
நடப்பு சாம்பியன்...


கெவின் பீற்றர்சன் இல்லாமல் வருவதால் கொஞ்சம் துடுப்பாட்டப் பலம் குறைந்திருந்தாலும் கீஸ்வெற்றர், மோர்கன் ஆகியோர் நம்பி இருக்கக் கூடியவர்கள். புதியவர்கள் பயர்ஸ்டோவ் மற்றும் பட்லர் நம்பிக்கை தருகிறார்கள்.

பந்துவீச்சுக்கு அணித் தலைவர் ப்ரோட், ஸ்வான் மற்றும் ப்ரெஸ்ணன் ஆகியோர் உறுதியாகத் தெரிகிறார்கள். சகலதுறை வீரர் ரவி போபராவின் அண்மைக்கால பெறுபேறுகள் கவலை அளிக்கின்றன.

கவனிக்கக் கூடிய இளம் வீரர்கள் - ஜேட் டேர்ன்பக் மற்றும் ஜோஸ் பட்லர்

இந்தியா

அண்மைக்கால T20 சறுக்கல்கள் சந்தேகம் தந்தாலும் IPL மற்றும் Champions League மூலம் உலகின் அனுபவம் வாய்ந்த T20 அணியை உருவாக்கி இம்முறை கிண்ணம் வெல்லக் கூடிய அதிக வாய்ப்புள்ள மூன்று அல்லது நான்கு அணிகளுள் ஒன்றாக தோனியின் அணி விளங்குகிறது.

T20 உலகக் கிண்ணம் மற்றும் ஒருநாள் உலகக் கிண்ணம் வென்ற தோனி மேலும் ஒரு கிண்ணத்தை மகுடமாக மாற்றிக்கொள்ளக் காத்திருக்கிறார்.

துடுப்பாட்டமே இந்தியாவின் மிகப்பெரும் பலம்.

விராட் கொஹ்லியின் சிறந்த தொடர்ச்சியான ஓட்டக் குவிப்பு இந்தியாவுக்கு மிகப்பெரும் பலம். கூடவே எந்தப் போட்டியையும் மாற்றக் கூடிய சேவாக், மீள் வருகையுடன் தன்னை மீண்டும் நிரூபிக்கக் காத்திருக்கும் யுவராஜ் சிங், இன்னும் கம்பீர், தோனி, ரெய்னா என்று பலர் அடங்கிய நட்சத்திரத் துடுப்பாட்ட வரிசை.

சாகிர் கானும் அஷ்வினும் நம்பகமான இரு பந்துவீச்சாளர்கள்.

மீண்டும் அணிக்குள் வந்துள்ள இர்பான் பதானின் கடைசி இரு போட்டிகளின் பந்துவீச்சும் அதில் அவர் காட்டிய புது வகைப் பந்துகளும் அபாரம். முதல் தடவையாக இந்திய T20 அணிக்குள் வந்துள்ள பாலாஜியும், மீண்டும் அணிக்குள் வந்துள்ள ஹர்பஜனும் அழுத்தங்களைத் தாண்டவேண்டி இருக்கும்.

கவனிக்கக் கூடிய இளம் வீரர்கள் - வாய்ப்புக் கிடைத்தால் - டிண்டா மற்றும் திவாரி.

ஆப்கானிஸ்தான்

கடும் முயற்சியாலும் அணி ஒற்றுமையாலும் வேகமாக முன்னேறி வரும் அணி.  பல நட்சத்திரங்கள் இப்பொழுதே இந்த இளைய அணியில்.

அணித்தலைவர் நோவ்ரோஸ் மங்கள், கரீம் சாடிக், ஹமிட் ஹசன், சட்றான் (மூன்று பேர் இதே பெயரில் இருக்கிறார்கள்), ஸ்டநிஸ்காய் என்று கவனிக்கக் கூடிய பலர் இருக்கிறார்கள். ஒரு வெற்றி மிகப் பெரும் நம்பிக்கையை விதைக்கக் கூடியது.

பிரிவு B
அவுஸ்திரேலியா B1
மேற்கிந்தியத் தீவுகள் B2
அயர்லாந்து

இந்த உலகக் கிண்ணத்தின் அதிக வாய்ப்புள்ள அணி (Favorites) என்று குறிப்பிடப்பட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகளும், எல்லாவிதமான கிரிக்கெட் வகைகளிலும் பிரகாசித்தாலும் இன்னும் T20 போட்டிகளில் தடுமாறி வருகின்றது என்று அழுத்தம் மற்றும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் அவுஸ்திரேலியாவும் அதைவிடக் கொஞ்சம் மட்டுமே தரப்படுத்தலில் கீழே இருக்கின்ற அயர்லாந்து அணியும் அடங்கியுள்ள சுவாரஸ்யமான பிரிவு இது.

அயர்லாந்து கடந்த ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்துக்கு கொடுத்த அதிர்ச்சியை அவுஸ்திரேலியாவுக்கு இம்முறை கொடுக்க ஆர்வமாக இருக்கிறது.

அவுஸ்திரேலியா

வோர்னர், வொட்சன், ஹசி சகோதரர்கள் என்று வரிசை கட்டிய துடுப்பாட்ட நட்சத்திரங்களும், கட்டுப்பாடாகப் பந்துவீசக் கூடிய திறமையான பந்துவீச்சாளர்களும் மிகச் சிறந்த களத்தடுப்பு வீரர்களையும் கொண்ட அணி. ஆனாலும் கீழ் மத்திய வரிசை இணைப்பும் முக்கிய நேரங்களில் இருபது ஓவர்களுள் தடுமாறும் இயல்பும் இவர்களைக் காலை வாரி விட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த உலகக் கிண்ணத்தின் வயது மூத்த வீரராக விளையாடும் சுழல் பந்துவீச்சாளர் பிரட் ஹொக்கை அவுஸ்திரேலியா மிக அதிகமாக நம்பி இருக்கிறது. ஆனால் வொட்சன் - வோர்னரின் ஆரம்பம் தான் இவர்களுக்கு அதி முக்கியம். புதிய தலைவர் ஜோர்ஜ் பெய்லிக்கு இது ஓர் அக்கினிப் பரீட்சை.

கவனிக்கக் கூடிய இளம் வீரர்கள் - பட் கமின்ஸ் மற்றும் மிட்ச் ஸ்டார்க்.

மேற்கிந்தியத் தீவுகள்

கிட்டத்தட்ட மூன்று தசாப்தத்துக்குப் பிறகு Favorites என்ற அடை மொழியுடனும் (சிலவேளை அது அழுத்தமாகவும் இருக்கலாம்) நட்சத்திர அணிவகுப்புடனும் களம் காண்கிறது முன்பு கிரிக்கெட்டை ஆண்ட அணி.

சமியின் சிறப்பான உந்துதலை வழங்கும் வழிநடத்தலில் T20 போட்டிகள் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அவற்றிலெல்லாம் கலக்குகின்ற மேற்கிந்திய நட்சத்திரங்களான கிறிஸ் கெய்ல், கெய்ரோன் பொல்லார்ட், சுனில் நரேன், ட்வெய்ன் ஸ்மித், ட்வெய்ன் பிராவோ என்று பலர் இருக்கும் பரபரப்பு அணி.

போதாக்குறைக்கு மார்லன் சாமுவேல்ஸ், டரன் பிராவோ, அன்றே ரஸல் என்று வளர்ந்துவரும் பல குறிப்பிடத்தக்க வீரர்களும் இருக்கிறார்கள்.

பந்துவீச்சும் பரவாயில்லை... ராகம் - எட்வேர்ட்ஸ் மற்றும் ராம்போல்.

கவனிக்கக் கூடிய இளம் வீரர்கள் - சாமுவேல் பத்ரி மற்றும் ஜோன்சன் சார்ல்ஸ்.

கெயில் எனும் சூறாவளி சுழன்றடித்தால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதலாவது T20 கிண்ணம் நிச்சயம். அவர் சறுக்கினாலும் கூட, நரேனும் ஏனையவர்களும் இருக்கிறார்கள். இம்முறை இளம் வீரருக்கான விருது வென்ற நரேன் மீது மிகுந்த எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன.

அயர்லாந்து

அதிர்ச்சி ஒன்றைத் தரக் காத்திருக்கும் தரமான வளர்ந்து வருகின்ற அணி. திடமான தலைமையும் திறமையான வீரர்களும் என்று அணி நல்லதொரு கலவை. ஓட்டங்கள் குவிக்க தலைவர் போட்டர்பீல்ட், ஸ்டேர்லிங், நையல் ஓ பிரையன், அடித்தாட கெவின் ஓ ப்ரியன், சகலதுறைக்கு குசாக், வைட், ஜோன்ஸ்டன், சுழலுக்கு விருது வென்ற டோக்றேல் என்று கலக்கல் அணி.

அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தான் வளர்ச்சியும் இவர்களுக்கு அழுத்தம் தருவதால் இம்முறை எப்படியாவது ஒரு தடம் பதிக்கக் காத்துள்ள அணி.

ஏனைய இரு பிரிவுகளையும் முதல் சுற்றைத் தொடர்ந்து நடைபெறவுள்ள Super Eight சுற்று பற்றிய விளக்கம் மற்றும் விடயங்களை இதே பக்கத்தில் பகுதி 2இல் எதிர்பாருங்கள்...

(இதை இம்முறை ஏந்தப் போகும் அணி எதுவோ?)


"உலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1 " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
M,.Prabu 19-09-2012 09:34 AM
உலகக் கிண்ணத்தை வெல்லும் என நான் எதிர்பார்க்கும் அணி மேற்கிந்திய மேற்கிந்தியதீவுகள், இலங்கை
Reply .
0
3
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty