2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’5,000 ஏக்கர் விடுவித்துள்ளோம்; 3,000 ஏக்கர் விடுவிக்கப்படும்’

George   / 2017 மே 26 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

“நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கு மாகாணங்களில், 5ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் மூவாயிரம் காணிகளை விடுவிக்கவுள்ளோம்’ என, சபை முதல்வரும், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (25) 23/2 கீழான கேள்வி நேரத்தின்போது, திருகோணமலை மாவட்ட  காணிப் பிரச்சினை குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, அவர் இதனைக் கூறினார்.  

அவர் தொடர்ந்து கூறுகையில், “மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 5ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், 3ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த நாளும் இது தொடர்பில் கேள்வி எழுப்புவது எமக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், மக்கள் மத்தியில் நாங்கள் காணி விடுவிப்பதில்லை என்ற அபிப்பிராயம் ஏற்பட்டு விடும்” என்றார்.  

இது குறித்து முன்னதாக பதிலளித்த காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, “திருகோணமலை மாவட்டத்தில் புளியங்குளம் கிராம சேவகர் பிரிவிலுள்ள செல்வநாயகபுரம், ஆனந்தபுரி, தேவநகர், நித்தியபுரி, லிங்கநகர் ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.  

2017 பெப்ரவரி 26ஆம் திகதி, செல்வநாயகபுரத்தில் காணிக்கச்சேரியை நடத்தியிருந்தோம். அதில், 46 பேர் கலந்து கொண்டதுடன், காணிகளுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள மாகாண காணி ஆணையாளருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  

ஆனந்தபுரி கிராமத்தில் 55 ஏக்கர் காணியும், நித்தியபுரி கிராமத்தில் 35 ஏக்கர் காணியும் கையகப்படுத்தப்படவுள்ளன. அதற்கான கட்டளைகளை காணி அபகரிப்புச் சட்டத்தின் 4ஆம், 2ஆம் உறுப்புரைகளுக்கு அமைய பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.  

அதுதவிர, தேவநகர், நல்லூர் ஆகியவற்றில் எதிர்காலத்தில் காணிக் கச்சேரிகளை நடத்தி அப்பிரதேச மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.  

வௌ்ளிக்கிழமை நான் காணி அமைச்சராக கடமையேற்கவுள்ளேன். பின்னர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது ஆலோசனைக்கு அமைய, எமது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்த இலட்சக்கணக்கானவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் தேசிய செயற்றிட்டத்தை விரைவில் அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .