2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

‘பின்பகுதியிலிருந்தே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது’

Thipaan   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

ரவிராஜ் எம்.பி பயணித்த ஜீப் வாகனத்தின் பின்பகுதியிலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனாலேயே, ரவிராஜ் எம்.பியின் பாதுகாப்பு உத்தியோகத்தரான லக்ஷ்மன் என்பவரின் உடலில், இடது பக்கமாக பின்புறத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் 65ஆவது சாட்சியாளரும் சட்ட வைத்திய அதிகாரியுமான டொக்டர் சமரநாயக்க, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை (15) சாட்சியமளித்தார். 

சிரேஸ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியாக இருந்த நடராஜா ரவிராஜ், 2006.11.10அன்று படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் நேற்றைய அமர்வு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய விசேட ஜூரி சபை முன்னிலையில், நண்பகல் ஆரம்பிக்கப்பட்டது. 

இதன்போது, பொலிஸ் அதிகாரியும் 38ஆவது சாட்சியாளருமான காமினி செனரத் ஹேவாவிதாரணவிடம், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.

கே: நீங்கள், பொலிஸ் திணைக்களத்தில் இணைந்தது எப்போது? 

 1989ஆம் ஆண்டு. 

கே: எத்தனை வருடங்களாகப் பொலிஸில் பணியாற்றுகிறீர்கள்? 

27 வருடங்களாக. 

கே: நீங்கள், இலங்கையின் எந்தெந்த இடங்களில் பணியாற்றியுள்ளீர்கள்? 

கொழும்பு, அநுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, தற்போது யாழ்ப்பாணம். 

கே: யாழ்ப்பாணத்தில் என்ன பதவி வகிக்கின்றீர்கள்? 

யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகத்தில், பிரதான பொலிஸ் பரிசோதகராக. 

கே: கொழும்பில் எந்தெந்த இடங்களில் பணியாற்றியுள்ளீர்கள்? 

கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி, பொரளை, மருதானை 

கே: பொரளை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய காலப்பகுதி? 

2005இலிருந்து 2011ஆம் ஆண்டுவரை. 

கே: பொரளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது, ரவிராஜ்
எம்.பியின் படுகொலை தொடர்பில் அறிந்திருந்தீர்களா? 

ஆம். 

கே: எப்போது தகவல் கிடைத்தது? 

(தகவல் புத்தகத்தைப் பார்த்து கூறவா எனக் கேட்டதற்கு, அனுமதி வழங்கப்பட்டது) 2006.11.10 

கே: என்ன நேரம் இருக்கும்?  

முற்பகல் 8.44. 

கே: தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலையத்திலிருந்து, சம்பவ இடத்துக்கு எத்தனை மணிக்குப் பயணித்தீர்கள்? 

முற்பகல் 8.45க்கு. 

கே: எந்த இடத்துக்கு, யாருடன் சென்றீர்கள்? 

மாதா வீதிக்கு, பொலிஸ் அதிகாரிகளான பண்டுல, மைத்திரி ரத்ன, சந்தவர்தன ஆகியோருடன். 

கே: சம்பவம் நடந்த இடத்துக்குச் செல்லும் போது என்ன நேரம்? 

முற்பகல் 9 மணி. 

கே: நீங்கள் 9 மணிக்கு எந்த இடத்தில் இருந்தீர்கள்? 

பொலிஸ் நிலையத்திலிருந்து, சந்தி தாண்டி, டி.எஸ். சேனநாயக்க மாவத்தையூடாகச் சென்று, கனத்த சுற்றுவட்டத்தில் திரும்பி எல்விட்டிகல மாவத்தைக்குச் சென்றோம். அதிலிருந்து 50 மீற்றர் தூரத்திலேயே மாதா வீதி உள்ளது. 

கே: கனத்தை என்றது, பொரளை கனத்தையையா? 

ஆம். 

கே: ஏற்கெனவே போயுள்ளீர்களா? 

ஆம். 

கே: மாதா வீதி கனத்தைக்கு அருகிலா உள்ளது? 

ஆம், எல்விட்டிகல மாவத்தையின் இடதுபுறமாக. 

கே: போகும் போது எதாவது சம்பவம் இடம்பெற்று முடிந்திருந்ததா? 

மோட்டார் வாகனமொன்று இரண்டு பாதைக்கும் (மாதா வீதிக்கும் எல்விட்டிகல மாவத்தைக்கும்) இடையில் இருந்தது. 45 பாகைக்கு திரும்பியிருந்தது. 

கே: ஜீப் வாகனமா, இலக்கத்தைக் கூற முடியுமா? 

ஆம், டபிள்யூ.பி ஜே.ஈ 1289 லான்ட் குரோசர் பிராடோ. 

கே: நிறம்? 

மரூன். 

கே: ேதம் ஏற்பட்டிருந்ததா? 

கண்ணாடிக்கும் வாகனத்தின் வாகனத்தின் உடலுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தது. 

கே: ஜீப் எனக் கூறினீர்கள், டபிள்யூ.பி ஜே.ஈ 1289 இலக்கமுடைய அந்த வாகனத்தில் ஏதாவது பார்த்தீர்களா, இரத்தக்கறை காணப்பட்டதா? 

அதிகமான இரத்தக்கறை காணப்பட்டது.  

கே: எந்த இடத்தில்?  

முன்பக்க ஆசனத்தில். 

கே: இன்னொரு வாகனத்துக்கும் வெடி பட்டிருந்ததாகக் கூறியிருந்தீர்கள்? 

30 அடி தூரத்தில் இருந்தது. 

கே: ஜீப்பின் எந்தெந்தப் பகுதிகளில் தோட்டாக்கள் துளைத்திருந்தன? 

ஜீப்பின் முன் கண்ணாடி, வலது நடுக் கண்ணாடி, வலது பின் கண்ணாடி, இடது நடுக்கண்ணாடி மற்றும் வாகனத்தின் சில பகுதிகளில். 

கே: ஜீப்பைக் கண்டதன் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய வேறேதும் பொருளைக் கண்டீர்களா? 

ஆம், கறுப்பு நிறப் பையினும் ரி 56 ரகத் துப்பாக்கி இருந்தது. 

கே: பை எங்கே இருந்தது? 

மாதா வீதியிலிருந்து எல்விட்டிகல மாவத்தைக்குத் திரும்பும் போது இடது பக்க ஓரத்திலுள்ள நடைபாதையில் இருந்தது. 

கே: பையில் விசேடமாக ஏதும் இருந்ததா? 

ஆம், ரி 56 ரக துப்பாக்கியின் ஒரு பகுதி உள்ளேயும் மற்றொருபகுதி வெளியேயும் இருந்தது. 

கே: பையைக் கையில் எடுத்துச் சோதித்தீர்களா? 

இல்லை, அப்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு வந்து விட்டனர். 

கே: பையின் அளவு நீளம் எவ்வளவு இருக்கும்? 

இரண்டு அடி இருக்கும். 

கே: அதன் நிறம்? 

கறுப்பு. 

கே: அதில் ஏதும் விசேட அம்சம் இருந்ததா? 

ஞாபகமில்லை.  

அவரிடம் பையைக் காட்டலாமா என நீதிபதியிடம் அனுமதிகேட்டதன் பின்னர் பை வழங்கப்பட்டது. பையின் இடது புறத்தில் பக்கமாக துளையொன்று காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.  

கே: பையைத் தவிர சம்பவத்துடன் தொடர்புடைய வேறேதும் பொருட்கள் இருந்தனவா? 

வெடிக்காத நிலையில் 3 தோட்டாக்கள் இருந்தன. 

கே: நீங்கள், சம்பவ இடத்துக்குச் சென்றபோது, வேறு யாராவது பொலிஸார் இருந்தனரா? 

இல்லை. 

கே: அரச அதிகாரிகள் யார் யார் வந்திருந்தனர்? 

குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அரச பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரி, சொகோ ( குற்றச் செயலுடன் தொடர்புடைய ஆதாரங்களைச் சேகரிக்கும் அதிகாரிகள்) ஆகியோர் வந்திருந்தனர். 

கே: அவர்கள் அந்த இடத்திலிருந்து என்னென்ன கொண்டு சென்றனர்? 

ரி 56 ரக துப்பாக்கியை பையுடன் கொண்டு சென்றதுடன், தோட்டாக்களையும் கொண்டு சென்றனர். 

கே: அந்தப் பகுதியில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அலுவலகம் உள்ளதா? 

ஆம். 

கே: சம்பவ இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில்? 

200 மீற்றர். 

கே: பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு? 

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலிருந்து 100 மீற்றர் தூரத்தில். 

கே: பொலிஸ் போக்குவரத்துப் பிரிவைத் தாண்டியபின் வீதி பிரிகிறதா? 

வலது பக்கமாகப் பிரியும் வீதி ஹவ்வொக் இடது பக்கமாக ரொய்சிஸ் வீதி.  

கே: மாதா வீதி முடியும் இடத்தில் யூ வளைவு உள்ளதா? 

ஆம். 

2ஆவது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரசிக்க பாலசூரிய, 3,4ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, ஜூரி சபையினர் ஆகியோர் தாம் குறுக்குக் கேள்விகளைக் கேட்கவில்லை என அறிவித்ததையடுத்து, 42ஆவது சாட்சியாளரான, குற்றப் புலனாய்வுப் பிரிவின் புகைப்படப்பிடிப்பாளர் தஸநாயக்க அழைக்கப்பட்டு, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அவரிடம் கேள்விகளைக் கேட்டார். 

கே: உங்களுக்கு ஞாபகமா, ரவிராஜ் எம்.பி மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்? 

ஆம். 

கே: எப்போது? 

2006.10.11 அன்று, எல்விட்டிகல மாவத்தையிலுள்ள மாதா வீதியில், ரவிராஜ் எம்.பி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் படம் எடுக்கச் சென்றேன். 

கே: உங்களை அந்த இடத்துக்குச் செல்லுமாறு யார் உத்தரவிட்டது? 

எனது பிரிவின் தலைமை அதிகாரி. 

கே: எந்த இடத்துக்குப் போனீர்கள்? 

பொரளை, எல்விட்டிகல மாவத்தைக்கு. 

கே: எல்விட்டிகல மாவத்தையில் எந்த இடத்தில்? 

மாதா வீதி சந்திக்கு. 

கே: மாதா வீதி, எல்விட்டிகல மாவத்தையில் இணையும் இடமா? 

ஆம். 

கே: அந்த இடத்தில் ஏதாவது சம்பவம் இடம்பெற்றிருந்ததா? 

ஆம். 

கே: என்ன அது? 

ரவிராஜ் எம்.பி, துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டிருந்தார். 

தான், ரவிராஜ் எம்.பியின் ஜீப்பை படம் பிடித்ததாகவும், மாதா வீதியின் நடைபாதையில், கறுப்புநிற பையினுள் இருந்த துப்பாக்கியையும் படம் பிடித்ததாகவும் அவர் கூறினார். அவரிடம், புகைப்பட்ட அல்பத்தை காண்பித்த சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அதில் எத்தனை படங்கள் உள்ளன எனக் கேட்டதற்கு, அல்பத்தை வாங்கி பக்கங்களை எண்ணிப் பார்த்துவிட்டு, 35 படங்கள் உள்ளதெனக் கூறினார். 

2ஆவது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரசிக்க பாலசூரிய, 3,4ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, ஜூரி சபையினர் ஆகியோர் தாம் குறுக்குக் கேள்விகளைக் கேட்கவில்லை என அறிவித்தனர். 

இதனையடுத்து, 41ஆவது சாட்சியாளரும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கமெராக் கலைஞரை சாட்சியமளிக்க அழைப்பதற்கு சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், நீதிபதியிடம் அனுமதிகோரியபோது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், அவரின் சாட்சியம் தேவைப்படாது கூறினர். 

பின்னர் சட்ட வைத்திய அதிகாரியை சாட்சியமளிக்க அழைக்குமாறும், கமெரா கலைஞரிடம் நாளை சாட்சியம் பதியலாம் எனவும் நீதிபதி கூறியதையடுத்து, 65ஆவது சாட்சியாளரான டொக்டர் சமரநாயக்கவிடம், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். 

கே: நீங்கள், ரவிராஜ் எம்.பியின் பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்த லக்ஷ்மன் என்பவரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்துள்ளீர்கள், அது எப்போது? 

2006.11.10 

கே: அவரது உடலில் எத்தனை துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன? 

10 காயங்கள் இருந்தன. 

கே: 10 காயங்கள் எனக் கூறினீர்கள், அவை தொடர்பில் கூறமுடியுமா? 

4 தோட்டாக்கள் உடலை துளைத்துக்கொண்டு வெளியேறியுள்ளன. 4 தோட்டாக்கள் துளைத்துள்ளன. 2 தோட்டாக்கள் உடலினுள்ளே காணப்பட்டன. 

கே: என்ன வகையான துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் என கூறமுடியுமா? 

ரைபிள் வகைத் துப்பாக்கியால். ஏனெனில், அவ்வாறான துப்பாக்கியால் சுடப்பட்டால், காயத்தைச் சுற்றி வளையமொன்று காணப்படும். அதன்பின்னர், தோட்டாவைக் கொண்டு அதை உறுதிசெய்தோம். 

கே: எவ்வளவு தூரத்தில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கூற முடியுமா? 

அதைச் சரியாகக் கூறமுடியாது. ஆனால், குறைந்த தூரமாக இருக்கும். 

கே: மரணத்துக்கான காரணம் என்ன? 

ரைபிள் வகைத் துப்பாக்கியால் சுட்டமையால், மார்புப் பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஏற்பட்ட மரணம். 

கே: உயிரிழந்த நபரின் எந்தப் பகுதியில் அதிகளவு தோட்டாக்கள் இருந்தன? 

இடதுபக்க பின்புறமாக, 3 தோட்டாக்கள் உள்ளே சென்றிருந்தன. 

கே: உயிரிழந்தவரின் இடது தாடையில் காயம் இருந்ததா? 

இடது தாடையில் காயம் இருந்தது. 

கே: காயங்களைக் கொண்டு, எவ்வளவு தூர இடைவெளியிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது என கூறலாமா? 

அதைக் கூறுவது கடினம். 

கே: குறைந்த இடைவெளியிலிருந்து சுடப்பட்டிருக்கலாமா, அதற்கான சாத்தியம் உள்ளதா? 

ஆம், சாத்தியம் உள்ளது. 

எத்தனை அடிக்கு இடையில் இருந்திருப்பார்? 

மிகக் குறைந்த இடைவெளியிலேயே இருந்திருப்பார். 

எந்தப் பக்கத்திலிருந்து சுடப்பட்டுள்ளார்? 

இடது பின்புறமாக காயங்கள் காணப்படுவதால், பின்புறம் இருந்தே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எவ்வளவு நேரத்துக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கும்? 

துரித நேரத்துக்குள் இடம்பெற்றிருக்கும். 

எத்தனை மணிக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது? 

2006.11.10 பிற்பகல் 3.45க்கு. 

இதனையடுத்து, 2ஆவது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரசிக்க பாலசூரியவும் 3,4ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும், ஜூரி சபையினரும் தாம் குறுக்குக் கேள்விகளைக் கேட்கவில்லை என அறிவித்ததையடுத்து விசாரணைகள் முடிவுற்றன. 

முதலாவது சாட்சியாளரான மனம்பேரிகே சம்பத் பிருதிவிராஜ், தமது சாட்சியத்தின் போது, யுத்த நிறுத்த காலத்தில் புலிகளின் முகாம்களைத் தாக்கியதாக சாட்சியமளித்திருந்தார் எனவும் அக்காலத்தில் யுத்தநிறுத்தம் நிலவியது என்பதற்கான ஆதாரங்களை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து சமர்ப்பிக்க வேண்டுமா என, பிரதிவாதிகளின் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன கேள்வியெழுப்பியதற்கு, எதிர்காலத்தில் அது தொடர்பில் அறிவிக்கப்படும் என, நீதிபதி கூறினார். 

அத்துடன், 41,51,64ஆம் சாட்சியாளர்களை, இன்று வெள்ளிக்கிழமை (16) மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணைகளை இன்று வரை ஒத்திவைத்தார்.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--