2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

சிற்றியைத் தோற்கடித்தது லிவர்பூல்

Editorial   / 2019 நவம்பர் 11 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் மன்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில், அவ்வணியை லிவர்பூல் தோற்கடித்தது.

இப்போட்டியின் ஆறாவது நிமிடத்திலேயே மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரர் இல்கி குன்டோகனின் மோசமான பந்து நகர்த்தலைப் பயன்படுத்தி, கோல் கம்பத்திலிருந்து 21 மீற்றரிலிருந்து லிவர்பூலின் மத்தியகளவீரரான பபினியோ பெற்ற கோலின் மூலம் லிவர்பூல் முன்னிலை பெற்றது.

எவ்வாறெனினும், குறித்த கோல் பெறப்படுவதற்கு முன்பாக லிவர்பூலின் பெனால்டி பகுதிக்குள் வைத்து அவ்வணியின் பின்களவீரர் ட்ரென்ட் அலெக்ஸான்டர்-அர்னோல்டின் கையில் பந்து பட்டிருந்தபோதும், காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பில் பெனால்டி வழங்கப்பட்டிருக்காததோடு, மேற்குறிப்பிட்ட கோல் செல்லுபடியானதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பதிலடி வழங்குவதற்கு மன்செஸ்டர் சிற்றி முயன்ற நிலையில், கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து தலையால் முட்டிக் கோல் பெறும் வாய்ப்பை அவ்வணியின் முன்களவீரர் ரஹீம் ஸ்டேர்லிங்க் தவறவிட்டிருந்தார்.

அந்தவகையில், சக பின்களவீரர் அன்டி றொபேர்ட்சனிடமிருந்து பெற்ற பந்தை போட்டியின் 13ஆவது நிமிடத்தில் லிவர்பூலின் முன்களவீரர் மொஹமட் சாலா கோலாக்க, தமது முன்னிலையை லிவர்பூல் இரட்டிப்பாக்கியது.

இந்நிலையில், முதற்பாதி முடிவடைவதற்கு மூன்று நிமிடங்களிருக்கையில், சக மத்தியகளவீரர் கெவின் டி ப்ரூனே வழங்கிய பந்தை மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான சேர்ஜியோ அகுரோ கோல் கம்பத்துக்கு வெளியே செலுத்தியிருந்தார்.

இதேவேளை, இரண்டாவது பாதியின் ஆறாவது நிமிடத்தில் அணித்தலைவரும் சக மத்தியகளவீரருமான ஜோர்டான் ஹென்டர்சன் வழங்கிய பந்தை, பாய்ந்து தலையால் முட்டி லிவர்பூலின் முன்களவீரரான சாடியோ மனே கோலாக்கிய நிலையில் தமது முன்னிலையை 3-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அதிகரித்தது.

இந்நிலையில், சக பின்களவீரரான அஞ்செலினோவிடமிருந்து பந்தைப் பெற்ற மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான பெர்ணார்டோ சில்வா போட்டியின் 78ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றபோதும் இறுதியில் 1-3 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி தோல்வியடைந்தது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு  நடைபெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, அன்ட்ரயாஸ் பெரைரா, மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் சார்பாகப் பெறப்பட்ட கோலை லூயிஸ் டங்க் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .