2021 மே 06, வியாழக்கிழமை

ஐந்து ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கம் 'அசையாது'

Kogilavani   / 2016 ஜூலை 22 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

தற்போதைய அரசாங்கம், இன்னும் 5 ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கம் என்ற கருத்திட்டத்தின் கீழ் செயற்படுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று உறுதிபடத் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில், தனது விஜயம் தொடர்பாக நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தி உரையாற்றும் போதே, இந்தக் கருத்தை வெளியிட்டார்.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் நேற்றுக் காலை 10:30 மணிக்கு ஆரம்பமான சபை நடவடிக்கைகளில், சபாநாயகரின் அறிவிப்புகளைத் தொடர்ந்து, வாய்மொழிமூல விடைக்கான வினாக்கள் இடம்பெற்றன. அதனையடுத்து, நிலையியற் கட்டளை 23ஃ3இன் கீழான கேள்விகள் இடம்பெற்றன. இதில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சம்பந்தமான கலந்துரையாடல் நீடித்து இடம்பெற்ற போது, அது கருத்துத் தெரிவித்த பிரதமர், பின்னதாக தனது விஜயம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

'தற்போதைய தேசிய அரசாங்கம், இன்னும் 5 ஆண்டுகளுக்குப் பதவியில் இருக்கும். அதில் எந்தவிதச் சந்தேகங்களும் இல்லை' எனத் தெரிவித்தார்.

வரவு - செலவுத் திட்டத்தைத் தொடர்ந்து, தற்போதைய அரசாங்கம் கவிழ்ந்துவிடும் எனச் சிலர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் ரணில்,  இந்த அரசாங்கமானது தொடர்ந்து முன்செல்வது உறுதி எனத் தெரிவித்தார்.

முன்னதாகத் தனது உரையில், சிங்கப்பூர் விஜயம் தொடர்பான தகவல்களை பிரதமர் பகிர்ந்தார். அங்குவைத்து, சிங்கப்பூர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களையும் இலங்கைத் தூதுக்குழு சந்தித்துக் கலந்துரையாடியதாகவும், இலங்கையில் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான உதவிகளை நல்குவதாக சிங்கப்பூர் தரப்பிடமிருந்து உறுதிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தனது விஜயத்தின் போது, கண்டி, கொழும்பு, ஹம்பாந்தோட்டை உள்ளடங்கிய பொருளாதாரப் பாலத்தை உருவாக்கும் தனது திட்டம் தொடர்பாக, சிங்கப்பூர் தலைவர்களுக்கு விளக்கமளித்ததாகத் தெரிவித்த பிரதமர், மாநகர அபிவிருத்தித் திட்டம், தென் மாகாணத்தின் சுற்றுலாத்துறை வலயங்கள் ஆகியன தொடர்பாகவும் உரையாடியதாகத் தெரிவித்தார்.

மாநகரத் திட்டத்துக்கு 40 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட முதலீடு தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஹம்பாந்தோட்டையின் பொருளாதார வலயத்துக்காக 10 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

தவிர, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு சிங்கப்பூர் பிரதமருக்கு விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த உரையின்போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த கீதா குமாரசிங்கவுடனும், பிரதமர் சுவாரசியமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். அவை நேரத்தின்போது, கீதா குமாரசிங்கவைச் சுற்றி எவருமே காணப்படாத நிலையில், அவர் தனியே காணப்பட்டார். அதனைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அவர் விரும்பினால் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள முடியுமெனத் தெரிவித்தார். அதன்போது இருவருமே மாறி மாறித் தங்களது தரப்புகளை வெளிப்படுத்தியதோடு, ஒரு கட்டத்தில், 'உங்கள் காலத்தில் நீங்கள் செய்யாதவற்றை நாம் செய்கிறோம்' என பிரதமர் தெரிவித்தார். அவ்வாறான அபிவிருத்திகள் இடம்பெறவில்லை என கீதா குமாரசிங்க எம்.பி தெரிவிக்க, தெற்குப் பகுதியில் சுற்றுலா வலயங்கள் உட்பட அபிவிருத்திகளை மேற்கொண்டால், 'அரசாங்கத்துடன் இணையத் தயாரா?' என பிரதமர் கேட்டார். தொடர்ந்தும் இருவரும் உரைiயாடல்களில் ஈடுபட, 'அபிவிருத்தி செய்தால் இணைவீர்களா? இணைவீர்களா? இணைவீர்களா?' என, பிரதமர் கேட்டுக் கொண்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .