2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

’கறுப்பு ஆடுகளுக்கு மன்னிப்பே கிடையாது’

George   / 2017 ஜூன் 07 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்  

“எந்தச் சீருடை அணிந்திருந்தாலும் என்ன இலட்சினை அணிந்திருந்தாலும் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது. கறுப்பு ஆடுகளைத் தண்டித்து இராணுவத்தினரின் நற்பெயரைப் பாதுகாப்போம்” என  நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.  

ஒன்றிணைந்த எதிரணியால், நாடாளுமன்றில் நேற்றுக் கொண்டுவரப்பட்ட ஜெனீவா தீர்மானம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே அவர் இதனைக் கூறினார்.

ஜெனீவா தொடர்பில் பொறுப்புக்கூறக்கூடிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் தொடர்ந்து உரையாற்றிய மங்கள, “இலங்கையின் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடும் எந்தவோர் ஒப்பந்தத்திலும் நாங்கள் கையெடழுத்திடவில்லை. நாடாளுமன்றத்தில் பொய் சொல்வதை நிறுத்துங்கள்.  

“இலங்கை மீது விசாரணை ஆரம்பமாகியபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். இது நாட்டின் அதிர்ஷ்டம் என்று சொல்லவேண்டும். நாம் எடுத்த முயற்சிகளால், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இலங்கைக்கு ஆதரவாக 48 நாடுகள் ஒத்துழைப்பு வழங்கின.  

“நாங்கள் சர்வதேசம் உருவாக்கிய பாதையில் செல்லவில்லை. நாங்கள் உருவாக்கிய பாதையில்தான் அவர்கள் வருகின்றனர். ஒரு நாட்டிலுள்ள ஏதாவது ஒரு பிரிவினருக்கு தீங்கு இழைக்கப்பட்டால், அது தொடர்பில் சர்வதேசம் தலையிட்டுக் கேட்கமுடியும். சர்வதேச சட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடு என்ற ரீதியில் அதனைச் செய்ய முடியும்.  

“சர்வதேசத்தின் விரல் எம்மீது பட எமக்கு விரும்பமில்லை என்பதால், உள்நாட்டு விசாரணையை முன்னெடுத்து, எமது பிரச்சினைக்கு நாங்களே தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளோம்.  

“இராணுவத்தின் நற்பெயரை நாங்கள் சர்வதேச ரீதியில் உயர்த்துவோம். இராணுவத்தின் நற்பெயரைப் பாதுகாப்போம். எவ்வளவு சிறப்பான இராணுவம் என்றாலும், அதில் கறுப்பு ஆடுகள் உள்ளன. அவ்வாறான கறுப்பு ஆடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, ஏனைய இராணுவத்தை நாங்கள் பாதுகாப்போம்.  

“வெள்ளவத்தை உள்ளிட்ட பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம் இளைஞர்களைக் கடத்தியவர்கள், ஊடகவியலாளர்களைக் கடத்திக் கொலை செய்தவர்கள், தாக்குதல், வெள்ளைவான் கடத்தலுடன் தொடர்புடையவர்களை மன்னிக்க முடியாது. அவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்” என்றார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .